என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.
    • இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்டு மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்.

    சென்னை:

    உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.

    ஆனால் இந்த மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 31-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்டு மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் சிறை.
    • ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீஸ் எச்சரிக்கை.

    தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும் என்றும் சென்னை காவல்துறை சமூக வலை்ததளத்தில் பதிவிட்டுள்ளது.

    இதுகுறித்த சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்! தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
    • தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

    காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    புத்தக கண்காட்சியில் தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
    • உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு அவரது உறவினர் வாங்கிச் சென்ற இட்லி பார்சல் வாங்கி சென்றனார். பின்னர் அவர் மருத்துவமனைக்குள் சென்று நோயாளிக்கு கொடுப்பதற்காக பார்சலை பிரித்து பிளாஸ்டிக் கவரில் இருந்த சாம்பாரை ஊற்றினார்.

    அப்போது அந்த சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாப்பிடவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் நோயாளியின் உறவினர் ஓட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்ததாக சிவகங்கை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்து செய்தனர். அப்போது அங்கு இருப்பு வைத்திருந்த காலாவதியான பூரி, புரோட்டா, கோழிக்கறி, சமையல் மசாலா பொருட்கள், அழுகிப்போன காய்கறிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரசு மருத்துவமனைக்கு எதிரிலேயே சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவகத்தின் சமையலறையை ஐந்து நாட்களில் சுத்தப்படுத்தி சரி செய்யவும், அதுவரை உணவகத்தை மூடவும் உத்தரவிட்ட அதிகாரிகள் உணவகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபதாரமும் விதித்தனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியான புகார்களை தெரிவித்துள்ளனர். ஆய்வுகள் மேற்கொள்வதை அதிகாரிகள் புகார்கள் வந்த பிறகே மேற்கொள்வதாகவும், அதுவரை எந்தவொரு உணவகத்தையும் கண்டுகொள்ளவதில்லை என்றும் கூறுகிறார்கள்

    சாலையோர உணவகங்களில் அடிக்கடி சென்று ஆய்வு நடத்துவதை காட்டிலும் மருத்துவமனை, மக்கள் அதிகம் செல்லும் ஓட்டல்களில் அதிரடியாக ஆய்வு நடத்துவதோடு, சமையல் அறை, தயார் செய்யப்படும் உணவு வகைகள் உள்ளிட்டவற்றையும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    • பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
    • பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்.

    தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.

    அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதேபோல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

    இந்நிலையில், சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, முன்னாள் காவல்துறை ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் கவால்துறை அதிகாரி காதர் பாட்சாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளார்.

    சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா ? அதற்கான ஆவணங்கள் உள்ளதா ? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.
    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் கட்சியின் புதிய கொடியை கடந்த 22-ந்தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

    சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. கட்சி கொடி பற்றிய விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும் பயன்படுத்தி வருகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.

    இந்த நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை உருவத்தை பயன்படுத்தி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எந்த பதிலையும் விஜய் எங்களுக்கு தராமலும் நீக்குவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.

    எனவே சட்டவிரோதமாக விஜய் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கட்சி சின்னத்தை தான் வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதி இருக்கிறது. எங்கள் கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது எந்த கட்சி சின்னத்துடனோ கொடியுடனோ பொருந்தாது. தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் தகுந்த விளக்கத்தை அளிப்போம்" என்றார்.

    • தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனினும், ஜூலை 1-ந் தேதிக்கு வீட்டு -அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது இணைப்புகளுக்கு மின் கட்டணம் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால், மின் கட்டண உயா்வின் அடிப்படையில் தொகை வசூலிக்கப்படவில்லை.

    இதையடுத்து மின் கட்டண உயா்வு அமலான ஜூலை 1-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறித்து குறுந்தகவல் சேவையை (எஸ்.எம்.எஸ்) மின் நுகா்வோரின் கைப்பேசிக்கு தற்போது மின்சார வாரியம் அனுப்பி வருகிறது.

    மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்குத்தான் தகவல் செல்லும் என்பதால், வாடகைக்கு குடியிருப்போருக்கு இது குறித்துத்தெரிய வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, ரூ.12 அல்லது ரூ.17 அல்லது ரூ.23 அல்லது ரூ.38 என மிகச் சிறிய தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு கூறி, அதை நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
    • விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அறிவித்த விஜய் அடுத்தடுத்து கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களில் களம் இறங்கினார்.

    முதற்கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.

    அடுத்ததாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்து அலுவலகத்தில் உள்ள 40 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார்.

    சிவப்பு, மஞ்சள் நிறத்தில் நடுவில் இரண்டு யானைகள், வாகைப் பூவுடன் வடிவமைக்கப்பட்ட கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கட்சி மாநாடு பணிகளில் விஜய் தீவிரம் காட்ட தொடங்கினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.

    அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற இருந்த மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.

    தொடர்ந்து மாநாட்டுக்கு பாதுகாப்பு தரக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் புஸ்சி ஆனந்த் மனு அளித்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    • எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • நீங்கள் எல்லோரும் கழக ஆட்சியின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது குறிஞ்சி இல்லத்தில் தி.மு.க. பிரமுகர் திராவிட மணி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார்.

    மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்த திருமணம் ஒரு மகிழ்ச்சியான தினத்தில் நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் கழக தலைவராக நம் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று கழக தலைவராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அப்படிப்பட்ட சிறப்பான நாளில் இந்த திருமணம் நடைபெறுகிறது.

    இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    நீங்கள் எல்லோரும் கழக ஆட்சியின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள்தான் இருக்கிறது. எனவே இப்போதில் இருந்தே நம்முடைய தேர்தல் பிரசாரத்தை நாம் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நம்முடைய முதலமைச்சர் தலைமையில் மீண்டும் கழக ஆட்சியை அமைத்திட, இந்த திருமண நிகழ்ச்சி மூலம் நம்முடைய உறுதியை ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
    • தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியிலும், கர்நாடகத்தின் கோலார் பகுதியிலும் செயல்பட்டு வரும் டாட்டா மின்னணு நிறுவனத்தின் ஆலைகளில் பணியாற்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 4000 பெண்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் வேலை கிடைக்காமல் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து ஊழியர்களை இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது.

    தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இன்னொரு மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு டாட்டா நிறுவனத்திற்கு உரிமையும் இல்லை.

    இந்த நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாட்டா நிறுவனத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக, டாட்டா மின்னணு நிறுவனம் தமிழ்நாட்டில் ஆலை அமைத்தால், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்பதால் தான்.

    ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.
    • கேரளாவை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, 'சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் துவங்கி வைக்கிறார்.

    இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைப்பெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் கலந்து கொண்டு இக்கருத்தரங்கு குறித்து விரிவாக பேசினார். இதில் அவருடன் வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார் பங்கேற்றார்.

    தமிழ்மாறன் பேசியதாவது, 'ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, 'சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கருத்தரங்கை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.

    ஆழியாறு அறிவு திருக்கோவிலின் அறங்காவலர் பச்சையப்பன் முன்னிலை நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக கேரள மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்களும், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மருத்துவர் துரைசாமி  கலந்து கொள்கின்றனர்.

    மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் என்று சொல்லப்படும் மரவாசனைப் பயிர்களான ஜாதிக்காய், லவங்கப்பட்டை, சர்வ சுகந்தி (பிரியாணி இலை), கிராம்பு, அவகோடா ஆகியவை தகுந்த சூழலை உருவாக்கினால் சமவெளியிலிலும் தரமான முறையில் விளைவிக்க முடியும். மரவாசனை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை வெகுவாக அதிகரித்துக் கொள்ள முடியும். இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தவும், சாகுபடி நுணுக்கங்கள், அதன் பராமரிப்பு முறைகள் மற்றும் முன்னோடி வெற்றி விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.

    இக்கருத்தரங்கை ஈஷாவுடன், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (IISR), இந்திய மசாலா வாரியம் (SBI), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) ஆகிய மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறது. இதில் இந்த ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, மரவாசனைப் பயிர்கள் சாகுபடி குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள். உற்பத்தி செய்த பொருட்களை உலரவைத்தல், பதப்படுத்தல் ஆகிய நுட்பங்கள் குறித்தும், சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி குறித்தும் பேச உள்ளனர்.

    மேலும் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    இதனுடன் சமவெளியில் அவகாடோ மரங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பங்கேற்று அவகாடோ சாகுபடி குறித்தும் அனுபவங்களை பகிர உள்ளார்கள். தென்னையில் இணை மரங்களாக மரவாசனை மரப்பயிர்களை சாகுபடி செய்யும் போது குறிப்பாக பல அடுக்கு பல பயிர் முறையில் செய்வதால் குறைந்த நிலத்தில் அதிக மரங்களை வளர்க்க இயலும். மேலும் பல்வேறு பயிர்கள் உள்ளதால் தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறையும். நிலத்தின் மண் வளமும் அதிகரிக்கும்.

    காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு 'காவேரி கூக்குரல் இயக்கம்'சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வியக்கம் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கோடிக்கணக்கான மரங்கள் நட திட்டமிடப்பட்டது. அதிகளவில் மரங்கள் நடுவதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிக்கும் திறனும் மேம்படும். இதனால் மழைக் காலங்களில் பொழியும் மழையானது மண்ணில் அதிகளவு சேகரிக்கப்படும். இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, காவேரியின் கிளை நதிகளையும், காவேரியையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்.

    சுற்றுச்சூழல் நோக்கத்தோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வியக்கம், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக மர வாசனை பயிர்கள் குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே தென்னை, பாக்கு, மற்றும் டிம்பர் மர விவசாயிகள் அதிக அளவில் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற காவேரி கூக்குரல் அழைக்கிறது. கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    ×