என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.
- த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.
ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது.
- நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
ஏற்காடு:
அரையாண்டுத் தேர்வு முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் நேற்று மாலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.

இதனால் நேற்று மாலை மற்றும் இன்று காலை முதல் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும் அவர்கள் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் காட்சி முனை, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிபார்த்தனர். மேலும் படகு சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் படகுகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்தது. படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
இன்று முதல் புத்தாண்டு வரை ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளது. கூட்டம் அதிகரித்து வருவதால் மலைப்பாதையில் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.
- திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
- ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலை திசை திருப்புவதற்குத் தான் திமுக அரசு முயல்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி?
தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறி விடாதா?
திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலை திசை திருப்புவதற்குத் தான் திமுக அரசு முயல்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொலை - கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், திமுகவுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர் தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்.
- இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- 558 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியா-இலங்கை இடையே நாகப்பட்டினம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடல் பகுதி 25 முதல் 40 கி.மீ. வரை மட்டுமே அகலம் உள்ள கடற் பகுதியாகும். மீன்வளம் மிக்க இப்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் தங்களது பகுதிகளில் மீன் பிடித்து வருகின்றன.
இந்த நிலையில் அகலம் குறைந்த பகுதி என்பதாலும், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் நடக்கும் பகுதி என்பதாலும் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் சம்பவங்களும், அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடப்ப துண்டு.
எனினும் சமீப காலமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடி சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. இதில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2½ ஆண்டுகள் வரை சிறை தண்டனை மட்டுமின்றி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்குதல் போன்ற கடுமையான ஷரத்துகள் இடம் பெற்றிருந்தன.
இந்த சட்ட திருத்தம் கொண்டு வந்த பின் தமிழக மீனவர்கள் கைது சம்பவங்களும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இதேபோல் 2014-ல் 164 படகுகள், 2015-ல் 71 படகுகள், 2016-ல் 51, 2017-ல் 84, 2018-ல் 14, 2019-ல் 41, 2020-ல் 9, 2021-ல் 19, 2022-ல் 34, 2023-ல் 34, 2024-ல் 39 படகுகள் என மொத்தம் 558 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 365 படங்களை அந்நாட்டு அரசு நீதிமன்ற உத்தரவுபடி நாட்டுடமையாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் படி இந்த விவரங்கள் கிடைத்துள்ளது.
அங்கு 193 படகுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும் அவற்றில் 21 படகுகள் விடுவிக்கபட்ட பின்னரும் மீதி படகுகள் அங்கேயே உள்ளன. இவற்றை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
- உதவி ஆணையர் பாரதிதாசன், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உதவி ஆணையர் பாரதிதாசன், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அதிகாலை காரை ஓட்டிக் கொண்டிருந்த செல்வராஜ் தூக்கம் கலைவதற்காக காரை ஓரமாக நிறுத்தி தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது. இதில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. நொறுங்கிய காருக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர்.
இந்த கோர விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் தலைவர்கள் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
- மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் இன்று நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. 100வது நாளை ஒட்டி, அரசியல் தலைவர்கள் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாஜ்பாயி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்."
"வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது.
- மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
எட்டயபுரம்:
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். 31 வயதான இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
முருகப் பெருமானை வேண்டி மாலை அணிந்துள்ள அவர் அறுபடை வீடுகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.
நேற்று அவர் தனது நண்பர்கள் செல்வராஜ், விஜயகுமார், மகேஷ்குமார், ராஜ்குமார் ஆகியோருடன் காரில் சுவாமி மலைக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் நேற்று இரவு திருச்செந்தூருக்கு சென்றனர்.
அவர்களது கார் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ஓட்டிக் கொண்டிருந்த செல்வராஜ் தூக்கம் கலைவதற்காக காரை ஓரமாக நிறுத்தி தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக் கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது. இதில்கார் அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. நொறுங்கிய காருக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர்.
இந்த கோர விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தேர்தல் பற்றி அமித்ஷா ஆய்வு நடத்துவார் என்று கூறப்படுகிறது.
- திருவண்ணாமலையில் பா.ஜ.க. அலுவலக கட்டிடத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார்.
சென்னை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) சென்னை வர உள்ளதாகவும், தமிழகத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அமித் ஷா-வின் பயண தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 10-ந்தேதி தமிழகம் வருவதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த அமைப்பு தேர்தல் பற்றி அமித் ஷா ஆய்வு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க.வை அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் வகையில் எத்தகைய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் மத்திய மந்திரி அமித் ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கூட்டணி, பிரசாரம், கொள்கை பிரகடனம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. உயர்நிலை குழு தலைவர்களுடன் ஆலோசனை முடிந்த பிறகு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் மத்திய மந்திரி அமித் ஷா தனியாக பேசுவார் என்று தெரிகிறது.
- 28-ந்தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
- ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கு தினமும் 3 முறை மலை ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவித்தது.
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று, வருகிற 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை, 28, 30 மற்றும் வரும் ஜனவரி 1-ந் தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வருகிற 28-ந் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு சிறப்பு மலைரெயில் ஊட்டி நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ரெயிலில் ஏறி உற்சாகத்துடன் பயணித்தனர். சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது.
சமூக விரோதிகளுக்கு அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
- விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதே சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீண்டும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து விமானத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்ட பயணிகளை தனியார் விடுதியில் அரை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விமானத்தை சரி செய்ய உதிரி பாகங்கள் விமான நிறுவனத்தின் சார்பில் இன்று கொண்டுவரப்பட்டு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று புறப்பட வேண்டிய விமானம், இன்று இரவு திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அவதியடைந்த சில பயணிகள் விமான டிக்கெட் ரத்து செய்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






