என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SMS"

    • பொது மக்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை.
    • பொதுமக்கள் பலவீனமான கட்டிடங்கள் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம்.

    டிட்வா புயல் குறித்து பொது மக்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.

    அந்த குறுஞ்செய்தியில்,"டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.

    பொதுமக்கள் பலவீனமான கட்டிடங்கள் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம். டிட்வா புயல் காரணமாக கனமழை ஏற்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தினால் ஒத்துழைக்கவும்.

    மின் கம்பிகள், ஈரமான மின் சாதனங்களைத் தொடாதீர்கள்." என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.
    • இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (19.05.2025) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தள கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தின் தொடக்கத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

    பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நான்கு ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டு நாம் கடந்து வந்திருக்கின்றோம். அதற்குக் காரணம் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நம்முடைய முதல் கடமையாக நினைத்துச் செயல்படுவதுதான்.

    இப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக புயல், வெள்ளம், கனமழை போன்ற பேரிடர்கள் எல்லாக் காலங்களிலும் ஏற்படுகின்றன. ஆனால், அந்த இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளான உங்களுக்கும்தான் இருக்கிறது. இப்போது, நாம் தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ளவிருக்கிறோம்.

    இதில் இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மை உள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர் வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்ற பாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும்.

    பேரிடர் மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற வசதிகளோடும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல; பேரிடர் மேலாண்மைத் திட்டம் – தகவல் தொடர்புத் திட்டம் – முதல்நிலை மீட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் அனைத்தையும் சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, நாம் ப்ரோ-ஆக்டிவாகச் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

    பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டும், தங்களுடைய குறைகளைச் சொல்லியும் குரல் எழுப்புவது ஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான்.

    எனவே, சோஷியல் மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதைத் திரும்பவும் நீங்கள் ஃபாலோ-அப் செய்ய வேண்டும்.

    குறைகளைச் சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்ற மக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மை நம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

    பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு SMS-ஆ அனுப்ப வேண்டும்.

    அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும். அடுத்து, சாலைப் பணிகள் நடைபெறுகிற காரணங்களினால், சில அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    எனவே, தமிழ்நாடு முழுவதும் அப்படி இருக்கின்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கே தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம், ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும்.

    அடுத்து, மழைக்காலங்களில், நெல் மூட்டைகள் மற்றும் உணவு தானியங்கள் மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்பு கிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரைக்கும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மழைநீர் வடிகால், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    பருவமழை காலத்துக்குத் தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

    அடுத்து, நீர்வள ஆதாரத் துறையைப் பொறுத்தவரைக்கும் 17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது.

    எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர் இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத் தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவை சாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அடுத்து, வேளாண்மை-உழவர் நலத்துறையைப் பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால் குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால், வேளாண் பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட எல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும், குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண் களஅலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள் மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
    • ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டையிலுள்ள மகளிர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியான kmut.tn.gov.in/login.html யில் பொதுமக்கள் உள்நுழைவு என்ற மெனுவை தேர்வு செய்து அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை அணுகி விண்ணப்ப த்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாவிடில் வங்கியிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் என அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனினும், ஜூலை 1-ந் தேதிக்கு வீட்டு -அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது இணைப்புகளுக்கு மின் கட்டணம் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால், மின் கட்டண உயா்வின் அடிப்படையில் தொகை வசூலிக்கப்படவில்லை.

    இதையடுத்து மின் கட்டண உயா்வு அமலான ஜூலை 1-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறித்து குறுந்தகவல் சேவையை (எஸ்.எம்.எஸ்) மின் நுகா்வோரின் கைப்பேசிக்கு தற்போது மின்சார வாரியம் அனுப்பி வருகிறது.

    மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்குத்தான் தகவல் செல்லும் என்பதால், வாடகைக்கு குடியிருப்போருக்கு இது குறித்துத்தெரிய வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, ரூ.12 அல்லது ரூ.17 அல்லது ரூ.23 அல்லது ரூ.38 என மிகச் சிறிய தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு கூறி, அதை நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.

    • இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]
    • தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார்

    இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]. ஹீரோயினாக நடித்த அனுயா, தாயாக நடித்த ஊர்வசி என அனைவரும் கதாபாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்திய இப்படம் எதார்த்தமான கதைக்களத்துடன் ஃபீல் குட் படமாக அமைத்திருந்தது.

     

    ஜீவா - சந்தானம் காம்பினேஷனில் காமெடி டிராக்கையும் இயக்குனர் ராஜேஷ் வொர்க்அவுட் செய்திருப்பார். இதனைத்தொடர்ந்து 2010 இல் ஆர்யா- சந்தானம் காம்போவை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை அதே பாணியில் எடுத்து ஹிட் கொடுத்தார் ராஜேஷ்.

    தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ராஜேஷ் பிசியாக இயங்கி வருகிறார்.

    இந்த சூழலில் சிவா 'மனசுல சக்தி 2' படத்தை எடுக்கும் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ராஜேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். SMS 2 படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், நடிகர் ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருப்பதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளது SMS ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
    • குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பை போலீஸ் போக்குவரத்து பிரிவின் உதவி எண்ணிற்கு நேற்று வாட்ஸ்ஆப் மூலம் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

    அதில், 2 ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, போலீசார் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பியவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், அல்லது மதுபோதையில் இருந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) TELIKAAMநிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத சேவைகளை ரீசார்ஜ் பேக் உடன் இணைத்து அதிக நிதி சுமையை உருவாக்குகின்றன.

    அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளரிடம் கூடுதல் சேவைகள் திணிக்கப்படுகின்றன. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    எனவே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு பிளான்களை கட்டாயமாக்குவது, இன்டர்நெட் தேவையில்லாத வாடிக்கையாளர்களின் தேவையற்ற சுமையை தீர்க்கும் என டிராய் தெரிவித்துள்ளது.  

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.

    அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

    தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

    ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது. அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும். 

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
    • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32-வது சுற்று கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 2,448 மையங்களில் நடைபெற்றது.

    இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தி யவர்கள் மூன்றாவதாக முன்னெ ச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டு பய ன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு குழுவினர் மூலம் மாவட்ட முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,870 பேருக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 25 ஆயிரத்து 95 பேருக்கும், ஆக மொத்தம் 31, 235 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் தங்களுடைய செல்போனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் எவ்வாறு எஸ்.எம்.எஸ்.வந்தது. சுகாதாரத்துறை பணி யாளர்கள் அலட்சி யமாக செயல்படுகிறார்களா? அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்துவ தற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் சுகாதாரப் பணியாளர்கள் முறை கேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    எஸ்.எம்.எஸ். கொடுத்தால் ஆவின் பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #AavinMilk #MinisterKadamburRaju
    தூத்துக்குடி:

    ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் குஜராத் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    சைக்கிள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு சற்றும் குறைவு இல்லாமல் ஊக்கத்தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் 100 சதவீதம் சுத்தமான பால் ஆகும். ஆவின் பால் பூத்களுக்கு தேவையான பொருட்கள் உடனடியாக வழங்கப்படும். எஸ்.எம்.எஸ். கொடுத்தாலே பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


    பால் கொள்முதல் விலை உயர்த்துவது தொடர்பாக முதல்அமைச்சர் நல்ல அறிவிப்பை தருவார். ஆவின் பால் பூத்களில் ஆவின் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்துணவில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Aavin #MinisterKadamburRaju
    மதுரையில் விடுமுறை என்று சகமாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சேர்ந்தவன் நவீன் பாரதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நவீன் பாரதியின் தந்தை இளங்கோவன் ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் தேவி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நவீன் பாரதி கடந்த வெள்ளிக்கிழமை “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்று சக மாணவர்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உள்ளார். இதனை நம்பிய பலரும் அந்த செய்தியை பார்வேர்டு செய்து உள்ளனர். இதனால் அன்றைய தினம் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை.

    பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது நவீன்பாரதி குறுஞ்செய்தி அனுப்பிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற நவீன் பாரதியை ஆசிரியர்கள் மட்டுமின்றி சக மாணவர்களும் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த நவீன்பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அவனது தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    தமிழக அரசின் பத்திர பதிவுத்துறையில், பதிவுப்பணி முடிந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் மூலம் https://tnreginet.gov.in என்ற இணையதளம் வழியாக பத்திரங்களை தயாரிக்கலாம் அல்லது தாங்களே சொந்தமாக பத்திரம் தயாரிக்கும் நிலையில் இணையதளத்தில் ஆவணச்சுருக்கத்தை உட்புகுத்தலாம். இதில் புதிதாக பத்திரம் பதிவு செய்பவர்களின் செல்போன் எண்ணை சேர்த்தால், அதனை சரிபார்த்து பதிவுத்துறை ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் ஆவணதாரர்கள் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

    பதிவுப்பணி முடிந்தவுடன் பத்திரத்தை திரும்பபெற்று செல்ல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) ஆவணதாரருக்கு அனுப்பப்படும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆவணம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்ட விவரம் உறுதி செய்யப்படும். நிலுவையில் இருக்கும் பத்திரங்களின் நிலை குறித்து ஆவணதாரருக்கு அனுப்பப்படும். இழப்பீடு தொகை கட்ட வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். சந்தை மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட்ட விவரங்களும், செலுத்த வேண்டிய குறைவு முத்திரை தீர்வை, குறைவு பதிவு கட்டணம் போன்ற விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த திட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுகிறது.

    பதிவு அலுவலர் பதிவு மறுப்பு சீட்டு வழங்காமல் வாய்மொழியாக பதிவை மறுக்கும் நிகழ்வுகளில் பதிவுத்துறை தலைவர் அலுவலக கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 102 5174 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×