search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher suspended"

    • அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று விடுதி அறையில் தங்க வைத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் சிறுமிகள் என்பதால் வழக்கு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருவக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருவக்கரை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 350 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தார்.

    அப்போது அந்த மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகத்துக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாச வீடியோவை பார்க்குமாறு திருவக்கரை பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் (வயது 38) வலியுறுத்தியதாகவும், தொடர்ந்து இதுபோல் தொல்லை அளித்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மேலும் சில மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், அவரது கணவர் மற்றும் உறவினரிடம் தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த தகவல் பள்ளியில் பரவியதையடுத்து தமிழ் ஆசிரியரின் லீலைகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மேலும் சிலர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

    இதை கேட்டு ஆவேசமடைந்த மாணவிகளின் உறவினர்கள், பள்ளியில் இருந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மகேஸ்வரன், விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த ஆண்டுதான் திருவக்கரை பள்ளியில் பணிக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.

    பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச்சென்று, மாணவிகளுக்கு மகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகேஸ்வரன் மீது 7 மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் சிறுமிகள் என்பதால் இந்த வழக்கு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோட்டக்குப்பம் துணை போலீஸ்சூப்பிரண்டு சுனில் தலைமையிலான போலீசார் ஆசிரியர் மகேஸ்வரனை போக்சோவில் கைது செய்தனர்.

    இந்த நிலையில் போக்சோவில் கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார். மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருவக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.
    • தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வே பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி ஜடை பின்னல் போட்டு வர வேண்டும் என விதிமுறை உள்ளது.

    நேற்று காலை அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் தலைமுடியை சீவி ஜடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வகுப்புக்கு வந்தனர்.

    அப்போது வகுப்புக்கு வந்த ஆசிரியை மாணவிகளின் தலைவிரி கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார்.

    தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.

    தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார். இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல் கேலி செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

    தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
    • மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தேர்வுக்காக 116 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது.

    தேர்வினை கண்காணிக்க தேர்வு மையத்திற்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தக்கலை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் வேலவன் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர் வேலவன் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் வேலவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் நடராஜன் என்பவர் முதுநிலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
    • இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டியில் அரசு ஆண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் நடராஜன் என்பவர் முதுநிலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நடராஜன் சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. உள்பட போட்டி தேர்வுகளுக்கான அகாடமி நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனால் சரியாக பள்ளிக்கு அவர் வராத நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

    ஆனாலும் அவர் முறையாக பதில் சொல்லவில்லை. மேலும் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததுடன், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்தாததால் நேற்று நடராஜனை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.

    தெலுங்கானா மாநிலத்தில் பொதுத்தேர்வில் மாணவி ஒருவருக்கு 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் போட்ட ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #PublicExam
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மிடியேட் தேர்வு (11 மற்றும் 12-ம் வகுப்பு) பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 9.47 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் மிகப்பெரிய குளறுபடி காணப்பட்டது.

    பாஸ் மதிப்பெண் பெற வேண்டிய 3.28 லட்சம் பேர் தோல்வி அடைந்ததாக தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் மறு மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு முடிவு காரணமாக 21 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    இதைதொடர்ந்து தெலுங்கானா பள்ளி கல்வித்துறை 3 பேர்கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்தநிலையில் மாணவி ஒருவருக்கு 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் இருந்த விவரம் வெளியே தெரிய வந்து உள்ளது.

    கிரிஜா நவ்யா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 0 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    அவர் வர்த்தக பாடத்தில் 99, சிவிக்ஸ் பாடத்தில் 96, பொருளாதாரம் 95, ஆங்கிலம் 68 பெற்று இருந்தார். தெலுங்கு பாடத்தில் மதிப்பெண் இல்லாமல் தோல்வி அடைந்ததாக முடிவு வெளியானதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார். அப்போது அவருக்கு 99 மார்க்குக்கு பதிலாக 0 மார்க் போடப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து அவரது தெலுங்கு பேப்பரை மதிப்பீடு செய்த ஆசிரியை உமாதேவியை சஸ்பெண்டு செய்து தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    தனியார் பள்ளியில் பணிபுரியும் அந்த ஆசிரியையை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. #PublicExam
    தெலுங்கானா மாநிலத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தின்போது 99 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு 0 மதிப்பெண் வழங்கிய தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். #TeacherSuspended
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் 12ம் வகுப்பிற்கான இடைநிலைத்தேர்வு நடைபெற்றது. இதில் 9.74 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 3.28 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது.

    தேர்வில் தோல்வியடைந்த 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து பெற்றோர்கள், மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாநில அரசு தேர்ச்சி அடையாத 3.28 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து தெலுங்கானாவின் 12 தேர்வு மையங்களில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதில் 5 தேர்வு மையங்கள் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்தது.

    இந்த தேர்வில் 12ம் வகுப்பைச் சேர்ந்த நவ்யா எனும் மாணவி 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் 0 மதிப்பெண் வழங்கியது கண்டறியப்பட்டது. உமா தேவி எனும் தனியார் பள்ளி ஆசிரியை இந்த விடைத்தாளை திருத்தியதாக தெரிய வந்துள்ளது.

    உமா தேவிக்கு இடைநிலைத் தேர்வு ஆணையம் ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது. 

    இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பான முழு விவரங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #TeacherSuspended





       
    சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ) உள்ளது. இங்கு சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயசந்தர் என்பவர் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் வந்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இவர் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக ரெயிலில் ஏறினார். அதே ரெயிலில் சிதம்பரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் கடலூரை சேர்ந்த 20 வயது மாணவியும் சிதம்பரம் செல்வதற்காக ஏறி பயணம் செய்தார். அப்போது ஜெயசந்தர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுபற்றி சிதம்பரம் அரசு ஐ.டி.ஐ. முதல்வரிடம் புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் ரவிச்சந்திரன் நடத்திய விசாரணையில், பயிற்றுனர் ஜெயசந்தர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து பயிற்றுனர் ஜெயசந்தரை சஸ்பெண்டு செய்து, முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    புதுவை வீராம்பட்டினத்தில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கல்வித்துறை சஸ்பெண்டு செய்துள்ளது.
    அரியாங்குப்பம்:

    புதுவை வீராம்பட்டினத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் புவியரசன்.

    இவர், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார்.

    இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    இந்த புகாரின் மீது குழந்தைகள் நல குழுவினரிடம் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த குழு விசாரணை நடத்தியதில் மாணவிக்கு ஆசிரியர் புவியரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது நிரூபணமானது.

    இதையடுத்து அந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புவியரசனை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து கல்வித்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து ஆசிரியர் புவியரசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். #Tamilnews
    ×