search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H VasanthaKumar"

    நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என்பது குறித்து எச்.வசந்தகுமார் பதில் அளித்தார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்தநிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதையடுத்து எச்.வசந்த குமார் இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருக்கிறார். எனவே அவர் ஏற்கனவே வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளார்.

    இந்தநிலையில் புதிய எம்.பி. யாக தேர்வான எச்.வசந்தா குமார், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று வந்தார். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கன்னியாகுமரி தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றதற்காக எச்.வசந்தகுமாருக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து வெளியே வந்த எச்.வசந்த குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொள்வது என்றும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சபா நாயகர் இருக்கும்பட்சத்தில் நாளைக்கே சென்று எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து, டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறேன்”, என்றார்.

    எம்.எல்.ஏ. பதவியை எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்ய உள்ளதால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது இந்த ராஜினாமாவால் தி.மு.க. கூட்டணியின் பலம் 109 ஆக குறைகிறது. நாங்குநேரி தொகுதியை மீண்டும் தி.மு.க. ஆதரவுடன் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பாக உள்ளது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் நாங்குநேரியில் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளை தி.மு.க.வும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தி.மு.க.வினர் பேசிக்கொள்கிறார்கள். 
    கன்னியாகுமரி தொகுதியில் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் இன்று நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், தில்லை செல்வம், மகேஷ், கூட்டணி கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல், சிலம்பு சுரேஷ், வெற்றிவேந்தன், அன்வர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு வேட்பாளர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த நேரமும் தலைவர்களும், தொண்டர்களும் இங்கு வந்து என்னை சந்திக்கலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம். 6 சட்டசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள நானும் சேர்ந்து குமரி மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவோம். குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் வேண்டாம் என்று தான் நாங்கள் கூறுகிறோம். ஒருங்கிணைந்த துறைமுகம் கொண்டு வரப்படும். பெரிய துறைமுகம் அமைய 587 ஏக்கர் நிலமும், சிறிய துறைமுகம் அமைய 350 ஏக்கர் நிலமும் தேவை. நாம் ஏற்கனவே உள்ள துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மீன் பிடித்துறைமுகம் கொண்டு வர வேண்டும்.

    ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயார் என்கிறார். நானும் விவாதத்துக்கு தயார். ஆனால் அதற்கு முன்பு எனது 3 கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார். அதுபற்றி பாராளுமன்றத்தில் அவர் பேசவில்லை. சிறப்பு தீர்மானமும் கொண்டு வரவில்லை. அதற்கு அவர் என்ன முயற்சி செய்தார்? மோடி அரசு ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறியது. எத்தனை பேரின் கணக்கில் இந்த பணம் போடப்பட்டுள்ளது.

    2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர். எத்தனை பேருக்கு வேலை வழங்கி உள்ளனர். இந்த 3 கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தால் நான் விவாதிக்கத் தயார். குமரி மாவட்டத்தில் சாய்-சப் சென்டர், விமான நிலையம் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. விமான நிலையத்தை கூடங்குளத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாற்ற ஏன் முயற்சி செய்யவில்லை. எனது நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று கூறுகிறார். எங்கள் நிறுவனத்தில் 2500 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

    அகஸ்தீஸ்வரத்தில் பிறந்த என்னை வெளிநாட்டு பறவை என்கிறார். என்னை வெளிநாட்டு பறவை என்றால் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எங்கிருந்து வந்தவர்? எனது ஓட்டு கூட இங்கு தான் உள்ளது. தோல்வி பயத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு பேசுகிறார். நான் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்கள் கூட்டணி மற்றும் ஓட்டு வங்கி பலமாக உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்.

    துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது, அவரை மிரட்டவும், பழி வாங்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடந்தது. ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் 2 பாலங்கள் கட்டியதே சாதனை என்கிறார். இந்த 3 ஆண்டுகளில் நாங்குநேரி தொகுதியில் நான் பல சாதனைகளை செய்துள்ளேன். தூத்துக்குடி, சென்னை துறைமுகம் நஷ்டத்தில் இயங்குகிறது. தனிநபருக்காக இங்கு துறைமுக திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ.க்கள் வளர்ச்சியை தடுப்பதாக கூறுகிறார். அவர்கள் மாவட்டத்துக்கு வரும் அழிவை தான் தடுக்கிறார்கள். மணவாளக்குறிச்சி மணல் ஆலையை கூட இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் தான் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். தோல்வி பயத்தால் மாற்றி, மாற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுகிறார். #LSPolls #congress #congressCandidates
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 20 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த வாரம் தொகுதி பங்கீடு நடந்து முடிந்ததும் மறுநாளே தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்தது. விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இடது சாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கின.

    காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லி மேலிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஒவ்வொரு தொகுதியையும் 3 முதல் 5 பேர் பிடிவாதமாக கேட்டதால் காங்கிரஸ் வேட்பாளர்களை முடிவு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் ராகுல் தலைமையில் நடந்தது. அதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் யார்-யாரை வேட்பாளர்களாக அறிவிப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இரவு வரை இந்த ஆலோசனை நீடித்தது.

    தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படியாவது தொகுதியை பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக இருந்ததால் கடும் சவால்களுக்கு மத்தியில்தான் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிந்தது.

    இதையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி- எச்.வசந்த குமார்

    விருதுநகர்- மாணிக் தாகூர்

    திருச்சி - திருநாவுக்கரசர்

    ஆரணி-விஷ்ணு பிரசாத்

    திருவள்ளூர் (தனி)- ஜெயக்குமார்

    தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    கரூர்- ஜோதிமணி

    கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லக்குமார்

    புதுச்சேரி- வைத்திலிங்கம்


    சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதி கேட்கப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதியை ஒதுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அங்கு களம் இறங்க காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இன்று இரவுக்குள் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் தெரிய வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் செயல் தலைவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட மாட்டாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை வேட்பாளர் தேர்வின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களால் உறுதியாக கடைபிடிக்க இயலவில்லை.

    செயல் தலைவர்களில் வசந்தகுமார், விஷ்ணுபிரசாத் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை போராடி பெற்றுள்ளனர். அதுபோல திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோரும் தங்கள் தொகுதியை கடைசி வரை போராடியே இறுதி செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பால் சில தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன.

    கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை எதிர்த்து எச்.வசந்தகுமார் போட்டியிடுவதால் அந்த தொகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல தேனி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறங்கி இருப்பதும் விறுவிறுப்பை உருவாக்கி இருக்கிறது.

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தேனி தொகுதியில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

    இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அந்த தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இறக்கி விட்டுள்ளது. இது அந்த தொகுதியை பரபரப்பான தொகுதியாக மாற்றி இருக்கிறது. அ.தி.மு.க. வாக்குகளையும், ஜாதி வாக்குகளையும் ரவீந்திரநாத்தும், தங்க தமிழ்ச்செல்வனும் பிரிக்கும் நிலையில் இளங்கோவன் களம் இறங்கி இருப்பதால் வாக்குகள் எப்படி மாறும் என்பதில் அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் பிரியாது என்பதாலும் இளங்கோவன் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதாலும் அவருக்கு எதிராக நிற்கும் ஓ.பி.எஸ். மகன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கடும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேநிலைதான் திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சி தொகுதியிலும், டாக்டர் செல்லக்குமார் போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஜோதிமணி போட்டியிடும் கரூர் தொகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. #LSPolls #congress #congressCandidates
    ×