என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தார்.
- மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்க உள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு.
- வழக்கு மீதான விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது என தொழிற்சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்ட அழைப்பை எதிர்த்து என்எல்சி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- மண் காப்போம் ஸ்டார்ட்-அப் திருவிழாவில் உங்கள் கனவுகள் மெய்பட வழி காட்டுகிறார் விஜயா மகாதேவன்.
- காஸ்மெடிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதில் இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்திருக்கிறார்.
விவசாய விளைப்பொருட்கள் உணவாக மட்டுமின்றி பல வகைகளில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறது.
இந்த நுட்பமான உண்மையை புரிந்து, அதையே வணிக வாய்ப்பாக மாற்றி சாதித்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த பெண் விஜயா மகாதேவன்.
விவசாயம் சார்ந்த காஸ்மெடிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதில் இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்திருக்கிறார்.
தனியொரு பெண்ணாக தன் வீட்டில் தொடங்கிய பயணம் இன்று 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் "வசீகரா வேதா" எனும் பெரு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
'விவசாயம் சார்ந்த சுய பராமரிப்பு பொருட்கள்' என்கிற புதுமையான சிந்தனை எப்படி வந்தது என்பது குறித்து விஜயா மகாதேவன் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,"எங்கள் நிறுவனத்தை 2017-ல் ஆரம்பித்தேன். இதன் நோக்கம் "க்ரீன் பாத்ரூம்". அதாவது காலையில் தொடங்கி இரவு உறங்க செல்லும் வரை நம் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பொருட்களான பல் பொடி, டூத் பேஸ்ட் தொடங்கி குளியல் பொடி, ஷாம்பூ, எண்ணெய் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் ரசாயனத்தால் ஆனவை.
எனவே இந்த ரசாயன பொருட்களாலும், இதை பயன்படுத்திய பின் வெளியேறும் நீராலும் மனிதர்களுக்கும் , நிலத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இச்சுழலை நம் பாரம்பரியமான வழிகாட்டுதல்கள் மூலம் மாற்ற நினைத்தோம். எனவே இயற்கையோடு இசைந்து நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதைப் போலவே நாமும் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் "வசீகர வேதா" நிறுவனம்.
அந்த வகையில், நமக்கு முந்தைய தலைமுறையினர் அவர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்த கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ, செம்பருத்தி, குப்பை மேனி போன்ற பொருட்களையே எங்கள் தயாரிப்புகளின் மூலப் பொருட்களாக வைத்திருக்கிறோம். இந்த பொருட்கள் அனைத்தையும் நாங்களே தரமான முறையில் எங்கள் விவசாய நிலத்தில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறோம்.
ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இருக்கவில்லை என்றாலும், பிறகு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். இன்று 13,000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம்.
கொரோனோ காலத்தில் தொடங்கிய தொழில் என்பதால் சமூக வலைதளத்தில் எங்கள் நிறுவனத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. ஒரு கடையை தொடங்கினால் கூட ஒரே நாளில் 100 வாடிக்கையாளர்கள் வருவது அரிது தான், ஆனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்தியதால் இன்று ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேரை சென்றடைய முடிந்திருக்கிறது." என்றார்.
இவருடைய வெற்றிக்கு இவர் பின்பற்றிய உத்திகளை தன் யூடியூப் சேனல் வாயிலாக தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்த வழிகாட்டுதல்கள் மேலும் பல விவசாயிகளை, பெண்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா"வில் பங்கேற்று பேச இருக்கிறார்.
இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
- சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "துணை முதல்வராக உதயநிதி வந்தால், வரவேற்போம், வாழ்த்துவோம். வேறு என்ன செய்ய முடியும்? அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
தலித்துகள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன். ஆனால், திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறேன்.
விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? இது சர்வாதிகாரம் என்று கூடச் சொல்ல முடியாது, கொடுங்கோன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல். கேவலமான, அசிங்கமான அரசியல் பழிவாங்கல்" என்று தெரிவித்தார்.
- 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததன்பேரின் திருச்சியில் நேற்று கைது.
- சென்னை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட் நிலையில் சிறையில் அடைப்பு.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேவநாதனை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வருகிற 28-ந்தேதி வரை (14 நாட்கள்) சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி தேவநாதன் சிறையில் அடைக்கப்படுகிறார்.
சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இநத் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். டெபாசிஸ்ட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
சுமார் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- முகமது சலீமை தற்போது பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர்.
- முகமது சலீமிடம் விசாரணை நடத்த 15 நாட்கள் அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடியில் சர்வதேச அளவில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை தற்போது பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை முகமது சலீம் கைது செய்யப்பட்டார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்த 15 நாட்கள் அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தது.
ஆனால் முதன்மை செசன்ஸ் நீதிபதி அவரை ஆகஸ்ட் 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்த நிலையில், முகமது சலீமுக்கு காவல் விதித்து உத்தரடவிடப்பட்டுள்ளது.
அதன்படி, 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
- கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர்.
- நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை வேவ்ஸ் ரைடர்ஸ் குழு இணைந்து சென்னை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு, நீச்சல் பயிற்சியளித்து வருகின்றனர்., இப்பயிற்சி பெற்றவர்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநில ஆறுகள், மற்றும் கோவாவில் நடைபெற்ற கடல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

தற்போது கின்னஸ் சாதனை பதிவிற்காக, 11வயது முதல் 30 வயது வரையிலான ஒரு பெண் உட்பட 15 பேர், கின்னஸ் சாதனை பதிவிற்காக, தற்போது கடலில் சாகச பயணம் மேற் கொண்டு வருகின்றனர்., இவர்கள் கடந்த 5ம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதி கடலில் இருந்து, சென்னை மெரினா கடற்கரை வரை 604கி.மீ தூரம் நீச்சல் சாகச பயணத்தை துவங்கினர்.

இவர்கள் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்., அவர்களை தமிழ்நாடு மீனவ பேரவை தலைவர் அன்பழகனார் மற்றும் மாமல்லபுரம் மீனவ சபையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று காலை மீண்டும் கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர். நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.
- விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
- விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார் முதல்வர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50.000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
- முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
- கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலையுண்ட செய்தி, இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா கூட்டணியின் பெண்கள் மவுனம் காப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பாஜக தமிழ்நாடு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தலைமறைவான இண்டி கூட்டணியின் பெண்ணியப் போராளிகளான திருமதி. கனிமொழி, செல்வி ஜோதி மற்றும் திருமதி. தமிழச்சி ஆகியோருக்கு,
உங்கள் இண்டிக் கூட்டணியின் ஒரு பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தின் அரசு மருத்துவமனையில், ஒரு பெண் மருத்துவர் கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?
அப்பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மேற்குவங்கமே கொழுந்துவிட்டெறிய, திராவிடத்தின் பெண்ணியப் போராளிகளான திருமதி. கனிமொழி, செல்வி ஜோதி மற்றும் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய நீங்கள் இன்னும் அமைதி காப்பது ஏன்? அதுதான் உங்கள் இண்டி கூட்டணியின் ஒப்பந்தமா?
இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் முழுக்க காயங்களுடன், அவள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலையுண்ட செய்தி, இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?
இது தற்கொலை என்று கூறி, அவசரமாக இவ்வழக்கை முடிக்க முயற்சித்த கொல்கத்தா காவல்துறைக்கு எதிராக, உங்கள் எதிர்ப்பை எப்போதுதான் தெரிவிப்பீர்கள்?

"செமினார் அரங்கிற்கு இரவில் தனியாக அவள் எதற்கு சென்றாள்?" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பழி சொல்லெறியும், மேற்குவங்க அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வருக்கு எதிராக, பெண்ணியப் போராளிகளான நீங்கள் சிறு கண்டனங்கள் கூட தெரிவிக்காதது ஏன்?
"பெண்களுக்கான சமூக நீதி வேண்டும்" என்று நீங்களெல்லாம் நரம்பு புடைக்க பேசுவது வெறும் நாடாளுமன்றத்தில் மட்டும்தானா?
அல்லது உங்கள் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலம் என்பதால், உங்கள் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டீர்களா?
குற்றம் நடந்த இடத்தில் திடீர் கட்டுமானப் பணிகளைத் துவங்குதல், குற்றம் நடந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரை வேறு கல்லூரிக்கு அவசரமாக இடமாற்றம் செய்தல் முதலிய தடயங்களை அழித்து, இக்கொலையை மூடி மறைக்க நினைக்கும் உங்கள் கூட்டணிக் கட்சியின் முதல்வருக்கு எதிராக நீங்கள் எப்போதுதான் குரல் கொடுப்பீர்கள்?
ஒருவேளை இக்கொலையில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற கேள்வி உங்கள் மனதை உறுத்தவில்லையா ?
இன்று உங்கள் கூட்டணிக் கட்சியின் மானத்தைக் காப்பாற்ற நீங்கள் காக்கும் இந்த கனத்த மௌனமானது, நாளை பல பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு நிலையத்திலும் 2 மாணவர்கள் இடம்பெற்று இருந்தனர்.
- அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
கோவை
சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சார்பில் 78 செல்வாக்கு மிக்க இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
நம் பாரதத்தின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வாழும் மெழுகு அருங்காட்சியகத்தை அமைத்து இருந்தனர். பொதுவாக மெழுகு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட மனிதரின், அசலான தோற்றத்தில் மெழுகுச் சிலைகள் செய்து வைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இந்த வாழும் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் இல்லாமல், மாணவர்களே நம் பாரத தேசத்தின் புகழ்பெற்ற நாயகர்கள் போன்று வேடமணிந்து இருந்தனர். இதில் மொத்தம் 40 நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையத்திலும் 2 மாணவர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நபர்கள் அரசியல், விளையாட்டு, பாரம்பரிய நடனக் கலை, மற்றும் கல்வி என அனைத்து துறைகளையும் சேர்ந்த வாழ்ந்து மறைந்த மற்றும் நம் காலத்தில் வாழ்கின்ற ஆளுமைகளாக இருந்தனர்.

குறிப்பாக அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், இந்திரா காந்தி ஆகிய தேசத் தலைவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்ற இசைத்துறை கலைஞர்கள், ஜி.டி. நாயுடு, சி.வி. ராமன், ஹோமி பாபா, எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் ஆகிய பெண் சாதனையாளர்கள் என 78 புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளின் தோற்றத்தில் மாணவர்கள் உடையணிந்து இந்த அருங்காட்சியகத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அருங்காட்சியகத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு நிலையத்திற்கும் முன் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. அதை அழுத்தினால் அந்த நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் குறித்த குறிப்புகளை மாணவர்கள் சொல்லும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக 'கரடி டேல்ஸ் பதிப்பகத்தின்' உரிமையாளரும், எழுத்தாளருமான ஷோபா விஸ்வநாத் கலந்து கொண்டார். இந்நிகழ்வு குறித்து அவர் கூறுகையில் "இந்த வாழும் அருங்காட்சியகம் படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மதிநுட்பமான வெளிப்பாடாக இருந்தது. இந்தப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈர்க்கக்கூடிய முயற்சியால் வரலாறு உயிர்ப்பிக்கப்பட்டு இருந்தது.
நம் பாரதத்தின் அடையாளங்களாக இருக்கும் நாயகர்கள் போன்று விரிவான விவரங்களுடன் வேடமணிந்து இருந்தது அவர்களின் அர்ப்பணிப்பை கண்கூடாகத் காட்டியது. மேலும் உரையாடும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருந்ததால், இந்த அனுபவம் கற்றுக்கொள்ளவும், ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது. என்னைப் பொறுத்த வரையில் ஆழ்ந்த கற்றல் ஆற்றலுக்கு ஒரு உண்மையான சான்றாக இது இருந்தது" என அவர் கூறினார்.
- சென்னையில் இருந்து இன்று வெளியூர் செல்வதற்கு 15 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.
- பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதலாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி நாளை அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. மறுநாள் வெள்ளிக்கிழமை ஒருநாள் அலுவலகங்களுக்கு விடுப்பு போடும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணம் செல்ல ஏற்கனவே திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டன. அரசு விரைவு பஸ்களிலும் இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
சென்னையில் இருந்து இன்று வெளியூர் செல்வதற்கு 15 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்ல 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.
வெளியூர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இன்று கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி கூறுகையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்து உள்ளார்கள்.
18-ந்தேதி வெளியூர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு வருவதற்கு அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதலாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்வது அவசியம். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க தயாராக உள்ளோம் என்றார்.
இதே போல சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களும் இன்று காலை நிலவரப்படி 70 சதவீதம் நிரம்பியுள்ளன. மாலையில் கூட்டம் அதிகரிக்கும்போது இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
- ஸ்கூட்டர் தீ பிடித்து மளமளவென எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மேல் எண்டபட்டியை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இந்நிலையில் இன்று காலை தனது நிலத்தில் பயிரிட்ட சாமந்தி பூக்களை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எடுத்து கொண்டு தருமபுரி பூ மார்க்கெட்டில் கொண்டு சென்றார்.
பின்னர் தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிய போது தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ராமக்காள் ஏரி அருகே சென்றபோது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை கண்ட வடிவேல் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி இறங்கி பார்த்தபோது ஸ்கூட்டர் மளமளவென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வடிவேல் ஸ்கூட்டரை சாலை ஓரம் நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பிடித்து எரிந்த ஸ்கூட்டர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அணைக்க முயற்சித்தனர். அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. இது குறித்து தருமபுரி டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






