search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதில் தாமதம் ஏன்?
    X

    துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதில் தாமதம் ஏன்?

    • கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் 17 நாள் பயணமாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போதே, முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் சி.வீ.மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

    கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.

    இதை சில அமைச்சர்களே உறுதிப்படுத்தினார்கள். இந்த நிலையில், கடந்த 22-ந்தேதி காலை பரபரப்பு தகவல் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

    ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை" என்று அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி, கடந்த ஒரு மாத காலமாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருந்தது.

    இதற்கு மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 17 நாள் பயணமாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தற்போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்துக்கு காரணம் வெளிவந்துள்ளது.

    அதாவது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ளது. இதில், அவர் நிச்சயமாக விடுதலையாவார் என தி.மு.க. தலைமை உறுதியாக நம்புகிறது. அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    எனவே, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகியவை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நேரத்தில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்றும், முக்கிய அமைச்சர் ஒருவர் உள்பட 3 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில், திருவள்ளூர், சேலம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று தெரிகிறது.

    அதனால், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Next Story
    ×