என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
- லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
கிழக்கிந்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டப் பகுதியில் மழை பெய்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்திற்கு அதிக மழையை எதிர்பார்க்க முடியாது. லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகாலை யில் இருந்து லேசான மழை பெய்தது. மேக மூட்டத்துடன் மழை தூறல் இருந்தது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, கட லூர், கன்னியாகுமரி மாவட் டங்களில் மிதமான மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது சென்னையில் மேக மூட்டத் துடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றனர்.
- சிறந்த தொழிலதிபராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் எச்.வசந்தகுமார் திகழ்ந்தார்.
- உயிர் தந்தவரின் உயிர் பிரிந்து 4 ஆண்டுகள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ஹரிகிருஷ்ண பெருமாள் - தங்கம்மை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வசந்தகுமார். இவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்பட 6 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள்.
இளம் வயதில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றிய இவர், பின்னர் சிறிய மளிகை கடை ஒன்றை தொடங்கினார். ஆரம்பத்தில் மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பொருட்களை விற்று, அவற்றிற்கு தவணை முறையில் பணம் வசூலித்தார். அதன்பின்னர் படிப்படியாக முன்னேறி 1978-ஆம் ஆண்டு வசந்த் அண்டு கோ என்ற வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் மூலம் தொழிலதிபராக வெற்றிகண்ட வசந்தகுமார் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா என விரிபடுத்தி தொழில் சாம்ராஜ்யம் படைத்தார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், மாநில துணைத் தலைவராக பதவி வகித்தார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்தார். அத்துடன் நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 2006 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்.பி.யானார்.
சிறந்த தொழிலதிபராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் எச்.வசந்தகுமார் திகழ்ந்தார்.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி உடல்நலக்குறைவால் எச்.வசந்தகுமார் காலமானார்.
கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்த குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது மகன் விஜய் வசந்த் எம்.பி. அஞ்சாலி செலுத்தினர்.

இதைதொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உயிர் தந்தவரின் உயிர் பிரிந்து 4 ஆண்டுகள். மெய் விட்டு சென்றாலும் காலத்தால் அழிக்க முடியாத உங்கள் நினைவுகள் என்றும் பசுமையாய் எங்களுடன். நீங்கா நினைவுகளுடன் தந்தையின் நினைவு நாளில், அவர் வழி நடப்பதே அவருக்கு நான் செய்யும் நன்றி கடன் என்று கூறிகிறார்.
- பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
- நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.
மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் புகாரளித்த பெண்களுடன் துணை நிற்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும் துணை நிற்கிறேன்.
பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் துணை நிற்க வேண்டும்.
நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.
பெண்களே வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை எந்த நிலையிலும் சமரசம் செய்யாதீர்கள்.
No என்றால் கண்டிப்பாக No-தான் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காதீர்கள் என்று பெண்களுக்கு குஷ்பு அறிவுறுத்தி உள்ளார்.
- 55 சந்திப்புகளில் “அடாப்டிவ்” சிக்னல்கள்.
- சாலைகளில் நவீன சிக்னல்கள் அமைக்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.
மெட்ரோ ரெயில், புதிய மேம்பாலம் போன்றவற்றின் மூலம் இதனை தீர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களோடு இணைந்த ஒரு செயலாகவே மாறிவிட்டது. போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்தி நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நகரின் முக்கியமான சாலைகளில் தினமும் சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்து நிற்பதன் மூலமும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் சிக்னல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள 55 சந்திப்புகளில் "அடாப்டிவ்" சிக்னல்களை நிறுவி வருகிறார்கள். இது பழைய பாரம்பரிய சிக்னல்களை போல் அல்லாமல் தற்போதைய போக்குவரத்து நிலையின் அடிப்படையில் காத்திருப்பு நேரம் மாறும் வகையில் சரி செய்யும்.
நிலையான சிக்னல்களுடன், வாகன ஓட்டிகள் பெரும்பாலும் 60 முதல் 90 வினாடிகள் வரை அனைத்து பக்கங்களிலும் காத்திருக்க வேண்டும்.
ஆனால் புதிய 'அடாப்டிவ்' சிக்னல்கள் பரபரப்பான சாலைகளுக்கு பச்சை விளக்கை 120 வினாடிகள் வரை நீட்டிக்கலாம் மற்றும் குறைவான நெரிசல் உள்ள சந்திப்புகளுக்கு அதை 30 வினாடிகளாக குறைக்கலாம்.
பழைய மகாபலிபுரம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கிராண்ட் டிரங்க் சாலை போன்ற முக்கிய வழித்தடங்களில் 30 சிக்னல்கலை நிறுவவும், காலாவதியான 25 சிக்னல்களை மாற்றவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
தரமணி லிங்க் ரோடு-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, நொளம்பூர் மெயின் ரோடு- பாரதி சாலை சந்திப்பு ஆகிய சாலைகளில் நவீன சிக்னல்கள் அமைக்கப்படுகிறது.
சென்னை போக்குவரத்து காவல் துறையின் இந்த திட்டத் திற்கு ரூ.11 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த சிக்னல்கள் போக்கு வரத்து தேவையை மதிப்பிடு வதற்கும் காத்திருப்பு நேரத்தை கண்டறிந்து தானாகவே மாற்றுவதற்கும் வாகனத்தை கண்டறியும் சென்சார்களை பயன்படுத்தும்.
சிக்னலை மீறுவதற்கான பொதுவான காரணம் நீண்ட நேரம் காத்திருப்பது தான். இதனாலேயே வாகன ஒட்டிகள் விரக்தி அடைந்து விதிமீறலில் ஈடுபடுகிறார்கள் என்று போக்குவரத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- பேராசிரியை சாதி ரீதியாக பேசியதால் நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
- கும்பகோணம் கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ கடந்த மாதம் 18-ந்தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்தது.
பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ சாதி ரீதியாக பேசியதால் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கும்பகோணம் கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை சாதிப்பெயர் கூறி திட்டிய பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம், மாணவர்களின் தொடர் வகுப்பு புறக்கணிப்பு காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

- மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
- 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை-பெங்களூரு என 5 ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் கூறும்போது, 'நாகர்கோவில்-சென்னை எழும்பூர், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையில் இயக்கப்பட உள்ள 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது' என்றார்.
இதன்படி வருகிற 31-ந் தேதி டெல்லியில் இருந்தவாறு பிரதமர் மோடி இந்த 2 ரெயில்களையும் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். இந்த ரெயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ்க்கு அடுத்தபடியாக இந்த பாதையில் இயக்கப்படக்கூடிய வேகமான ரெயிலாக இது இருக்கும்.
தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணத்தை முடிக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
- கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
- ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார்.
கஸ்தூரி தான் குடியிருக்கும் காலண்டர் தெரு வீட்டை விற்பதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கஸ்தூரியின் வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் கஸ்தூரி கொலை வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் சென்ற வளையாபதியை காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
போலீஸ் விசாரணையில் வளையாபதி தனது நண்பரான பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதைதொடர்ந்து போலீசார் வளையாபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
- கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
- முதலமைச்சர் 17 நாள் பயணமாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போதே, முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் சி.வீ.மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.
இதை சில அமைச்சர்களே உறுதிப்படுத்தினார்கள். இந்த நிலையில், கடந்த 22-ந்தேதி காலை பரபரப்பு தகவல் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை" என்று அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி, கடந்த ஒரு மாத காலமாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருந்தது.
இதற்கு மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 17 நாள் பயணமாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தற்போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்துக்கு காரணம் வெளிவந்துள்ளது.
அதாவது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ளது. இதில், அவர் நிச்சயமாக விடுதலையாவார் என தி.மு.க. தலைமை உறுதியாக நம்புகிறது. அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
எனவே, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகியவை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நேரத்தில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்றும், முக்கிய அமைச்சர் ஒருவர் உள்பட 3 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில், திருவள்ளூர், சேலம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று தெரிகிறது.
அதனால், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
- தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள்.
- 89.27 சதவீதம் பெற்று கேரளா முதல் இடத்தில் உள்ளது.
சென்னை:
கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் உள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பங்கேற்பை எளிதாக்க குழந்தைகள் காப்பகத்திற்கான ஏற்பாடு, இருப்பிடம் அருகிலேயே பணி என்பது உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தரவு தளம், கடந்த நிதி ஆண்டில் (2023-24) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக மாநிலங்கள் வாரியான விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், 89.27 சதவீதம் பெற்று கேரளா முதல் இடத்தில் உள்ளது.
87.39 சதவீதம் பெற்று புதுச்சேரி 2-ம் இடத்திலும், 86.66 சதவீதம் பெற்று தமிழகம் 3-ம் இடத்திலும் உள்ளது. மிகவும் குறைவாக ஜம்மு காஷ்மீர் 32.16 சதவீத பங்களிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்துக்கு அதிகமான பெண்களின் பங்கேற்பினை தந்திருக்கின்றன. 50 முதல் 70 சதவீத பங்களிப்பினை 16 மாநிலங்களும், 50 சதவீதத்துக்கு குறைவான பங்களிப்பினை 14 மாநிலங்களும் வழங்கியிருக்கின்றன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
- முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன்.
முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.
ரூ.3,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இதனால் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் துரித கதியில் செயல்பட்டு வருகின்றன.
ரூ.9,99, 093 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற மூதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 நிறுவன திட்டங்களை தொடங்கி வைத்தேன் என தெரிவித்துள்ளார்.
- நடப்பாண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும்.
- தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒன்றிய அரசு மாநிலங்களிடையே திணித்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுத்து வருகிறது.
நடப்பாண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும். அப்படி விடுவிக்காத நிலையில் ஒன்றிய அரசுக்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் மாநில அரசால் எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
கல்வி முறையை சீரழிக்கிற வகையில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு பாராளுமன்ற பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். நீட் திணிப்பால் தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதையொட்டி புதிய கல்விக் கொள்கை திணிப்பினால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக உடனடியாக நிதியை விடுவிக்குமாறு ஒன்றிய பா.ஜ.க. அரசை கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
- விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் செயல்பாட்டில் உள்ளன. அதில் முதல் ஓடுபாதை 3.66 கிலோமீட்டர் நீளமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் நீளமும் உடையது.
இதில் பிரதான ஓடுபாதையான முதல் பாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு வருகின்றன. 2-வது ஓடுபாதையில் ஏ.டி.ஆர். எனப்படும் 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள், மற்றும் தனியாரின், தனி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 2 ஓடு பாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை, விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு வசதியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடுபாதையில் இருந்து, மற்றொரு ஓடுபாதைக்கு செல்ல, "டாக்சி வே"என்ற இணைப்புப் பாதைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த டாக்சி வே "பி" என்ற "பிராவோ"முதல் ஓடு பாதைக்கு நேராக செல்லாமல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்சி வேயில், வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த டாக்சிவே 'பி' யை, நேர்படுத்தும் பணிகள் நடந்தன.
தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால் தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், இரண்டு ஓடுபாதைகளும் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதையிலும் விமான சேவைகளின் எண்ணிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த பாதையில் 615 விமானங்கள் இயக்கப்பட்டன.
ஆனால் இந்த ஜூன் மாதத்தில் 952 விமானங்களாக அதிகரித்துள்ளன. வரும் மாதங்களில் 2-வது ஓடுபாதையில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படும் எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு மணி நேரத்தில், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் சென்னை விமான நிலையத்தில், இயக்கப்பட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இருப்பதோடு, விமானங்கள் புறப்பாடு, தரை இறங்குவதில் தாமதங்கள் ஏற்படாமல், விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






