என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார்.
- அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி, காஞ்சி பெரியவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு கண்ணன், மகேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் முருகேஸ்வரி கடந்த ஆண்டு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தார். தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு உங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதற்கிடையே முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார். ஆனால் முருகேஸ்வரி வங்கிக் கணக்கின் கடைசி எண்ணை தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 14 மாதங்களாக அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள காணப்பாடியைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது.
பின்னர் அந்த முதியவர் முதல் 3 மாதங்கள் மட்டும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து முருகேஸ்வரியிடம் கொடுத்தார். அதன்பின்னர் அவர் பணத்தை தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி மகளிர் உரிமை தொகை பணத்தை மீட்டு தருமாறு முருகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
- கடந்த 20-ந்தேதி கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
- அதை ஈடு செய்யும் வகையில் இன்ற பள்ளி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 20-ந்தேதி மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் இன்று (23-ந்தேதி) பள்ளி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
- 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.
10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விபரம்;
டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்
டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம்
டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - கணிதம்
டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல்

- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரும் நவம்பர் 25ம் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள்.
எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.
நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான்.
எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும்.
எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கழகத்தில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய - பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்களும். அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும்.
கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக - தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக - தொகுதி மக்களின் தேவைகளுக்காக - உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்.
- தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம் நாளை (23ம் தேதி), நாளை மறுதினம் (24ம் தேதி) நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர்.
இந்நிலையில், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ஐ. பரந்தாமன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்.? என்ன செய்ய வேண்டும்… எப்படி செய்ய வேண்டும்... உங்களுக்கான பதிவுதான் இது..!" என குறிப்பிட்டிருந்தது.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
நம் அனைவருக்கும் வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை தேடி பார்த்துவிட்டு இல்லை என்று ஏமாற்றம் அடைவதைவிட சிறப்பு முகாமை பயன்படுத்தி பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. அதன்படி, இம்மாதம் நாளை மற்றும் நாளை மறுநாள் (23ம், 24ம் தேதிகளில்) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
யார் யாருக்கெல்லாம் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையோ அவர்களும், வரும் ஜனவரி மாதத்தில் 18 வயது பூர்த்தி செய்யும் இளைஞர்களும் வாக்காளர் சிறப்பு முகாமிற்கு சென்று பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பிழை ஏதேனும் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். முகவரி மாறியிருப்பவர்கள், எழும்பூர் தொகுதிக்கு குடிவந்தவர்கள், அடுத்த முறை எழும்பூர் தொகுதியில் இருந்து வாக்கு செலுத்த நினைப்பவர்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, தேர்தல் நேரத்தில் தங்களின் இருப்பிடத்தின் அருகாமையில் செயல்படும் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். அங்கு, வாக்காள அதிகாரிகள் இருப்பார்கள். திமுகவின் நிர்வாகிகளும் தங்களுக்கு உதவ காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் அங்கு செல்லும்போது 18 வயது பூர்த்தியானதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது படிப்புச் சான்றிதழ் உடன் எடுத்துக் செல்லவும்.
முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இருப்பிடச் சான்றிதழுக்கு அட்டாச்சியாக பேங்க் பாஸ் புக், கேஸ் பில், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, சொத்து பத்திரம் ஆகியவை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
இந்த ஆவணங்களை எடுத்துச் செல்லும்போது அங்கு தரப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.
வாக்காளர் சிறப்பு முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுவதால் விடுமுறை தினத்தை வீட்டில் இருந்தே கழிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.
இந்த இரண்டு நாட்களில் உங்களுக்கு சவுகரியப்படக்கூடிய ஒரு நாளில் 10 நிமிடம் செலவழித்து பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
எழும்பூர் தொகுதி மக்கள் உங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்றவற்றை சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர்.
சத்குரு அகாடமி சார்பில் "இன்சைட்" எனும் தொழில் முனைவோர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஈஷாவில் இன்சைட் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத்," இஸ்ரோவின் வளர்ச்சி பயணம் மற்றும் வெற்றிக்கான மக்களை உருவாக்குதல்" எனும் தலைப்பில் பேசினார்.

அப்போது, இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தலைமை தாங்கிய புகழ்பெற்ற தலைவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரோவை தலைமை தாங்கிய ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர். இது கால்களுக்கு கடிவாளமிடும் மிகக்குறைவான பட்ஜெட்டுகளில் கூட மகத்தான விண்வெளி பயணங்களை சாத்தியப்படுத்தும் ஊக்கத்தையும், உந்துதலையும் பல குழுக்களுக்கு அளித்தது" என்றார்.
தொடர்ந்து, இஸ்ரோவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் குறித்து அவர் பேசுகையில், "ராக்கெட்டுகளை உருவாக்கிய அனைத்து மனிதர்களின் உருவாக்கத்தில் அவர் பணிபுரிந்தார். மனிதர்களிடம் சிறந்த சக்தி உள்ளது அதனைக் கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நீங்கள் உருவாக்கி விட முடியும் என்று அவர் நம்பினார்" எனக் கூறினார்.
மேலும், இஸ்ரோவிற்கான பொருளாதாரத்தை திரட்டுவதில் இருந்த சிரமங்கள், விண்வெளி ஆராய்ச்சி மூலம் பொது மக்களுக்கு கிடைக்கும் நலன்களை விளக்கி அரசியல் அமைப்புகளின் நம்பிக்கையை பெற்றது முதல் இன்று உலகிலேயே அதிகப் புகழும், மதிப்பும் பெற்ற விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் இன்றைய நிலை வரை, இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.
முன்னதாக இன்சைட் நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் பேசுகையில், "நம் பாரதம் முன்பு உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருந்தது. ஆனால் கடந்த 250 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, நம்மை நம்பிக்கையற்ற வெறும் கிளார்க் பணிகளை தேடும் மக்களாக மாற்றி உள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த தலைமுறை அந்த மனநிலையை கைவிட்டு வருகிறது. நம் நாட்டில் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அதாவது 100 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் உள்ளனர். தற்போதைய தேவை நம் நாட்டின் தொழில்கள் விரிவடைய வேண்டும். இதற்காக தான் இன்சைட் நிகழ்ச்சி" எனக் கூறினார்.
இந்தாண்டு இன்சைட் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றுள்ளனர். டைடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கட்ராமன், வெல்ஸ்பன் லிவிங் லிமிடட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஶ்ரீமதி தீபாளி, டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் ஆப் இந்தியா (TII) நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரும், சோழமண்டலம் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் தலைவருமான ஶ்ரீ வேலையன் சுப்பையா ஆகியோர் முக்கிய விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர்.
இதற்கு முந்தைய ஆண்டு இன்சைட் நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பயோகான் கிரண் மசும்தார்ஷா, ஜி.எம். ராவ், கே.வி.காமத், அருந்ததி பட்டாச்சார்யா, ஓலா பவேஷ் அகர்வால் உள்ளிட்ட நாட்டின் பிரதான வணிகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தல்.
- ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் வீரகனூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக ஜெயபிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், மாணவர்களை கால் அழுத்திவிட சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மாணவர்களை கால் அழுத்த சொல்லி ஓய்வெடுத்த ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- செம்மொழி சிற்ப பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.
- கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், சமையல் கூடம் மற்றும் வளாகத்தில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.

பின்னர், மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, பேருந்து நிலையம் அருகே மரகத பூங்காவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி மற்றும் 5கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் "ஆன்மீக கலாச்சார பூங்கா" அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க திமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. கைத்தறி மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலினின் திமுக ஆட்சியில் தாறுமாறாக நூல் விலை உயர்ந்ததுடன், விலையில்லா சீருடை, விலையில்லா வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகளை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்காதது போன்ற நிகழ்வுகளால், முதலாளிகளாக சொந்தத் தொழில் செய்து வந்த நெசவாளர்கள், தங்களது தறிகளை பழைய இரும்புக் கடைகளுக்கு விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு பணியாட்களாக இடம் மாறி தங்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் சேலை ரகங்களைப் போன்றே, வெளி மாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் நெசவாளர்கள் தயாரிக்கும் சேலைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல், ஜவுளி தேக்கமடைந்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான தறிகள் இரவு பகலாக இயங்கி வந்த நிலையில், இன்று மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் வாரம் முழுவதும் வேலை செய்து வாரக் கூலி பெற்று தினசரி வாழ்க்கையை நடத்தி வந்த நெசவுத் தொழிலாளர்கள், இன்று குறைந்த நாட்களே பணிபுரிந்து மாதக் கூலி பெறுகின்றனர்.
இதனால், தினசரி செலவுக்கு நெசவுக் கூலியை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சரியான சம்பளம் இன்றி, தங்களுக்குத் தெரிந்த நெசவுத் தொழிலை விட்டு, வேறு வேலைகளைத் தேடி அலையும் அவல நிலை அதிகரித்துள்ளது.
நெசவாளர்களில் பலர், தாங்கள் வாழும் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீட்டில், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தறிகள் உள்ள இடங்களைக் கணக்கீடு செய்து அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இது போன்ற குடிசைத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் வீடுகளில் உள்ள தறிக் கூடங்களின் அளவை மாநகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்து வருவதாகவும்; சதுர அடிக்கு 27 ரூபாய் தொழில் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாகவும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தெரிவித்த செய்தி, நெசவாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் வருகின்றன.
அம்மா ஆட்சியில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களி வாழ்வாதாரம் பாதிப்படையக்கூடாது என்று, 200 யூனிட் மற்றும் 750 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கியது அம்மாவின் அரசு. நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன.
மேலும், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளில், 10 சதவிகிதம் வீடுகள் நெசவாளர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்து, பிப்ரவரி 2018 முதல் கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மானியத்துடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
ஆனால், கடந்த 42 மாதகால விடியா திமுக ஆட்சியில் இதுவரை நெசவாளர்களுக்கு எந்தத் திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத்தை உடனடியாக வழங்குமாறு ஏற்கெனவே நான் வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால், இந்த அரசு இதுவரை மொத்த மானியத் தொகையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே நெசவாளர்களுக்கு வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ள 90 சதவீதத்தை இதுவரை விடுவிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்மாவின் அரசில் விலையில்லா வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கான சீருடை போன்றவை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விடியா திமுக ஆட்சியில் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழக நெசவாளர்களுக்கு குறித்த நேரத்தில் தரமான நூல்கள் வழங்கப்படுவதுமில்லை.
பட்டுத் தறி நெசவு செய்பவர்களுக்கு, அம்மா ஆட்சிக் காலத்தில் எத்தனை தறி வைத்துள்ளனரோ, அத்தனை தறிகள் மூலம் நெய்யும் பட்டுப் புடவைகளுக்கும் முழுமையாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தறிக்கேற்றவாறு முழுமையாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது. ஆனால், விடியா திமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் ஆர்டரே தருவதில்லை.
நெசவாளர்கள் வைத்திருக்கும் அனைத்து ததிகளிலும் நெய்த பட்டுப் புடவைகளுக்கான ஊக்கத் தொகையும் வழங்குவதில்லை என்று பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, தொடர்ந்து பட்டு நெசவாளர்கள் நெய்த பட்டுப் புடவைகள் அனைத்திற்கும் ஊக்கத் தொகை வழங்குமாறு வலியுறுத்துகிறேன்.
அம்மாவின் அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களினால், தமிழகத்தில் நெசவுத் தொழில் காக்கப்பட்டது. ஆனால் இன்று. குடிசைத் தொழில்போல் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து நெசவுத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் தலையில் இடி விழுந்தது போல், தறிக் கூடங்களை அளவெடுத்து தொழில் வரி விதிக்க முனைந்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அரசு, நெசவாளர்களாகிய தங்களுக்கு உதவி செய்யாவிடினும், உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்று மிகுந்த மன வேதனையுடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே, உடனடியாக தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும்; நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும்; கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு வரி விதிப்பில் விலக்கு பெற்று, மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி (நாளை) கிராம சபை கூட்டம் தமிழக அரசின் உத்தரவின்பேரில் நாளை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
- அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2025ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என அரசு விடுமுறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2025- ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மற்றும் அக்டோபரில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- அதிகவிற்கு வேறு வேலை என்பதால் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.
- நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
ஜெயக்குமாருக்கு வேறு வேலைக்கு போக முடியவில்லை என்பதாலும், அதிமுகவிற்கு வேறு வேலை என்பதாலும் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.
அவ்வாறு பார்க்கக்கூடியவர்கள் இப்படி பேசவும் செய்வார்கள். ஒரு பயத்தில் இருந்து வரக்கூடிய கருத்துகள்தான் இது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. என்னென்ன பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படியும், அங்கு இருக்கக்கூடிய மற்ற கட்சிகளிடமும் கலந்து பேசிதான் முடிவு எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.






