என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன.
- சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர்.
திருப்பூர்:
வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 'ஹர்கர் திரங்கா எனப்படும் இல்லம்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ் மூவர்ண கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி https://harghartiranga.com என்ற இணையதளத்தில் தங்கள் சுய புகைப்படங்களைப் (செல்பி) பதிவேற்Independence Day, National Flag, சுதந்திர தினவிழா, தேசிய கொடிகள்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை எழுச்சியாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் தயாராகி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பட்டொளி வீசி பறக்க தேவையான தேசியக்கொடி தயாரிக்கும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன. தற்போது சுதந்திர தினத்திற்காக திருப்பூர், கோவையில் தேசியக்கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் மோகன் கூறியதாவது:-
சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாட உள்ளது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரியவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி அளித்ததால் ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேசியக்கொடிகளை விற்பனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம். 9-ந்தேதி முதல் தேசியக்கொடிகளை ஏற்றலாம் என்பதால் ஆர்டர் பெற்ற தேசியக்கொடிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
பல பின்னலாடை நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தேசியக்கொடியை தைத்து வருகின்றன. 10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.25 முதல் ரூ.250 வரை தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
- போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
மதுரையை சேர்ந்த கும்பல் ஒன்று நெல்லை மாவட்டம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு காரில் வருவதாகவும், அந்த கும்பல் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் நேற்று இரவு மூன்றடைப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான போலீசார் மூன்றடைப்பை அடுத்த நெடுங்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கருப்பு நிற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்தபோது அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்திற்கான ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த வாகனத்தின் பதிவெண் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது காரின் பின்புற இருக்கைக்கு அடிப்பகுதியில் ஒரு பெட்டியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனே அந்த பணத்தை போலீசார் எடுத்து பார்த்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த 3 பேரையும் பிடித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் பதுக்கி வைத்திருந்த கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 42), அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு சங்கர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டிய நகர் 5-வது தெருவை சேர்ந்த சீமை சாமி ஆகியோர் என்பது தெரியவந்தது.
இந்த கும்பல் சமீப காலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளது.
அதாவது ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறி நம்பவைத்து பணத்தை வாங்கி கொண்டு திரும்ப ரூ.2 லட்சம் வழங்கும்போது அதில் ஒரு கட்டு பணத்தில் மட்டும் நல்ல நோட்டுகளை வைத்துவிட்டு மற்ற கட்டுகளில் கள்ள நோட்டுகளை வைத்து வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த வகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பண மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டதும், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று அங்கும் மோசடியில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அசல் நோட்டுகள் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் 8 செல்போன்கள், அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அந்த கும்பலுக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்பவர்கள் யார்? அவர்களாகவே எந்திரம் மூலம் அச்சடிக்கிறார்களா? அப்படியானால் எங்கு வைத்து அதனை செய்கிறார்கள்? இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக முக்கிய பிரமுகர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
- நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் இன்று வினாடிக்கு 38, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிக அளவில் வருவதால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 24-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.
மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர்.
- திரைமறைவில் நடந்த ‘உள்ளடி’ வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தி.மு.க. சார்பில் புதிய மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் தி.மு.க.-கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேர் இருப்பதால், ராமகிருஷ்ணன் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.
இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்த உள்ள 55 கவுன்சிலர்களில் ஒருவர் மட்டும் வரவில்லை. மீதமுள்ள 54 பேர் ஓட்டு போட்டதில் ஒரு ஓட்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 30 ஓட்டுகளும், பவுல்ராஜூக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கவுன்சிலர் 23 வாக்குகள் பெற்றது கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தலைமையின் உத்தரவையும் மீறி கவுன்சிலர் பவுல்ராஜிக்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், திரை மறைவுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்கள், கவுன்சிலர்களின் உள்ளடி வேலைகள் நடைபெற்றுள்ளது என்கின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் இருக்கும் கவுன்சிலர்கள் அனைவருமே அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். இவர்களில் 90 சதவீதம் கவுன்சிலர்கள் தற்போது வரை அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே இருந்த மேயர் சரவணனும் இவருக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் மேயர் ஆனதிலிருந்து அவருக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கும் மோதல் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் மாநகராட்சி பணிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தலையீடு அதிகரிக்க தொடங்கியதால் சரவணன் அவரை எதிர்த்து களத்தில் இறங்கினார். இதனால் மேயரை செயல்பட விடாமல் செய்யும் நோக்கில் கவுன்சிலர்களை அப்துல் வஹாப் தவறாக வழிநடத்தியதாக பலரும் புகார் கூறினர்.
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதீத நெருக்கடியின் காரணமாக சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அப்துல் வகாப்புக்கு ஆதரவான கவுன்சிலரை மேயராக அறிவித்தால் மட்டுமே மீண்டும் மாநகராட்சி கூட்டங்கள் பிரச்சனை இன்றி நடைபெறும் என்று தி.மு.க தலைமை கருதியது.
இதன் காரணமாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவரது ஆதரவாளரான ராமகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை ஆதரித்து வாக்களித்தால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று சில கவுன்சிலர்கள் பேரம் பேசியதால் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவோடு இரவாக 'வைட்டமின் ப' வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ராமகிருஷ்ணனை தேர்வு செய்யும் பட்சத்தில் அப்துல் வஹாப்பின் தலையீடு மாநகராட்சியில் மீண்டும் எழுந்து விடும் என்றும், நமக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் எல்லாம் கிடைக்காது என சில கவுன்சிலர்கள் கருதினர்.
இதனால் போட்டி வேட்பாளர் யாராவது நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுமார் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்ததாகவே தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தான் கவுன்சிலர் பவுல்ராஜ் தனித்து போட்டியிடவே அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வாக்களித்தது தெரியவந்தது. தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கனவோடு காத்திருந்த கவுன்சிலர்களில் சிலரும், தங்கள் சமுதாயத்தை புறக்கணிப்பதாக கருதும் சில கவுன்சிலர்களும் பவுல்ராஜூக்கு வாக்களித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இது தவிர முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கானின் ஆதரவு கவுன்சிலர்கள், மாநகர செயலாளருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் என சிலரும் பவுல்ராஜூக்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடும் எனவும், இதனால் பவுல்ராஜ் 23 வாக்குள் பெற்றிருக்கிறார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்லைக்கு வந்த அமைச்சர் கே. என்.நேரு கவுன்சிலர்களை அழைத்து யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஒரு கருத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டிருந்தால் நிச்சயமாக போட்டி இருந்திருக்காது எனவும், மேயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்றும் கவுன்சிலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஆனால் கட்சி தலைமையும் முறையாக ஆலோசிக்காமல் மேயர் வேட்பாளராக நிறுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். இனிவரும் மாநகராட்சி கூட்டங்கள் கண்டிப்பாக ஒரு யுத்த களமாக காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கவுன்சிலர்கள் சிலர் கூறுகின்றனர்.
கவுன்சிலர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பின்னரும், போட்டி இல்லாமல் ஒரு மனதாக மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா என அமைச்சர்களையும், அப்துல் வகாப எம.எல்.ஏ.வையும் கட்சி தலைமை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் பவுல்ராஜூக்கு பின்னால் இருந்து செயல்பட்ட கவுன்சிலர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடிக்க தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- மழையில் நனைந்த நெல்மணிகள் அனைத்தும் முளைக்கும் தருவாயில் உள்ளது.
- நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம், குடுமியான் குப்பம், அங்குசெட்டிப் பாளையம், சிறுவத்தூர், ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல் சேமக் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பண்ருட்டி பகுதியில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சேமக்கோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 மூட்டை நெல்மணிகள் நனைந்து சேதம் அடைந்தது.
தற்போது மழையில் நனைந்த நெல்மணிகள் அனைத்தும் முளைக்கும் தருவாயில் உள்ளது. இதனைக் கண்டு செய்வதறியாமல் தவித்த விவசாயிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் பாராமல் உழைத்து நெல்மணிகளை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இடத்தில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பாதுகாப்பான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
சேலம்:
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.75அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 83.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2063 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 4500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.
- பார் கிலோ ரூ.87ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,400-க்கும் சவரனுக்கு ரூ.560- குறைந்து ஒரு சவரன் ரூ.51,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் கிலோவுக்கு ரூ4 ஆயிரம் குறைந்து பார் கிலோ ரூ.87ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும்.
- உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திருமானூர் அருகே இலந்தைக் கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் திருமாவளவன் எம்.பி.மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக திருமாவளவன் எம்.பி. நேரில் ஆஜரானார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கணக்காணவர்களை பலி வாங்கி இருக்கிறது. இதுவரையில் 377 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. நூற்றுக்கனக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும். மறுவாழ்வுக்காகவும், மறு கட்டுமானத்திற்காகவும் போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் .
வரும் 9-ந் தேதி கேரள மாநில முதல்-மந்திரியை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்க இருக்கிறோம்.
தமிழக அரசு அரசு பணியாளர்களின் பணி ஓய்வுக்கான வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி ஓய்வு பெறும் வயதை நீடிப்பதால் புதிய இளைய தலைமுறைக்கான வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்று கருத்து உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது உடனடியாக தமிழக அரசும் அவர்கள் தங்கி இருக்கிற இல்லத்துக்கு பாதுகாப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது.
அண்மையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேகாலவை சந்தித்து, அரியலூரில் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், ம.தி.மு.க.வின் சார்பிலும் கோரிக்கை வைத்திருக்கிறோம் .
தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் மேகதாதுவில் அணையை கட்ட முடியாது அதற்கு வாய்ப்பில்லை. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- இ-மெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை :
பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது
இந்நிலையில், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுவும், டி.ஜி.பி சங்கர் ஜிவால் பெயரில் போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் இ-மெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு தகுந்த தீர்வு காண கோரி மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மீனவர்கள் கைது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள், கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள்.
- மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக முடிக்க வேண்டும்.
வேலூர்:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு துயரசம்பவம் இதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து அழ வைத்த ஒரு நிகழ்வு. அதைக்கூட மத்தியஅரசு பேரிடராக அறிவிக்க மாட்டோம் என்றால் அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா? அல்லது கல்லா? என்று தெரியவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள். அதனால் தான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் இல்லை. பூகோளம் பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி தவறாக பேசுவார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது.
மேகதாது அணை பிரச்சனையில் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி விட்டார்கள் என்று பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை விவரம் தெரியாமல் குற்றம் சாட்டி உள்ளார். அவர் விவரம் தெரிந்தவர் என்று நான் இதுவரை நினைத்திருந்தேன். தற்போதுதான் அண்ணாமலை விவரம் இல்லாதவர் என்று தெரிகிறது. வயநாடு நிலச்சரிவு பேரிடரை பிரதமர் மோடி பார்வையிடாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
- வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி சியாமளா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மண்டித்தெரு அருகே உள்ள சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.






