என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
    • அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளோம்.

    * திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளது.

    * சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    * அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.

    * சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

    * எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது.

    * 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

    * அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும்.

    * எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம் என்று கூறினார்.

    • பிரதமர் மோடி 31ந்தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
    • சென்னை சென்ட்ரலில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயும் மதுரை-பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தேபாரத் ரெயில் சேவை தொடக்க விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்த இரண்டு ரெயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரெயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்தரெயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதி யம் 1.50 மணிக்கு அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.

    மதுரை-பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ் வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த ரெயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப் பட்டு, அதே நாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் பெங்களூரு கண் டோன்மெண்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.

    இந்தரெயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

    இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார்.
    • நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ். இவரது மனைவி அபிநயா. தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.

    அப்போது, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கீதா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதற்கிடையே, திருமணத்தின்போது தனது பெற்றோர் சார்பாக வழங்கப்பட்ட நகைகளை ராஜேசிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே இன்ஸ்பெக்டர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது, அனைத்து நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து, நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் திருப்பிக்கொடுத்துவிட்டு, மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    பின்னர், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி. ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் தற்போது வரை நகையை திருப்பித்தராத வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பெற்றோருக்கும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை என குறுஞ்செய்தி பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என தெரிய வந்தது.

    இந்நிலையில் இன்றும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று காலை 8.15 மணிக்கு பள்ளியின் இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் விடுதியிலும் மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.

    காலை 8.15 மணி என்பதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டனர். பள்ளி வாகனங்களில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் பெற்றோருக்கும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை என குறுஞ்செய்தி பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டது.

    இதை பார்த்து குழப்பம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்து வந்தனர். மாணவ, மாணவிகள் பெற்றோருடன் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விடுதியில் தங்கி படித்த மாணவ, மாணவிகள் அவசரமாக தங்களது பொருட்களுடன் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு போலீசார், அதிவிரைவு படை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்றனர்.

    பள்ளியின் ஒவ்வொரு பகுதியாகவும், ஒவ்வொரு வகுப்பறையாகவும் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனையிட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு பள்ளியின் வரைபடத்தையும் பார்வையிட்டார். முன்னெச்சரிக்கையாக பள்ளியின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு அரசு பணியை வழங்குவதற்காகவே இந்த ஆள்தேர்வு நாடகம் அரங்கேற்றப்படுவதாக சந்தேகிக்கத் தோன்றுகிறது.
    • ஒப்பந்தப் பணிகளாக இருந்தாலும், தற்காலிக பணிகளாக இருந்தாலும் அதில் இட ஒதுக்கீட்டு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ஊடகம், திறன் பயிற்சி, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான 3 வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அறிவித்திருக்கிறார். இந்தப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை, வயது வரம்பு இல்லை, எந்த அடிப்படையில் வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எந்த விவரமும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

    ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணி தான் என்றாலும் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படலாம். மாதம் ரூ.1.50 லட்சம் என்பது தமிழக அரசின் துணைச் செயலாளர் நிலையிலான பணிக்கான ஊதியம் ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியிடத்தை இட ஒதுக்கீடு இல்லாமல், போட்டித் தேர்வு இல்லாமல் நிரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு கொல்லைப்புற வழியாக அரசு பணியை வழங்குவதற்காகவே இந்த ஆள்தேர்வு நாடகம் அரங்கேற்றப்படுவதாக சந்தேகிக்கத் தோன்றுகிறது.

    மத்திய அரசில் இணைச் செயலாளர், இயக்குனர் நிலையிலான பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் 45 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இட ஒதுக்கீட்டு விதிகளை புறக்கணித்து விட்டு வெளியிடப்பட்ட இந்த ஆள்தேர்வு அறிவிக்கையை பா.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் இந்த ஆள்தேர்வு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

    இட ஒதுக்கீடு இல்லாத மத்திய அரசின் நேரடி ஆள்தேர்வு முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தது சரியான நிலைப்பாடு. பா.ம.க.வின் அதே நிலைப்பாட்டை எடுத்ததற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால், மத்திய அரசு செய்ததை விட மிக மோசமான சமூக அநீதியை, இட ஒதுக்கீடு இல்லாமல், தாங்கள் விரும்பியவர்களை தேர்வு செய்யும் வகையில் ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டது எந்த வகையில் நியாயம்? இந்த சமூக அநீதியை முதலமைச்சர் ஆதரிக்கிறாரா அல்லது தமக்கு தெரியாமல் நிகழ்ந்து விட்டது என்று தட்டிக்கழிக்கப் போகிறாரா?

    ஓராண்டுக்கான ஒப்பந்தப் பணி தான் என்று கூறி, இந்த சமூகநீதிப் படுகொலையை தமிழக அரசு நியாயப்படுத்த முனையக் கூடாது. ஒப்பந்தப் பணிகளாக இருந்தாலும், தற்காலிக பணிகளாக இருந்தாலும் அதில் இட ஒதுக்கீட்டு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து இந்தக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல துறைகளில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் ஆலோசகர்கள், சிறப்புப் பணி அதிகாரிகள் என்ற பெயரில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய பலர் அதிக ஊதியத்தில் நியமிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

    சமூகநீதி காக்கும் அரசு என்று கூறிக் கொண்டு , இட ஒதுக்கீட்டை இந்த அளவுக்கு திமுக அரசு படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுனர்கள் நியமிப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கடந்த காலங்களில் இதேபோல், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடுவதுடன், அந்த நியமனங்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு பேராசிரியை தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி செயல் பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுநிலை 2-ம் ஆண்டு பேராசிரியை தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் கல்லூரி முதல்வர் மாதவியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுகுறித்து இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி, கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என் கல்லூரி முதல்வர் மாதவி சுற்றறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியை ஈரோடு தாளவாடி அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கல்லூரி கல்வி இயக்குநரின் உத்தரவை தொடர்ந்து வழக்கம்போல் இன்று கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.
    • 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக முதலில் திருச்சி, மதுரையில் இடங்களை பார்வையிடப்பட்டது. அங்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை எழுந்ததால் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இங்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது.

    இங்கு மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்காக 3 வழிகளும் வெளியே செல்வதற்காக 3 வழிகளிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளது.

    இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், மாநாடுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவத்திலும் மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சாலைக்கு நேரில் சென்றார். அங்கு அவர் மேற்கொண்டார்.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி உள்ளதா? பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநாடு நடத்த போதிய இடவசதிகள் இருக்கிறதா? என்பதை குறித்து பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உடனிந்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, `விஜய் கட்சி மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கை காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மாநாடு நடத்த அனுமதி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

     

    அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். 

    • அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
    • லஞ்சம் குறைந்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு அடித்தளமிடுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக வராமல், இணையதளம் மூலமே பொதுமக்கள் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடிகிறது. அதனால் லஞ்சம் குறைந்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு அடித்தளமிடுகிறது.

    ஆனால் பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் அரசு வழங்கும் சில சேவைகளை பணம் கொடுத்து பெறுகின்றனர்.

    உதாரணத்திற்கு பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெறலாம். ஆனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல், 3-ம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து பெறுகின்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள்-அதிகாரிகள் இடையே மூன்றாம் நபர் தலையீடு இருக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளார். அந்த அடிப்படையில்தான் தற்போது திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது.

    சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டமும் அதன் ஒரு பகுதிதான். இந்தநிலையில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

    அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நிலம் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்க ஒருங்கிணைந்த நில சேவை இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில் நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள் அனைத்தும் தனித்தனி இணையதளங்களில் சென்று பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக பத்திரப்பதிவு விவரங்களை பத்திரப்பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

    அதேபோல் பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதள பக்கமாக சென்று பார்க்க வேண்டும்.

    எனவே தமிழக அரசு, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணையதளத்தை வடிவமைத்து உள்ளது.

    இந்த இணையதளத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா-சிட்டா மற்றும் வரைபட விவரங்கள், பத்திரப்பதிவு விவரங்கள், நிலம் தொடர்பான கோர்ட்டு மற்றும் வருவாய்த்துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டண விவரங்கள், சொத்து-குடிநீர் வரி விவரங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைந்து மிக எளிதாக பார்க்கலாம்.

    முற்றிலும் தொழில் துறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம் பொதுமக்களும் பலன் அடையலாம்.

    இந்த இணையதளம் இன்னும் முழுஅளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதில் உள்ள பத்திரப்பதிவு உள்பட சில சேவைகள் செயல்படவில்லை.

    இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் பொதுமக்கள் அதில் முழு அளவிலான சேவைகளை பெற முடியும் என்றும், அதில் சேவைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • சென்னை கடற்கரையிலிருந்து நாளை காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் கடற்கரை - எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை (30-ந்தேதி) காலை 4.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரெயில்கள் முழுவதுமாகவும், சில மின்சார ரெயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10, 9.30 ஆகிய நேரங்களிலும், நாளை காலை 4.15 மணிக்கும் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையிலிருந்து நாளை காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், மறுமார்க்கமாக, திருவள்ளூரில் இருந்து இன்று இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியிலிருந்து இன்று இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும், மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

    * சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.40 மணிக்கும், நாளை காலை 3.55 மணிக்கும் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

    * செங்கல்பட்டிலிருந்து இன்று இரவு 8.45, 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

    * திருமால்பூரில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடவும் முடியும்.
    • அதிகபட்சமாக வீட்டுக் கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை வழங்கும் அனைத்து சேவைகளையும் மக்கள் எளிதாக பெற இயலும்.

    அதன்படி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய 'கூட்டுறவு' என்ற செயலியை கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தியது.

    இந்த 'கூட்டுறவு' செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதுடன் கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடவும் முடியும்.

    இந்த செயலியில் பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், கடன் விண்ணப்பம், இ-வாடகை, வங்கி சேவை, உங்கள் சங்கம், இ-சேவை, மருந்தகம், கிடங்கு, நியாயவிலைக் கடை, தொடர்புக்கு, அலுவலகம் என்ற தலைப்புகளில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.

    பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் 'கூட்டுறவு' செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றடைகிறது.

    இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.

    அந்த வகையில், இந்த 'கூட்டுறவு' செயலி மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்னென்ன கடன், எப்படி விண்ணப்பிப்பது?

    கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் 'கூட்டுறவு' செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலியை திறந்து, வங்கி சேவை பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து கடன் தகவல் பொத்தானை அழுத்த வேண்டும்.

    அதில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.

    இந்த பட்டியலில் கடன்களுக்கான உச்சவரம்பு, கடன் கால அளவு, வட்டி வீதம், கடனுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

    அதில், அதிகபட்சமாக வீட்டுக் கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. வீட்டுக் கடன் பெற விரும்புவோர் அதனை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுக்கடன் தேர்வு செய்யப்பட்ட உடன், கூட்டுறவு சங்கம் தொடர்பான விவரங்கள் (அதாவது மாவட்டம், வட்டம், சங்கம்), வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

    • தற்போது அயனாவரம் தாலுகாவில் கொளத்தூர், பெரவள்ளூர், கொன்னூர் மற்றும் அயனாவரம் என 4 பகுதிகள் உள்ளன.
    • புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூரில் புதிய அரசு பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் தண்டையார்பேட்டை, அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், வேளச்சேரி, மதுரவாயல், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மாதவரம், அம்பத்தூர் என மொத்தம் 16 தாலுகாக்கள் உள்ளன. அதில் அயனாவரம் தாலுகாவில் உள்ள கொளத்தூரை பிரித்து புதிய கொளத்தூர் தாலுகா உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு செயலாளர் ராஜராமன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய சென்னை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அயனாவரம் தாலுகாவை சீரமைத்து கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.

    தற்போது அயனாவரம் தாலுகாவில் கொளத்தூர், பெரவள்ளூர், கொன்னூர் மற்றும் அயனாவரம் என 4 பகுதிகள் உள்ளன. அதில் உள்ள கொளத்தூரை தலைமையிடமாக கொளத்தூர் என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கொளத்தூர் மற்றும் பெரவள்ளூர் அதன் பகுதிகளான சிறுவள்ளூர், சின்னசெம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் இனி அயனாவரம் தாலுகாவில் கொன்னூர் அதன் பகுதிகளான மல்லிகைச்சேரி, மற்றும் அயனாவரம் அதன் பகுதிகளான அயனாவரம் பகுதி-1 மற்றும் பகுதி-2 ஆகியவை இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூரில் புதிய அரசு பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளன.

    ×