என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன.
- பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன. இதில் குறிப்பாக இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது வனப்பகுதி உள்ளே பெட்டமுகிலாளம் மற்றும் கொடகரை ஆகிய மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் நிற்பது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று அய்யூர் வன அலுவலகத்தில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே கம்பீரமாக நின்றது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து வந்த வழியில் திரும்பி சென்றனர். சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் மலை கிராமங்களுக்கு சென்ற பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் அந்த ஒற்றை காட்டு யானை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட கிராம மக்கள் தங்களது ஊர்களுக்கு அந்த சாலை வழியாக சென்றனர். தினந்தோறும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதும், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கிராம மக்கள் சந்திப்பதும் வாடிக்கையாக உள்ளது.
- பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன.
- பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன. அங்கு பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் மல்லி, மானகசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்து பட்டாசு தயாரிப்பை தொடங்கினர். முதலில் வெடிமருந்து கலவை பணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் இருந்து பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது. அதனை தொழிலாளர்கள் இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த விநாடி அருகில் இருந்த கட்டிடங்களிலும் தீ பரவி 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது.
இந்த விபத்தில் புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யாராவது இந்த விபத்தில் சிக்கி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு தயாரிப்பு மற்றும் விபத்து தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தாலும் இன்னும் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. உரிமையாளர் மட்டுமே ஆலையை நடத்த வேண்டும் என விதிமுறைகளை விதித்தாலும் உரிமையாளர் மற்ற நபரிடம் ஒப்பந்தத்திற்கு விடுவதும் அரங்கேறி வருகிறது.
இதுபோன்று விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த நடிகரும், மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ்கோபி நேற்று சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அவர் ஆய்வு செய்த மறுநாளே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர்.
- இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்தனர்.
அரக்கோணம்:
கடலூர் மாவட்டம், மதியனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரோகினி (வயது 56), தமிழ்ச்செல்வி (44). இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பை சென்றனர்.
பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு, விருதாச்சலத்தில் இறங்குவதற்கு ரெயில் டிக்கெட் எடுத்து மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் ஏறி பயணம் செய்தனர்.
அதே பெட்டியில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர். இதற்கிடையில், சோலாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது.
அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதை தெரியாமல் இருவரும் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு, என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.
இந்நிலையில், சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்ச்செல்விக்கு லேசாக மயக்கம் தெளிந்து உள்ளது. அப்போது, ரெயில் சக பயணிகளிடம் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை.
என்னுடன் வந்த உறவினர் இன்னும் மயக்கத்திலேயே உள்ளார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லையே என கூறியபடி அலறி கூச்சலிட்டார்.
மேலும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரெயிலில் இருந்த சக பயணிகள் உதவியுடன் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.
அப்போது, மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 6-வது பிளாட் பாரத்தில் வந்து நின்றது.
பின்னர் ரெயிலில் ஏறி மயங்கிய நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினியை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்கில் இருந்த டீயை கொடுத்து இருவரையும் மயக்கமடையச் செய்து அவர்களிடமிருந்து சுமார் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வடமாநில ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களில் உள்ள கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
- 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- 180 நபர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை:
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் 414 இளநிலை வரைதொழில் அலுவலர்கள், 33 உதவிப் பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III, 4 தணிக்கை உதவியாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திலும், 45 இளநிலை உதவியாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர்கள், 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 180 நபர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் ரா.செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ஆர். சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும் என 31 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கு திடீர் சோதனையின் போது பணம் கைப்பற்றப் பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும் என 31 பேர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக மேற்கண்ட லஞ்ச புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டிருந்த மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனடியாக சரிசெய்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு மாவட்டத்தில் லஞ்சம் கேட்டு பெற்றதாக 5 வழக்குகளும், திடீர் சோதனையின் போது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் மொத்தம் ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டு அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களின் குறைகள் உடனே தீர்த்து வைக்கப்ப டும்.
மேலும் பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார்களை கொடுக்கலாம். அதன்படி 94982 15697 மற்றும் 94986 52159 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தெரிவித்தார்.
- விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது.
- மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது.
இதையொட்டி கட்சியின் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பற்றியும் கட்சித் தலைவர் விஜய் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனைகளை செயல்படுத்தி வருகிறார்.
விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி பிரபல அரசியல் கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்துவதற்கு விஜய் திட்ட மிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாநாடு நடத்து வதற்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய இடங்களை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொண்டர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருச்சியில் மாநாடு நடத்துவது அனைத்து மாவட்டத்தினருக்கும் பொதுவாக இருப்பதால் பெரும்பாலான தொண்டர்கள் திருச்சியில் மாநாடு நடத்த வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து திருச்சி ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 'சாலை' என்ற ஊரில் பல ஏக்கர் பரப்பளவில் காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையொட்டி மாநாடு மைதானத்தை கட்சி முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
- தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது.
- தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.
சென்னை:
இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
எனவே, இந்த பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக தாக்கல் செய்திருந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது. சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி பேரணி செல்வதை தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.
பேரணியில் பங்கேற்பவர்கள் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. பேரணி ஏற்பாட்டாளர்கள், வழித்தடம் குறித்த தகவல்களை காவல் துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி சென்னையில் பாஜகவினர் பைக் பேரணி செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு சுற்றி கொண்டிருந்ததை கண்டு மாணவர்கள் கூச்சலிட்டனர்.
- தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள குட்டைக்குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில், இக்குளத்தை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குளத்தில் ஆகாய தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் மாலையில் வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று சுற்றி கொண்டிருந்ததை சில மாணவர்கள் கண்டு கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவியர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் பகுதியை விட்டு கதகதப்பான இடத்தை நோக்கி பாம்பு தஞ்சமடைந்துள்ளது.
எனவே நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி குட்டைக்குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்களின் விலையை அரசு உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
* பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பாட புத்தகங்களின் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது.
* 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி போட்டி தேர்வுக்கு தயாராவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
* விலைவாசி உயர்வால் சிரமப்படும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
* அரசு பாடத்திட்டத்தில் பயிலும் தனியார் பள்ளி மாணவரிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
* பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
* பாட புத்தங்களின் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில்கனமழை பெய்தது.
- நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இடி-மின்னலுடன் களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கனமழை பெய்ததால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. களக்காடு-சிதம்பராபுரம் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
களக்காடு பகுதியில் 8.2 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 20 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை 3-வது நாளாக கனமழை பெய்தது. அங்கு 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரம், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் ஓடியது.
மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. தென்காசி சாலையில் அமைந்துள்ள புதூர், சீதபற்பநல்லூர், வெள்ளாளன்குளம் பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு வெடிப்பு விழுந்து கிடந்த நிலையில் 3 நாட்களாக தொடர் மழையால் ஓரளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மாநகரில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் வண்ணார்பேட்டை, சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரவில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது.
அதீத மின்னல் காரணமாக மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் வைத்திருப்போர் கடும் அவதி அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் இருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்துக்கு உள்ளே நுழையும் வாசலில் குளம்போல் மழை நீர் தேங்கியது. டவுன் சாப்டர் பள்ளி மைதானம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ்பகுதி ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பாளையில் 9 சென்டி மீட்டரும், நெல்லையில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்தவரை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அணைகள் நீர்மட்டம் உயரவில்லை. மணிமுத்தாறு அணை பகுதியில் 19.8 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 15 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 11 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 113.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 359 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 117.45 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறில் 69.40 அடி நீர் இருப்பு உள்ளது. கொடுமுடியாறில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 39 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 30 மில்லி மீட்டர், காக்காச்சியில் 14 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பரவலாக பெய்தது. செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக தென்காசியில் 10 மில்லி மீட்ரும், செங்கோட்டையில் 8.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்தவரை கடனா அணை, கருப்பாநதி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அணைகள் நீர்மட்டம் உயரும் அளவில் மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மணியாச்சி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கயத்தாறில் 43 மில்லிமீட்டரும், கடம்பூரில் 50 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம் பகுதியில் மதியத்திற்கு பின்னர் திடீரென கருமேகங்கள் வானில் திரண்டு கனமழை பொழிந்தது. அங்கு 39 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில் பட்டி, காயல்பட்டினம், குல சேகரப்பட்டினம், காடல்குடி, விளாத்திகுளம், வைப்பார், வேடநத்தம் என அனைத்து பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது.
- காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், வாகனங்களை வழி மறித்து உணவு இருக்கிறதா? என்று தேடுவதும் தொடர்கதை ஆகிவருகிறது.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிலர் தங்களது செல்போன்களில் யானை கூட்டத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
சிறிது நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டுயானை கூட்டம் சாலையைக் கடந்து பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
எனினும் அதே பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
- கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை வெகுவிமர்சியாக மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தையுடன் நடைபெற்றது.
இதையடுத்து தேர்த்திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து குருசாதசாமி கோவிலில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். விழாவில் அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்சங்களை காணதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் தினமும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து குருநாதசாமி கோவில்விழா இன்று பால் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த பண்டிகைக்காக 9 இடங்களில் பக்தர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன. மாடுகளை ஏற்றி வருவதற்காக 45,000 டெம்போக்களும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து 1 லட்சம் கார்களில் பக்தர்கள், வியாபாரிகள் வந்திருந்தனர்.
மேலும் 12 ஆயிரம் மாடுகள், ஆயிரம் குதிரைகள் கால்நடை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. குதிரைச் சந்தை பகுதிகளில் சூதாட்டம் உள்ளிட்ட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு தஞ்சாவூர் சாஷ்டராயூனிவர் சிட்டியில் இருந்து 5 பேர் கொண்ட டீம், ஏ, டெக்னாலஜி பயன்படுத்தி பழைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் பிக் பாக்கெட் உள்ளிட்ட வழக்குகளில் 8 பேர் கைது செய்து சறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த முறை 4 இடங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளான ராட்டணம், சாகச கிணறு, குழந்தைகள் விளையாட்டு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன். இதனால் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் அண்ணா மடுவு ஜி.எச் கார்னர், பஸ் நிலையம் ரவுண்டானா, வெள்ளப்பிள்ளையார் கோயில், வனம், கெட்டி சமுத்திரம் ஏரி பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டு போக்குவரத்தில் சிரமம் இன்றி தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்திருந்தனர்.
கடந்தாண்டு வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப் பட்டு இருந்தது. இந்த ஆண்டு அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ரவுண்டான பகுதியில் இருந்து நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இந்த மாற்றத்தினால் போக்குவரத்து நெரிசல் சற்று சரி செய்யப்பட்டது.






