search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓடும் ரெயிலில் டீயில் மயக்க மருந்து கொடுத்து 2 பெண்களிடம் நகை திருட்டு
    X

    ஓடும் ரெயிலில் டீயில் மயக்க மருந்து கொடுத்து 2 பெண்களிடம் நகை திருட்டு

    • 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர்.
    • இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்தனர்.

    அரக்கோணம்:

    கடலூர் மாவட்டம், மதியனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரோகினி (வயது 56), தமிழ்ச்செல்வி (44). இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

    உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பை சென்றனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு, விருதாச்சலத்தில் இறங்குவதற்கு ரெயில் டிக்கெட் எடுத்து மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் ஏறி பயணம் செய்தனர்.

    அதே பெட்டியில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர். இதற்கிடையில், சோலாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது.

    அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதை தெரியாமல் இருவரும் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு, என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.

    இந்நிலையில், சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்ச்செல்விக்கு லேசாக மயக்கம் தெளிந்து உள்ளது. அப்போது, ரெயில் சக பயணிகளிடம் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை.

    என்னுடன் வந்த உறவினர் இன்னும் மயக்கத்திலேயே உள்ளார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லையே என கூறியபடி அலறி கூச்சலிட்டார்.

    மேலும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரெயிலில் இருந்த சக பயணிகள் உதவியுடன் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

    அப்போது, மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 6-வது பிளாட் பாரத்தில் வந்து நின்றது.

    பின்னர் ரெயிலில் ஏறி மயங்கிய நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினியை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்கில் இருந்த டீயை கொடுத்து இருவரையும் மயக்கமடையச் செய்து அவர்களிடமிருந்து சுமார் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக வடமாநில ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களில் உள்ள கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    Next Story
    ×