என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை.

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.56 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7 ஆயிரத்து 90-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720

    23-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    22-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    21-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    20-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,320

     கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    23-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    22-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    21-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    20-12-2024- ஒரு கிராம் ரூ. 98

    • உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் அவர் போதித்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுகின்றன.
    • இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    "உன் மீது நீ அன்பு செலுத்துவது போல், அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்" என்று எடுத்துரைத்த அன்பின் திருஉருவமாம், கருணையின் வடிவமாம் தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் நாளில்,

    "நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்" என்ற இயேசுபிரானின் போதனையை மனதில்கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    இயேசு பெருமான் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் இனிய வேளையில் கிறித்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஈராயிரம் ஆண்டுகளாக இயேசு பெருமானின் வார்த்தைகள் மானுடத்தை வழிநடத்துகின்றன. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் அவர் போதித்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுகின்றன.

    மனிதகுலம் வெறுப்பை எதிர்கொள்வதற்கு ஏதுவான மாமருந்து அன்பின் வழி பெருக்கும் சகோதரத்துவம் என்பதைப் போதிப்பதே இயேசுநெறியாகும்!

    வெறுப்புக்கு வெறுப்பை, வன்முறைக்கு வன்முறையோ தீர்வாகாது என்றும், அன்பும் கருணையும் தான் வெறுப்பைத் தணிப்பதற்கும் வன்முறையைத் தடுப்பதற்கும் வழிமுறை என்றும் உலகுக்கு எடுத்துரைக்கும் அறநெறியே இயேசுபெருமானின் போதனையாகும். அதன்வழியே மனிதகுலத்தினிடையே நல்லிணக்கத்தை வளர்த்து சகோதரத்துவத்தைத் தழைக்க செய்ய இயலும்.

    அத்தகைய சகோதரத்துவமே மானுட அமைதிக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும். எனவே, இயேசுபெருமான் பிறந்தநாளில் இம்மண்ணில் சகோதரத்துவத்தைத் தழைக்கச் செய்ய உறுதியேற்போம்.

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.

    அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.


    • தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
    • திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் 'லூர்து' என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.


    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து, மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருப்பலியின் முடிவில் பக்தர் ஆரோக்கியம் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

    இந்த சிறப்பு திருப்பலியில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்டிருந்த குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    மேலும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிறிஸ்துமஸை யொட்டி ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு திரண்டதால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
    • சிறுபான்மையின மக்களின் நலனுக்காக தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற வன்முறையை தவிர்த்து, 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்' என்று பொறுமையையும், 'ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதை கொடுத்து விடுங்கள்' என ஈகையையும், 'பகைவர்களையும் நேசியுங்கள்' எனக்கூறி இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.

    போர்களினாலும், வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது.

    அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களின் நலனுக்காக தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

    அந்த வகையில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும் ஜெருசலேம் செல்வதற்கான நிதி உதவி ரூ.60 ஆயிரமாக உயர்வு, 8 தொன்மை வாய்ந்த தேவாலயங்களை மறுசீரமைக்க நிதியுதவி, தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 345 மகளிருக்கு 4.32 கோடி ரூபாய் நிதியுதவி, ஏராளமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து,

    கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும் - சம உரிமையோடும் - சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும் என கிறிஸ்துமஸ் நன்னாளில் உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை ரத்து.
    • திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந் தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 27-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையும், மறுமார்க்கமாக, காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 28-ந் தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையும், மறுமார்க்கமாக, காட்பாடியில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் வரும் 27-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தையொட்டி இன்று விடுமுறை நாள் அட்டவணைப்படி சென்னையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    * சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    * இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும்.

    * காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    * இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசுக்கு ரூ.8.33 லட்சம் கோடி கடன் இருக்கிறது.
    • 15-வது நிதிக்குழு ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    "தி.மு.க. 2021-ல் ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது தமிழக அரசுக்கு ரூ.4.56 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போதைய அரசு அந்த கடன் தொகைக்கு வட்டியும் கட்டுகிறது, கடன் தொகையை திருப்பியும் செலுத்துகிறது. கடந்த ஆண்டு ரூ.49,000 கோடி கடன் திருப்பி செலுத்தப்பட்டது. இப்போது தமிழக அரசுக்கு ரூ.8.33 லட்சம் கோடி கடன் இருக்கிறது.

    15-வது நிதிக்குழு ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. அந்த இலக்கிற்கு உட்பட்டுதான் இந்த கடன் இருக்கிறது. தமிழக அரசு திவாலாகும் என்பது சிலரின் ஆசையாக இருக்கலாம். ஆனால் கடன் சுமையால் திவாலாகும் நிலை தமிழக அரசுக்கு ஒருபோதும் வராது."

    இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

    • தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
    • தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

    உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

    தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்று வரும் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


    நெல்லை பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் பழமைவாய்ந்த கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு திருப்பலியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றுள்ளார். கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 'சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    • அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக் கூடாது என நிபந்தனையின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமின்

    ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். ஆன்மிக சொற்பொழிவாளரான இவர், 'நமது கோவில்கள்' என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். இதில் அவர், மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர், 'ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபசாரங்கள்' என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

    தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இந்த புகார் மனு மீது போலீஸ் கமிஷனர் அருண், சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோ பதிவை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 'சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, சென்னை அழைத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனை எதிர்த்து, அவரது மகன் முகுந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் ரங்கராஜன் நரசிம்மன் அவதூறாக பேசிய வீடியோ நீதிமன்றத்தில் காவல்துறையால் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைப் பார்வையிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், மடாதிபதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக் கூடாது என நிபந்தனையின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கினார்

    மேலும், இந்த உத்தரவில் சாட்சிகளை மிரட்டவோ, தொடர்புகொள்ளவோ கூடாது என்றும் நீதிபதி நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.

    • சுரங்கம் அமைய உள்ள இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் பரிந்துரை.
    • பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய பரிந்துரை.

    டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. சுரங்கம் அமைய உள்ள இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.

    ஏல நடைமுறை முடியும் வரை தமிழகத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. ஏல நடைமுறை தொடர்பான பல சந்திப்பு கூட்டங்களில் தமிழக அரசு பங்கேற்றது என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    முன்னதாக,

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

    எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3.44 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
    • மேலும் 1.50 கோடி ரூபாய் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம். பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3,44,41,750/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு லட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியுள்ளது.

    மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) வழங்கப்பட்டதோடு, தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாழ்த்துரைச் செய்தியாக 'தமிழின் தொன்மையும், செறிவும், வளமும் நம் அனைவரையும் என்றும் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதே சமயம், தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வருவதால் நம் தமிழ்மொழி என்றும் புதுமையுடன் திகழ்கிறது என்பதிலும் நாம் பெருமையடைகிறோம்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவிட சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன். வளமையைப் பாரெங்கும் தமிழ்ப் பண்பாட்டின் குன்றாத பறைச்சாற்றுவதிலும், எதிர்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தமிழர்களின் வர்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    கடல்கடந்தும் தமிழால் இணைந்து வாழ்ந்துவரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி 12.12.24 வியாழக்கிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற விழாவில் படிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப. மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×