என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதிய பஸ்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எஸ்.5 ரக 150 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது.
இதை , பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 150 புதிய பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.
புதிய பஸ்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பஸ்களில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள், மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 150 பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன் பஸ்சில் ஏறி அமர்ந்து அதிலுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
- தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
மதுரை:
மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-
தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.
மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
- தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சுமார் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தி.மு.க. தற்போதும் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் தி.மு.க., மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
'ஒரே வார்த்தையில் அழைத்தோம் மத்திய ராணுவ மந்திரி நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய மந்திரிகளை வருந்தி அழைத்து, பா.ஜ.க.வுடன் சமரசம் செய்துகொண்ட ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (ஆர்.இ.டி.) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும்; தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக் கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோல் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான்.
- ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான்.
சென்னை:
மலையாள திரை உலகில் புயலை கிளப்பி வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் எதிரொலியாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மோகன் லால் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளார்கள்.
மோகன்லாலின் இந்த முடிவை குஷ்பு வரவேற்றுள்ளார். பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான். இனி சம்பவம் என்று நடந்தாலும் சரி அந்த கர்மா என்றாவது ஒருநாள் நம் தலையில்தான் விழும் என்ற பயம் வரும் என்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைத்துறையில் நிலவும் இந்த பிரச்சனையில் நிலைத்து நின்று வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டுகள். தொடரும் இந்த துஷ்பிரயோகத்தை உடைக்க ஹேமா கமிட்டி அவசியப்பட்டது. ஆனால் செய்து முடிக்குமா?
இந்த மாதிரி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, பாலியல் உதவிகளை கேட்பது, பெண்கள் காலூன்றவோ அல்லது தங்கள் வாழ்க்கையை நடத்தவோ சமரசம் செய்துதான் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.
ஒரு பெண் மட்டும் ஏன் இப்படி தவறான வழியில் தான் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களும் இதை எதிர்கொண்டாலும் வேதனையை சுமப்பது பெண்கள்தான்.
இந்த பிரச்சனை தொடர்பாக எனது மகள்களுடன் நீண்ட நேரம் உரையாடினேன். பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் பச்சாதாபத்தையும், புரிதலையும் கண்டு வியந்தார்கள்.
இன்று பேசுவதா? நாளை பேசுவதா? என்பது முக்கியமல்ல. பேசுங்கள். உடனடியாக பேசுவதுதான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவும், திறமையாக விசாரணை நடத்துவதற்கும் உதவும்.
அவமானம் வருமோ என்ற பயம். 'ஏன் செய்தாய்' என்ற கேள்விகளால் தயக்கம் வரும். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு அந்நியராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எங்கள் ஆதரவு உண்டு.
பாதிக்கப்பட்டவர்கள் ஏன் முன்பே வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழலாம். அப்போது அவருடைய சூழ்நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.
ஒரு பெண்ணாகவும், தாயாகவும் பார்க்கும்போது இத்தகைய காயங்கள், சதையில் மட்டுமல்ல ஆன்மாவிலும் ஆழமாக பதிந்து போகின்றன.
இந்தக் கொடூரச் செயல்கள் நமது நம்பிக்கை, அன்பு, வலிமை ஆகியவற்றின் அடித்தளத்தையே உலுக்குகின்றன. ஒவ்வொரு தாய்க்கும் பின்னால், வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு விருப்பம் இருக்கிறது, அந்த புனிதம் சிதைந்தால், அது நம் அனைவரையும் பாதிக்கிறது.
என் தந்தையின் துஷ்பிரயோகம் பற்றி பேச இவ்வளவு நேரம் எடுத்தது ஏன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் முன்பே பேசியிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு நடந்தது, என் தொழிலை உருவாக்குவதற்கான சமரசம் அல்ல.
நான் விழுந்தால் என்னைப் பிடிக்க வலிமையான கரங்களை எனக்குத் தருவதாக கருதும் நபரின் கைகளில் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்.
அங்குள்ள அனைத்து ஆண்களிடமும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான். பல பெண்கள் உங்கள் வளர்ப்பில் இன்றியமையாத பாத்திரங்களை வகிக்கிறார்கள்.
உங்களை வடிவமைக்கிறார்கள்-உங்கள் தாய்மார்கள், சகோதரிகள், அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள். உங்கள் ஒற்றுமை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கலாம், நீதியும் கருணையும் வெல்லும். எங்களுடன் நிற்கவும், எங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்கு வாழ்க்கையையும் அன்பையும் வழங்கிய பெண்களை மதிக்கவும்.
வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும், உங்கள் செயல்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுதியான மரியாதை மற்றும் பச்சாதாபத்தை பிரதிபலிக்கட்டும். நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம், ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த காயங்களை சரிசெய்து பாதுகாப்பான, அதிக இரக்கமுள்ள உலகத்திற்கு வழி வகுக்க முடியும்.
பல பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கூட இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அவர்கள் கண்களில் நட்சத்திர கனவுகளுடன் சிறிய நகரங்களிலிருந்து வருகிறார்கள், பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் கனவுகள் மொட்டுக்களிலேயே நசுக்கப்படுகிறது.
இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுரண்டல்கள் இத்துடன் நிறுத்தப்படட்டும்.
பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒரு போதும் சரி செய்யவோ சமரசம் செய்யவோ வேண்டாம்.
இந்த துயரங்களை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நானும் நிற்கிறேன். ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
- எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.
மதுரை:
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி பேரையூர் பேரூர் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரையூர் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது
இதில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசியதாவது:-
அமெரிக்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போவதனால் கவலையில்லை. அவர் போவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா என்பதுதான் தமிழ்நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதன் மூலமாக வேலை வாய்ப்பு வந்துவிட்டது, முதலீடு வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள் தொழிற்சாலைகள் எல்லாம் பெருகிவிட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள். முதல்வர் என்று சொன்னால் மக்களோடு தான் இருக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின் இங்கிருந்து வெளிநாடு சென்று இங்கிருந்து தொழிலதிபர்களை வெளிநாட்டுக்கு வரச்சொல்லி அங்கே இருவரும் கையெழுத்து போட்டு போஸ் கொடுக்கிறார்கள். வெளிநாட்டு தொழில் முதலீடு கிடைத்தது என்று இரண்டு பேரும் சொல்வார்கள் .
இங்கே தானே இருந்தீர்கள் இங்கே முடித்து இருந்தால் அரசிற்கு செலவாவது மிச்சமாய் இருக்கும் எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர். இதன்படி பார்முலா4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கில் முறையீட்டை ஏற்றுக்கொண்டு, நாளை (ஆக.29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
- தங்கத்துக்கு 3 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
- மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
இந்தியாவில் தங்கத்துக்கு 3 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி முன்பு 15 சதவீதம் இருந்தது. மக்கள் நலன் கருதி கடந்த மத்திய பட்ஜெட்டில் 9 சதவீதம் குறைக்கப்பட்டு, தற்போது 6 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தங்கத்தின் மீதான இறக்குமதிவரி குறைக்கப்பட்டபோதும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ், ரஷியா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வதந்திகள் பகிரப்படுவது, சீனாவின் மத்திய வங்கி தங்கத்தில் மீண்டும் அதிக அளவு முதலீடு செய்து வருவது உள்ளிட்டவை தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை (22 காரட்) ரூ.55,166-ஆக உள்ளது. விரைவில் கிராம் ரூ.8 ஆயிரமாகவும், பவுன் ரூ.64 ஆயிரமாகவும் உயர வாய்ப்புள்ளது.
தற்போது ஆவணி மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருமண சீசன் ஆரம்பமாகி உள்ளது. எனினும், விலை உயர்வால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை.

புரட்டாசி, ஐப்பசி என அடுத்து வரும் மாதங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்க நகை விற்பனை குறைந்துள்ளது.
- பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது.
- மத்திய அரசு நிதி வழங்காததால் தமிழக அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது.
புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் 'கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது' என திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விட குறைவான நிதியையே மத்திய அரசு கொடுக்கிறது. மத்திய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
- ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
- ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இது எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படும். ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று-மூளைக்கு (இஸ்கிமிக்) ரத்தத்தை வழங்கும் பாத்திரங்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் பொதுவானது.
சுமார் 85 சதவீத மக்கள் இந்த வகையைக் கொண்டுள்ளனர். 2-மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மெல்லுதல் ஜர்தா, குட்கா, கைனி, அதிகப்படியான மது அருந்துதல், குடும்பத்தில் பக்கவாதத்தின் முந்தைய வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சில இதயப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

அத்தகையவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை மூளையின் ரத்த நாளங்களை அடைந்து செயலிழப்பை ஏற்படுத்தும். மறுபுறம் மரபணு இயல்பும் இந்தியர்களை அச்சுறுத்துகிறது.
மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் பக்கவாதம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தாக்குகிறது.
தற்போது பெரியவர், சிறியவர் என்ற பாகு பாடின்றி பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
30 மற்றும் 40 வயதுக்குள் முடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.
பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டுகொ ள்வது மிகவும் அவசியம்.
சிறுமூளையில் பக்கவாதம் ஏற்படும் போது, உடல் கட்டுப்பாட்டை இழந்து தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழலாம். உங்களுக்கு தூக்கம் வரலாம்.
வாய் முகத்தில் பக்கவாட்டில் திரும்பும். ஒரு கையின் பலவீனம்.
பேச்சில் வேறுபாடு, தடுமாற்றம், தடுமாற்றம். இந்த அறிகுறிகள் எதுவும் புறக்கணிக்கப்படக்கூடாது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
சுமார் 30 சதவீத மக்கள் பக்கவாதத்திற்குப் பிறகு முழுமையாக குணமடைகிறார்கள். மற்றவர்களுக்கு ஊனம் ஏற்படுகிறது. சரியாக நடக்க முடியாமல், பேச முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்கள். மறுவாழ்வு சிகிச்சையானது விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். இதில் பிசியோதெரபி முக்கியமானது.
பக்கவாதம் ஏற்படும் போது உடல் வலிமை மட்டுமின்றி தன்னம்பி க்கையும் குறைகிறது. முதலில் கை கால்களை பிடித்து அவர்களை நம்ப வைக்கிறார்கள்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவில் உப்பைக் குறைக்கவும். நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் குறைக்கப்பட வேண்டும். மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
கொலஸ்ட்ராலையும் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.
எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானத்தில் ஈடுபட வேண்டாம். பழக்கம் இருந்தால் வரம்பைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர்.
- கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவர் 14-ந்தேதி வரை அதாவது 19 நாட்கள் அரசு முறை பயணம் மேற் கொள்கிறார். இன்றிரவு சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
31-ந்தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 12-ந்தேதி வரை தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு 7-ந் தேதி அயலக தமிழர்களுடனும் கலந்துரையாடுகிறார்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த எமிரேட்ஸ் விமானத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக முதலமைச்சரின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 8.40 மணிக்கே சென்னை விமான நிலையம் வந்து விட்டார். அங்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு விமான நிலையத்திற்குள் சென்று அமர்ந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.
அதாவது இந்த விமானம் துபாயில் தரையிறங்கியதும் அங்கு இறங்கி வேறு விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்.
இந்த நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை விமான நிலைய டைரக்டருக்கு இ.மெயில் மூலம் (மின்னஞ்சல்) இரவு 7.55 மணிக்கே இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்து கிடந்துள்ளது. ஆனால் அதை யாரும் அப்போது பார்க்கவில்லை. இரவு 10 மணிக்கு மேல்தான் பார்த்துள்ளனர். அதன் பிறகு பதறியடித்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். ஆனால் அதற்குள் முதலமைச்சர் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டு சென்று விட்டது.
இதனால் அதிகாலை துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர். இன்று அதிகாலையில் துபாயில் விமானம் தரையிறங்கிய பிறகு அதில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் இறங்கியதும் சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
வெடிகுண்டு மிரட்டலில் சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு பல இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த மிரட்டல் புரளிதான் என தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதால் பயணிகள் சற்று பதற்றம் அடைந்தனர்.
கடந்த சில நாட்களாகவே விமான நிலையத்திற்கும், விமானங்களுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேக கூட்டங்கள் சிவப்பு நிறங்களில் காட்சி அளித்தது.
- பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.
ஒரு சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் சிவப்பு நிறம் மற்றும் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்று காட்சியளித்தது.
நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே சிவலிங்கம் இருப்பது போல் தனியாக தோன்றியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர். வானில் சிவபெருமான் தோன்றி காட்சி அளித்து வருகிறார் என ஒருவருக்கொருவர் பேசி கொண்டனர்.
இந்த காட்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர். மேக மூட்டங்களில் சிவலிங்கம் தோன்றிய காட்சியை அந்த பகுதிகளில் உள்ள மக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்கள் அந்த படத்தை பார்த்து சிவன் நேரில் தோன்றியது போன்றே காட்சியளிக்கிறது.
மேலும் பனிலிங்கத்தை காண்பது போன்று காட்சியும் மனதில் தோன்றுகிறது என ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
- பாஜக கட்சி கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழக பாஜக-வில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறின. கூடவே ஏராளமான சர்ச்சைகளும் உருவாகின.
மிகக் குறுகிய காலக்கட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பேற்ற காரணத்தால் உட்கட்சியிலேயே அண்ணாமலை சில சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது, தற்போது இது ஓரளவுக்கு குறைந்தும் இருக்கிறது.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கட்சி சார்ந்த வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையிடையே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க தேவை என கருதி சில கருத்துக்களையும், அண்ணாமலை தொடர்ச்சியாக கூறி வந்தார்.
தமிழக அரசியலில் பிரதான எதிர்கட்சியாக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சிகளில் பாஜக தீவிரம் காட்டியது. இதோடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்தது.
இதன் விளைவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை உருவாக்கிய அண்ணாமலை தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணி உருவாகவும் காரணமாக இருந்தார். இதே தேர்தலில் பாஜக போட்டியிட்ட பல தொகுதிகளில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்த நிலையில், இருகட்சியை சேர்ந்தவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன. இது ஒருக்கட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான நேரடி மோதலாக மாறத் துவங்கியது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.
இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவபொம்மை எரிப்பு என அதி.மு.க.-வினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு, அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால் கடும் சொற்கள் கூடாது," என்று தெரிவித்தார்.
கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தார். அரசியல் களத்தில் தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் சாதாரண விஷயம் தான், ஆனால் தனிநபர் விமர்சனங்கள் வீண் பதற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.
சிலர், பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் விமர்சகர்களில் சிலர் இதுபோன்ற கருத்துக்கள் அரசியல் களத்தில் பாஜக - அதிமுக மோதல் போக்கை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும், எதிர்காலங்களில் இருகட்சிகளின் தேர்தல் கூட்டணிக்கு உதவும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

தமிழக பாஜக-வின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்புக் குரல் ஆகியோவை திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கூட்டணி உருவாகி வருவதை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், திமுக மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரு கட்சிகளின் அரசியல் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர்.
இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசிய விவகாரம், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் களம் வரை எதிரொலிக்கும் என்று தெரிகிறது. சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்ததை போன்று, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை தவிர்த்து பாஜக தலைமையிலான கூட்டணியை வலுப்பெற வழி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதிரடி முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் அண்ணாமலை, 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - பாஜக நேரடி மோதலை உருவாக்கும் வகையில் தான் மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் ஆதாயம் கருதி, தனிநபர் எதிர்ப்பு கருத்து வீண் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு தேவையற்ற குழப்பங்களை மட்டுமே உருவாக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எதிர்கட்சி தலைவரை கடும் சொற்களால் வசைபாடிய அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்தாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து, ஆளும்கட்சிக்கு எதிரான சண்டை தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.






