என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை ஆராய்ந்து பார்த்தால் நமது மாநிலம் மிகவும் கீழே செல்கிறது.
- தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது.
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு வரையிலான கட்டாய பாஸ் என்ற நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்தது. என்றாலும், தமிழகத்தில் அந்த நடைமுறை தொடரும் என அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
கல்வியின் தரத்தை உயர்த்தவே 5 முதல் 8-ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பயிற்சியளித்து மறுத்தேர்வு வைக்கப்படும்.
பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை ஆராய்ந்து பார்த்தால் நமது மாநிலம் மிகவும் கீழே செல்கிறது. தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது.
வடமாநிலத்துடன் தமிழகத்தை ஒப்பிடக் கூடாது. தமிழகத்தின் கல்வித்தரம் குறைந்து வருகிறது. மாணவர்கள் எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்றுதான் கணக்கெடுக்கிறோம். படிக்காமலேயே மாணவனை சும்மா உட்கார வைத்தால் கல்வித்தரத்தில் கீழே உள்ள மாணவனை எப்படி உயர் கொண்டு வருவீர்கள்?.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வர வாய்ப்புள்ளது. 4 மாவட்டத்தில் கட்டப்பட்ட பா.ஜ.க. அலுவலக கட்டடத்தை திறக்க அழைப்பு விடுத்துள்ளோம். வருகை குறித்த தேதி முடிவு செய்தபின் அறிவிப்போம்.
கேப்டனின் குருபூஜையில் பா.ஜ.க.வினர் கலந்து கொள்வோம்.
- 2024-ல் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்கவும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது-
ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 17 மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் IND-TN-10-MM-206 மற்றும் IND-TN-10-MM-543 ஆகிய பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 24.12.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில் மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த GPS கருவிகள், VHF கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.
2024-ம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- எல்லாவற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டார் விஜய்.
- கட்சி அலுவலகத்தில் இருந்தே வெளியிட்டார் விஜய்.
திராவிட கட்சிகள் ஆதிக்கம் கொண்ட தமிழ் நாடு அரசியலில் திராவிடம் மற்றும் தமிழ்த் தேசியம் கலந்த அரசியலை கொடுப்பதாக கூறி களத்திற்கு வந்திருப்பவர் நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய். திரையுலகில் முன்னணி நடிகர், புகழின் உச்சத்தில் இருக்கும் போதே மக்கள் பணியாற்ற அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டவர் விஜய் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
கட்சி தொடங்கியது முதல், மாநாடு நடத்தியது, நிவாரணம் வழங்கியது மற்றும் அதன்பின் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் வித்தியாசமான அனுகுமுறையை கையாண்டார் விஜய். கட்சி அறிவிப்பு வெளியான பின்பு, கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடல் மிக முக்கிய நிர்வாகிகள் அடங்கிய சிறிய கூட்டத்தின் மத்தியில் தான் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு, தந்தை பெரியார் பிறந்த நாளில், சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு ரகசியமாக சென்ற த.வெ.க. தலைவர் விஜய், தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதிகாலையிலேயே பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய போதிலும், மதிய வேளையில் அதுபற்றிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை கட்சி அலுவலகத்தில் இருந்தே வெளியிட்டார் த.வெ.க. தலைவர் விஜய்.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்த ஒன்றிரண்டு நாட்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கும் த.வெ.க. தலைவர் விஜய் தனது அலுவலகத்தில் இருந்தபடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டார்.
இதன்பிறகு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பல அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி, மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

எனினும், த.வெ.க. தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை தனது கட்சி அலுவலகத்திற்கு வாகனத்தில் அழைத்து வந்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்காமல், அழைத்து வந்து சந்தித்தது பேசு பொருளானது.
விஜயின் அரசியல் அறிவிப்பு தொடங்கியதில் இருந்து அவருக்கு ஆதரவாக பேசி வந்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு விஜயை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்த விவகாரத்தில் விஜய்க்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தார். இது குறித்து பேசும் போது, விஜய் பொது வெளியில் வரும் போது அவரை பார்க்க அதிகளவு கூட்டம் கூடும். இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளாவர். அப்போதும் விஜயை தான் விமர்சிப்பார்கள் என்று சீமான் கூறினார்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு மக்களை நேரில் சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று தந்தை பெரியார் நினைவு நாளில் கூட பெரியார் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவதை தவிர்த்துள்ளார். மாறாக தனது கட்சி அலுவலகத்தில் தந்தை பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்டுள்ளார்.
தந்தை பெரியார் நினைவு நாளில், தி.மு.க.வினர் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையிட்டார்கள். அ.தி.மு.க.வினர் அண்ணா மேம்பாலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையிட்டனர். தனது கட்சியின் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட விஜய் பனையூரில் அலுவலகத்திலேயே பெரியார் படத்திற்கு மாலையிட்டார். கட்சி அலுவலகத்திலேயே அரசியல் செய்யும் விஜயை நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவர் work from home 'மோட்'-இல் இருக்கிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
நிவாரண உதவி வழங்குவதில் துவங்கி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்குக் கூட களத்திற்கு வராத விஜய் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெளிவற்ற நிலையில் தான் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், களத்திற்கு வராமலேயே அரசியல் செய்யும் விஜயின் போக்கு தேர்தல் களத்தில் அவர் எதிர்பார்க்கும் வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதேநேரம், அரசியல் அறிவிப்புக்கு முன்னதாக தமிழக அரசியலை உலுக்கிய மெரினா போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் உள்ளிட்ட நிகழ்வுகளில் சத்தமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்றார் விஜய். அரசியல் அறிவிப்புக்கு பின்பும் கூட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் சமீப கால அரசியல் அலுவல்களை அலுவலகத்திற்குள் முடித்துக் கொள்ள வேறென்ன காரணமாக இருக்கும் என்பதை அவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
- படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
- முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
திருச்சி:
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவர்கள் 10 பேர் நேற்று அரையாண்டு இறுதித் தேர்வு முடிந்ததையடுத்து மதியம் ஒரு மணி அளவில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். பின்னர் குடமுருட்டி பகுதியில் காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இறங்கி குளித்தனர்.
படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. இதனால் எதிர்நீச்சல் போட முடியாமல் தவித்தனர். பின்னர் நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் தத்தளித்து நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர்.
ஆனால் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 15), விக்னேஷ் (16), சிம்பு (16) ஆகிய 3 மாணவர்களை வெள்ளம் இழுத்து சென்று விட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அந்த மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அய்யாளம்மன் படித்துறையில் திரண்டனர்.
பின்னர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்பதற்காக ரப்பர் டியூப் உதவியுடன் காவிரியின் மையப்பகுதிக்கு சென்று தேடிப் பார்த்தனர்.
சம்பவ இடத்தில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் விவேகானந்த சுக்லா, உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டனர்.
இதற்கிடையே நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும்பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டபோது, ஒரு பெரிய முதலை ஆற்றில் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த முதலை புதருக்குள் சென்ற பின்னர் தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
இன்று முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு தேடும் பணி தொடங்கப்பட்டது.
இதில் கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் 50 பேர் ஈடுபட்டனர். அவர்கள் ரப்பர் படகு, பரிசல், ஸ்கூபா ஆகிய உபகரணங்களுடன் இறங்கி தேடினர்.
பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட ஜாகிர் உசேன் உடலை பிணமாக மீட்டனர்.
மற்ற 2 மாணவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் ஒரு மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
- கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே சித்திரை சாவடி கிராமத்திற்கு இன்று காலை கழுகு ஒன்று பறந்து வந்தது. அது அந்த பகுதியில் இருந்த காமன் கோவில் மேலே பறந்து வந்து அங்கு அமர்ந்தது
அந்தக் கழுகின் முதுகு பகுதி முன்பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தியை காட்டு தீப்போல கிராமத்துக்குள் பரவியது. அங்கு பொது மக்கள் திரண்டனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழுகு எங்கிருந்து வந்தது. யார் அனுப்பினார்கள் அதில் உள்ள கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று முன்தினம் அருமனையில் தொடங்கியது. 2-வது நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு நெடிய சாலை சந்திப்பிலிருந்து மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு, பேண்ட் வாத்தியம், சிங்காரி மேளம், நாசிக் டோல், சிங்கார காவடி, பூக்காவடி, மேஜிக் ஷோ, ஜோக்கர், சிலம்பாட்டம், ஆதிவாசி நிறுத்தம், உலக்கை ஆட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், தம்போல, பெல்லி டான்ஸ், பஞ்சாபி டான்ஸ் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நெடுங்குளம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து பார்வையிட்டார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.
முழுக்கோடு சேகர ஆயர் ஜான்பெண்டிங் தொடக்க ஜெபம் செய்தார். டாக்டர் பிரியா சாலமன் வரவேற்று பேசினார். கல்வியாளர் ரவி பச்சமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னாள் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசி உரை வழங்கினார். இயக்க செயலாளர் ஸ்டீபன் நினைவு பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி 'கேக்' வெட்டியும், குழு பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கிற நற்செய்தி என்னவென்றால் அன்பு, மதச்சார்பற்ற பண்பு, மனித குலத்திற்கு சேவை செய்கின்ற பண்பு என்பதாகும். காங்கிரஸ் கட்சியும் அந்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது.
நமது விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் இந்த மதிப்பீடுகளை தான் போதித்தார்கள். இன்று சில சக்திகள் இந்திய மக்களிடையே இருக்கின்ற அன்பை சிதைக்க பார்க்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் இத்தகைய தீய சக்திகளை எதிர்க்கிறார். அதனால் தான் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இந்த குமரி மண்ணில் இருந்து தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரள மாநிலங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த பாசிச சக்திகளை அனுமதிக்கவில்லை. தெலுங்கானா மக்களும் கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பின்பற்றி வாழ விரும்புகிறார்கள்.
நாங்கள் ஏழை, எளிய மக்களுக்கு நன்மைகள் செய்கின்றோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் நாங்கள்சோனியா காந்தியையும், மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையையும் போற்றுகின்றவர்களாக இருக்கின்றோம். இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரப் போகிறார்.
மதச்சார்பற்ற அவருடைய சிந்தனையின் கீழ் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகிறது. சீனா போன்ற நாடுகளுக்கு இணையான நாடாக அவருடைய தலைமையின் கீழ் இந்தநாடு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண் டனர்.முடிவில் இயக்க தலைவர் திலீப் சிங் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை இயக்கநிர்வாகிகள் ஜோஸ் செல்வன், கென்னத், பிரதாப் சிங், டென்னிஸ், கிளாடிஸ் பிரபு ஜான் கிறிஸ்டோபர், சிங், பிஜின் சிங், சேம் ஜெகன், ஆரோன், புஷ்பராஜ், செல்வகாந்த், அருள், ஜஸ்டின் ஜேம்ஸ் ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்த ஆலைக்கு செப்டம்பர் 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார்.
சென்னை:
இந்தியாவில் பிரீமியம் வகை கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டிலேயே ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார் தொழிற்சாலையை அமைக்க ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இப்போது முதல்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு செப்டம்பர் 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த ஆலையில் முதல் கட்டமாக 1650 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. மேலும் இது, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வலுவிழக்கக்கூடும். லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை ஞானஒளிவுபுரம் ஏ.டி.எம். மையம் அருகே தனியாக வருமாறு பாலகுருசாமி அழைத்திருந்தார்.
- விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் பாலகுருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் கைதி ஒருவர் மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சிறையில் இருந்தபோது அவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அந்த ஓட்டலுக்கு உதவி ஜெயிலர் பாலகுருசாமி அடிக்கடி சாப்பிட சென்றுள்ளார்.
அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நட்பாக பழகிய அவர், ஓட்டல் உரிமையாளரின் திருமணமாகாத மகள் மற்றும் 14 வயது பேத்தி ஆகியோரின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை ஞானஒளிவுபுரம் ஏ.டி.எம். மையம் அருகே தனியாக வருமாறு பாலகுருசாமி அழைத்திருந்தார். இத்தகவலை சிறுமி தன் தாத்தா, பாட்டி, சித்தியிடம் கூறவே, அவர் கூப்பிட்ட இடத்துக்கு இருவரும் உடன் சென்றனர். அங்கு வந்த பாலகுருசாமி சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த சாலையில் பாலகுருசாமியை கடுமையாக திட்டியவாறு கைகளாலும், காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி சரமாரியாக தாக்கினார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இதனை பார்த்தும், பகிர்ந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்த பலர் பெண்ணுரிமையை காக்கும் லட்சணம் இதுதானா..., என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அச்சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் பாலகுருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே உதவி ஜெயிலரை பொது இடத்தில் பலரது முன்னிலையில் தாக்கியதாக முன்னாள் சிறை கைதி, அவரது மகள் ஆகியோர் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது இந்திய தண்டனை சட்டம் 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 355 (ஒருவரை அவமதிக்கும் வகையில் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தந்தை, மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் போராட்டம்.
- இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே.
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
அதில், தி.மு.க.வில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
திமுக-வில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறை சென்ற துரைமுருகன், இன்று தி.மு.க.விலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் என்றும், தி.மு.க.விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கு பதவி தராதது ஏன்? என கேள்வி எழுப்பியும், இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே எனவும் வினவியுள்ளார்.
ஆனாலும் துரைமுருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 2, 3 என்று துணை முதல்வர்கள் இருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் வேறு வழியில்லாமல் தி.மு.க.வில் துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முதல்வரை சுற்றி வியாபாரிகள் இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி இன்று காலை மரியாதை செலுத்தினார்.
- எடப்பாடி உறுதி மொழியை வாசிக்க தொண்டர்கள் திருப்பி கூறினார்கள்.
சென்னை:
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று எடப்பாடி பழனிசாமி உறுதி மொழியை வாசிக்க தொண்டர்கள் திருப்பி கூறினார்கள். உறுதிமொழி விவரம் வருமாறு:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த பாதையில், தடம் மாறாது; தடுமாறாது! சோர்ந்து போகாது; சோரம் போகாது! ஒற்றுமை உணர்வோடு, பயணிப்போம்! பயணிப்போம்! என்று உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
அள்ளிக் கொடுப்பதில் மன்னர் அவர், வாரி வழங்குவதில் வள்ளல் அவர், ரத்தத்தின் ரத்தங்களான உடன்பிறப்புகளை, உயிராக நேசித்தார், வீரத்தையும், விவேகத்தையும், கழகத் தொண்டர்க ளுக்கு சொல்லிக் கொடுத்தார், அராஜகத்தின் அடையாளம், தீயசக்தி தி.மு.க.-வை வீழ்த்துகின்ற தெய்வ சக்தியாய் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார்.
அவர்வழி நின்றே, நேர்வழி சென்றால், நாமும் எதிரிகளை வீழ்த்து வோம்! வீழ்த்துவோம்! துரோகிகளை வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்! என்றே உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
ஆறுகள் வற்றிப்போனா லும்; வற்றாத ஜீவநதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெரும் புகழ் என்றும் தொடரும்! என்றும் தொடரும்! மக்கள் தலைவரின் மாசற்ற தொண்டின் வழியில், வழிநடப்போம்! வழி நடப்போம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
தி.மு.க-வை வீழ்த்திடவே! வீழ்த்திடவே! நேர்மை என்ற வாளெடுத்து; வாய்மை என்ற வேலெடுத்து, மூன்று தேர்தல்களிலும் தொடர் வெற்றி கண்டு, கழகம் தொடர்ந்து வெற்றிகாண, புரட்சித் தலைவி அம்மா என்கிற வீரமங்கையை நமக்குத் தந்திட்டவர், பாரிவள்ளல், பரங்கிமலைச் சிங்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மண்ணை விட்டு மறைந்தாலும், நம் நெஞ்சை விட்டு மறையாத, புரட்சித் தலைவரின் வழியிலே; பயணிப்போம்! பயணிப்போம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
பொய்யான வாக்குறுதி களைத் தந்து, வஞ்சக மனம் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிய திமுக-வை, வேரோடும், வேரடி மண்ணோடும், வீழ்த்திடவே, வீழ்த்திடவே, உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
எங்கே? எங்கே? நீட் தேர்வு ரத்து எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே? சிலிண்டர் மானியம் எங்கே? எங்கே? டீசல் விலை குறைப்பு எங்கே? வெள்ள நிவாரணப் பணிகள் எங்கே? பழைய ஓய்வூதியத் திட்டம் எங்கே?
இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை எங்கே? எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே...? பதில் எங்கே? விடமாட்டோம்... விடமாட்டோம்... விடியா தி.மு.க. அரசே, பதில் தராமல் விடமாட்டோம்! விடமாட்டோம்!
43 மாதகால தி.மு.க. ஆட்சியிலே, மூன்று முறை மின் கட்டண உயர்வு! பால் விலை உயர்வு! குடிநீர் கட்டண வரி உயர்வு! சொத்து வரி உயர்வு! முத்திரைத்தாள் கட்டண உயர்வு! என மக்களை வரிகளால் வாட்டி வதைக்கும்,
ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவோம்! வீட்டுக்கு அனுப்புவோம்! என சபதம் ஏற்போம்! சபதம் ஏற்போம்!
கழகத்தின் பொற்கால ஆட்சியிலே, பொற்கால ஆட்சியிலே, மக்கள் நலன் காக்கும், நல்ல நல்ல திட்டங்கள், நாளும், பொழுதும் திட்டங்கள்! ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகங்கள்; எளியவர்கள் நலன் பெறவே அம்மா மருந்தகங்கள்;
பள்ளி மாணவர்கள் பயன்பெறவே, மடிக்கணிணி திட்டங்கள்; பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அம்மா இருசக்கர வாகனம்; திருமணம் செய்யும் பெண்களுக்கு, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்-என்றே கழக ஆட்சியின் முத்தான திட்டங்களை முடக்கியது.
தீயசக்தி திமுக ஆட்சியே! திமுக ஆட்சியே! கழகத்தின் புகழை மறைக்காதே! மறைக்காதே! காழ்ப்புணர்ச்சி கொண்டு, கழக அரசின் திட்டங்களை நிறுத்தாதே! நிறுத்தாதே! தி.மு.க. ஆட்சியே! விடியா தி.மு.க. ஆட்சியே! உங்கள் கொட்டத்தை அடக்குவோம்! குடும்ப ஆட்சியை அடக்குவோம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
கொடி பிடிக்கும் தொண்டனை, துச்சமென நினைப்பதுதான் தி.மு.க.-வின், வாடிக்கை... வேடிக்கை... இவற்றோடு, அன்றாடம் மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதலமைச்சரின், மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி! எடுத்துச் சொல்லி!
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் பொய் முகத்தை, வெளிச்சம்போட்டுக் காட்டுவோம்! வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியிலே, தீயசக்தி திமுக-வை, விரட்டி அடிக்கவே! விரட்டி அடிக்கவே! சூளு ரைப்போம்! சூளு ரைப்போம்!
கழகத்தைத் தோற்றுவித்த நம் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியிலேயே, அரை நூற்றாண்டுகால அரசியலுக்கு, அ.தி.மு.க.வை அழைத்து வந்த, புரட்சித் தலைவி அம்மாவின் வழியிலேயே, தொடர்ந்து பயணிப்போம்! பயணிப்போம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
மக்கள் விரோத ஆட்சியை! ஆட்சியை! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியிலே, வீட்டுக்கு அனுப்புவோம்! வீட்டுக்கு அனுப்புவோம்! புரட்சித் தலைவி அம்மாவின் அஞ்சாமையை துணையாய்க் கொண்டு, வீரநடை போடுவோம்! வெற்றி நடை போடுவோம்! தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப! தீய சக்தியை அடியோடு அழித்திட, சபதம் ஏற்கி றோம்! சபதம் ஏற்கிறோம்!
தீயசக்தியால் பாதிக்கப்பட்டுள்ள, தமிழ் நாட்டைக் காப்பாற்றிட சூளுரைப் போம்! சூளுரைப்போம்! என, புரட்சித் தலைவர் நினைவு நாளில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது ஆணையாக, உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வற்றாத புகழ், வாழ்க! வளர்க! புரட்சித் தலைவி அம்மாவின் வீரப் புகழ், என்றும் ஓங்குக! ஓங்குக! வெல்க! வெல்க!! வெல்கவே!!! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், வெல்க! வெல்க!! வெல்கவே.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பென்ஜமின், எஸ்.அப்துல்ரஹீம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய்சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்தியா, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன், ஆதிராஜாராம், வி.அலெக் சாண்டர், வேளச்சேரி எம்.கே.அசோக்,
இலக்கிய அணி மாநில இணை செயலாளர் டி.சிவராஜ், துணைச் செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணி பிரசாத், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி, இளைஞரணி துணைச் செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி (எம்.சி.), ஆயி ரம்விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம், மாணவரணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, ராயபுரம் பாலாஜி, வடபழனி சத்திய நாராயணமூர்த்தி, மதுரவாயல் வடக்குப் பகுதி செயலாளர் இமானுவேல், மதுரவாயல் வடக்குப் பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் ந.இளைஞ்செழியன்.
பகுதி செயலாளர் மதுர வாயல் ஏ.தேவதாஸ், இம்மானுவேல், இ.கந்தன், காரம்பாக்கம் மகேஷ், வேளச்சேரி சி.முருகன், ஜெ.ஆரோக்கிய வில்பர்ட், கே.ஏழுமலை,செந்தூர் சுரேஷ், கலைச்செல்வன், கண்ணன், பாஸ்கர், டி.ஆல்பட்ராஜ், முகப்பேர் இளஞ்செழியன் முன்னான் கவுன்சிலர் சைதை சொ.கடும்பாடி , சைதை எம்.என். இளங்கோ,
முன்னாள் எம்.எல்.ஏ. புரசை வி.எஸ். பாபு, வில்லிவாக்கம் பகுதி பொருளாளர் நேரு நகர் எஸ். கோதண்டன், வில்லி வாக்கம் மேற்கு பகுதி இளைஞரணி செயலாளர் வில்லிவாக்கம் பி. ஜெய் சுரேஷ், பெரம்பூர் மேற்கு பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கரன், கொளத்தூர் பகுதி செயலாளர் பட்மேடு டி.சாரதி, கொளத்தூர் சுதேஷ் பாபு, முஹமது இந்தியாஸ், பாலசுப்பிர மணியன், துறைமுகம் பையாஸ் , புரசை எம்.கிருஷ்ணன், சேத்துப்பட்டு பிரகாஷ், கேட்டரிங் ரமேஷ், என்.செல்வகுமார் செட்டியார்ஆயிரம் விளக்கு டி. ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சசிகலா இன்று காலை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகை சி.ஆர்.சரஸ்வதி மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
- ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்தபடியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
* மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
* ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
* ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.






