என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மணிக்கார தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது மகன் அகமது தம்பி என்பவருக்கு சொந்தமான டீத்தூள் ஏஜென்சி திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பிடாரன் தெருவில் உள்ளது.

    இங்கு டீ துள்களை குடோனில் சேகரித்து வைத்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இவரது உறவினரான ஹபீப் ரஹ்மான் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிகள் முடிந்ததும் ஊழியர்களை குடோனை பூட்டி சென்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனில் இருந்து கடும்புகை வெளியே வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் குடோன் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஹபீப் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து தீயணைப்புதுறை அலுவலர் மாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் எரிந்து சேதமானதாக ஹபீப்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் மின்கசிவு காரணமா? தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இன்று அதிகாலையில் திருவிடைமருதூர் அருகே டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த தேயிலை விவசாயத்தில் 63 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

    மாவட்டத்தில் 16 அரசு கூட்டுறவு தொழிற்சாலைகளும், 110 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    இந்த பாதிப்புகளில் இருந்து, தேயிலை செடிகளை பாதுகாக்க தேயிலை எஸ்டேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி, அதனை பாதுகாத்து வருகின்றனர்.

    ஆனால் சிறு விவசாயிகள் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் முன்னெச்சிக்கை நடவடிக்கையாக தேயிலை அறுவடை செய்கின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு,குறு விவசாயிகள் தாழ்வான பகுதிகளில் பயிரிட்டுள்ள தேயிலையை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் உறைபனி அதிகளவில் விழத் தொடங்கி விடும். அவ்வாறு விழுந்தால் தேயிலை செடிகள் பாதிக்கப்படும். குறிப்பாக தாழ்வான பகுதியில் உள்ள செடிகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே முன்கூட்டியே தேயிலை செடிகளில் உள்ள இலைகளை நாங்கள் அறுவடை செய்து வருகிறோம்.

    அறுவடைக்கு பின்னர் உடனடியாக செடிகளை கவாத்து செய்து முறையாக பராமரித்தால் மட்டுமே அடுத்த 3 மாதத்துக்கு பின்னர் மகசூல் கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கி உள்ளோம்.

    உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
    • செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.

    சேலம்:

    தமிழக-கர்நாடக எல்லையான மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிலர் சொகுசு பஸ் ஒன்றில் தென் மாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு ஆன்மிக தலங்களை பார்த்து விட்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்வதற்காக காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

    அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகியோர் இந்த சொகுசு பஸ்சின் பெர்மிட் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியில் இருந்த இரும்புகம்பியை எடுத்து போலீஸ் ஏட்டுகளை தாக்கினார். அவருக்கு ஆதரவாக பஸ்சில் இருந்த பயணிகளும் அங்கு வந்து சோதனை சாவடி போலீசாரை தாக்கினர். இதில் செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.

    அதே நேரத்தில் அவர்களும் தங்களை தற்காத்து கொள்ள சுற்றுலா பயணிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்கு வந்த அந்த பகுதி மக்கள் சுற்றுலா பயணிகளில் சிலரை சோதனை சாவடியில் பிடித்து வைத்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலரை கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுற்றுலா பஸ் டிரைவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிவநாராயணன் (52), கீளினர் அஜய் (20) ஆகியோர் மீது கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து டிரைவர் மற்றும் கீளீனர் ஆகியோர் ஜாமினீல் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த பேருந்து மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த நிலையில் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை சாவடியில் பணியாற்றிய போலீசார் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து சேலம் மாவட்ட சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்திரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

    இந்நிலையில், மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மாணவிகள் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 சிசிவிடி கேமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • நாளை மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி.
    • சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாளை (திங்கட்கிழமை) மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். மற்றும் ஆங்கில புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளதால் சேலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது. பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகும். இதனால் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகளிடம் இருந்து பூக்கள் வரத்து குறைந்து விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அமாவாசை, ஆங்கில புத்தாண்டு ஆகிய விசேஷ நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்கள் வரத்தும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
    • செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவ மனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகளும், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் வெடி குண்டு மிரட்டலால் பீதியடைந்தனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை அறிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் காவல்துறை கட்டுப்பட்டறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்ததாக பேசி இணைப்பை துண்டித்தது தெரிய வந்தது.

    மேலும் இந்த மாணவன் விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்தை சேர்ந்தவர் என்பதும், தனது உறவினர் வீடான கடலூர் முதுநகருக்கு வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
    • கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே மாணவி பலாத்கார வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சார் என குறிப்பிட்டு ஒருவரிடம் போனில் பேசியதாகவும், அவரை மறைப்பதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் மாணவி பலாத்கார வழக்கில் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    பாளையங்கோட்டை, டவுன், கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தவறு செய்பவர்களையும் அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்.
    • தெருவுக்கு தெரு சாராயக்கடை திறந்து வைத்து விட்டு மக்கள் நலம் குறித்து பேசுவது எப்படி.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மணச்சநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கான நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி திருச்சி தஞ்சை சாலை உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. பின்னர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. கட்சியின் பிரச்சனை குறித்து கருத்து கூற முடியாது. பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். டாக்டர் ராமதாஸ் அரசியலுக்கு வரும்போது பொதுவாக தான் வந்தார். கடைசியாக வழி இல்லாம தான் அன்புமணியை கொண்டு வந்தார்.

    நம் தமிழர் கட்சியில் தலைவர் உருவாகுவார். அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் பார்க்கும் தலைவன் வேறு. படம் எடுத்தால் தலைவர் என்று பெயர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் தலைவருக்கு பல தகுதி உள்ளது. 140 க்கு மேற்பட்ட வழக்குகள் என் மேல் உள்ளது. என் கால் படாத நீதிமன்றங்கள் இல்லை. கட்சி அரசியலும், தேர்தல் அரசியல் தான் உள்ளது. மக்கள் அரசியல் கிடையாது.

    தி.மு.க. செய்வது மக்கள் அரசியலா?. பா.ஜ.க. கட்சி கோவில், ஜாதியை விட்டு வேற என்ன பேசி பார்த்திருக்கிறீர்களா?. அனைத்து அமைச்சர்கள் மருத்துவமனை, பள்ளிகளை வைத்திருக்கிறார்கள்?. எப்படி அரசு மருத்துவமனைகளும், பள்ளிகளும் தரம் உயரும்?.

    5 வருடம் கழித்து தான் மக்களிடம் களஆய்வு என வருவார்கள். என்ன பிரச்சனை கேட்பார்கள்.

    கமிஷன் வாங்கும் புறக்கணிகளை தேர்வு செய்து கொண்டு தலைவர் களை எங்கே தேடுவது? அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை குறித்து கவலைப்படுவார்கள்.

    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் வேலை செய்யாமல் போவதற்கு காரணம் என்ன? தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது.

    அதற்காக சாட்டையில் அடித்துக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும் அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்.

    தேர்தல் தோறும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தங்களது தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசை வலியுறுத்தி, கடுமையான சட்டம் இயற்ற சொல்லலாம். அதாவது, யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ அவர், 10 ஆண்டுகள் தேர்தல் நிற்க தடை என்ற சட்டத்தை அண்ணாமலை பெற்று தந்தால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கோ, தேர்தலில் நிற்பதற்கோ யாரும் முன் வர மாட்டார்கள்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அடுத்ததாக, இலவசங்களால் மக்களுக்கு ஒருபோதும் நன்மை விளைய போவதில்லை. அதையும் அண்ணாமலை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தூறல் பயிருக்கு உதவாது. அதுபோல, இலவசங்கள் நாட்டுக்கு உதவாது என குன்றக்குடி அடிகளார் சொன்னது போல இலவசங்கள் கொடுப்பதும் நாட்டுக்கு கேடு. இவை இரண்டையும் கணக்கில் கொள்ளாமல் திமுக அரசை தோற்கடிக்க முடியாது.

    பா.ம.க. தலைமையின் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் விரைவில் சரியாகிவிடும். தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் எந்தவித சிறந்த திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக காலை உணவு திட்டம் என்ற பேரில் வாரத்திற்கு 5 நாட்களும் உப்புமா போடும் அரசாக இருக்கிறது.

    தெருவுக்கு தெரு சாராயக்கடை திறந்து வைத்து விட்டு மக்கள் நலம் குறித்து பேசுவது எப்படி. இலவசம் என்பது உலக வளர்ச்சி திட்டம் அல்ல, அது வீழ்ச்சி திட்டம். இப்போது யார் தான் தமிழகத்தில் போராடாமல் இருக்கிறார்கள். ஆனால் நல்லாட்சி கொடுத்து வருவதாக சொல்வது எப்படி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைவர் கலைஞரை விட ஐயா நல்லக்கண்ணு ஒரு வயதுதான் இளையவர்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அதை கண்டித்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டது நல்லக்கண்ணு தான்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடை பெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லக்கண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ததுடன் கவிதை நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

    இங்கே பழ.நெடுமாறன் குறிப்பிட்டு சொல்லும்போது வாழ்த்துவதற்காக நாங்கள் வந்திடவில்லை. வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறோம் என்றார். அந்த வகையில் நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய நல்லக்கண்ணுவின் தியாகத்தை சிறப்பை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம்.

    சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக ஐயா வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம். உங்கள் வாழ்த்தை விட எங்களுக்கு பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்து விட போவதில்லை.

    தந்தை பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லக்கண்ணு ஐயாவுக்கு கிடைத்துள்ளது. 100 வயதை கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ் சமுதாயத்திற்காக உழைக்க இன்னும் தயாராக இருக்கேன் என்றும், உள்ள உறுதியோடு இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஐயாவுக்கு கம்பீரமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்களோடு நெருங்கி பழகியவர் நல்லக்கண்ணு.

    தலைவர் கலைஞரை விட ஐயா நல்லக்கண்ணு ஒரு வயதுதான் இளையவர். இவரது 80-வது பிறந்தநாள் விழாவில் கலைஞர் குறிப்பிட்டு பேசும்போது, வயதால் எனக்கு தம்பி, அனுபவத்தால் எனக்கு அண்ணன், என்னைவிட வயதில் இளையவர், ஆனால் அனுபவத்திலும், தியாகத்திலும் நம்மைவிட மூத்தவர் என்று குறிப்பிட்டார்.

    இதைவிட முத்தாய்ப்பாய் ஒன்றை குறிப்பிட்டார். ஒரு கார் விபத்து கலைஞருக்கு ஏற்பட்டது. அந்த விபத்தில் கலைஞரின் ஒரு கண் பாதிக்கப்பட்டது. அது எல்லாருக்கும் தெரியும். அதை குறிப்பிட்டு எனக்கு ஒரு கண்தான் முகத்தில் இருக்கிறது. இன்னொன்று அகத்தில் இருக்கிறது. அதுதான் நல்லக்கண்ணு என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு நல்லக்கண்ணுவை மதித்தார். தோழமை உணர்வோடு கலைஞர் பாராட்டினார்.

    கடந்த 2001-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அராஜகமாக கைது செய்யப்பட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். அப்போது அதை கண்டித்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டது யார் என்றால் நல்லக்கண்ணு தான்.

    இத்தனைக்கும் அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. அதைப்பற்றி கவலைப்படாமல் கண்டித்தார். அப்படிப்பட்ட தோழமை இறுதி வரை பேணி பாதுகாத்தார் கலைஞர்.

    அந்த நட்புணர்வோடு தான் இன்றைக்கு நான் உங்களை வாழ்த்தவும், வாழ்த்து பெறவும் வந்திருக்கிறேன்.

    நல்லக்கண்ணுக்கு அம்பேத்கர் விருது கலைஞர் வழங்கினார். நான் 2022-ல் தகைசால் தமிழர் வருது வழங்குகினேன். அம்பேத்கர் விருது பெறும்போது தமிழ் நாடு அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் 50 ஆயிரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், இன்னொரு 50 ஆயிரத்தை விவசாய சங்கத்துக்கும் கொடுத்து விட்டார்.

    இப்போது நான் ஆட்சிக்கு வந்தபோது தகைசால் தமிழர் விருதை கொடுத்தபோது 10 லட்சம் ரூபாய் கொடுத்தோம். அந்த 10 லட்சத்துடன் 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தவர்தான் நல்லக்கண்ணு.

    அவரது 80-வது பிறந்தநாளின்போது இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியனும், பொருளாளர் தாவீதும் ரூ.1 கோடி திரட்டி தந்தார்கள். அந்த ரூ.1 கோடியை மேடையிலேயே இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கொடுத்தவர்தான் நல்லக்கண்ணு. அதே மேடையில் அவருக்கு வழங்கப்பட்டது. அதையும் அவர் இயக்கத்துக்கே கொடுத்து விட்டார்.

    இப்படி இயக்கம் வேறு தான் வேறு என நினைக்காமல் இயக்கத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிற மாமனிதரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா?

    கட்சிக்காகவே உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார். கட்சி வேறுபாடின்றி அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்.

    திராவிட இயக்கத்துக்கும் பொது உடமை இயக்கத்துக்கும் ஆன அரசியல் நட்பு இடையிடையே விட்டுபோய் இருக்கலாம். ஆனால் கொள்கை நட்பு எப்போதும், எந்த சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழவுக்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை நிறுவனர் த.மணி வண்ணன், திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
    • கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.

    விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.

    இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

     

    உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள் என்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.

    தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார்.

    அவருடன் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி ஆகியோர் இருந்தனர்.

    கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.

    சமாதான பேச்சுவார்த்தைக்கு அன்புமணி பல நிபந்தனை விதித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் பெரும்பாலும் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தி.மு.க. சார்பில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
    • அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க கோரி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தி.மு.க. சார்பில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக்கொள்ளப் போகிறார்? என்ற கேள்வியுடன் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்கள் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேனி ரோடு, பேருந்து நிலையம், வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு என பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் ஒட்டி இருக்கிறார்கள்.

    • அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.
    • சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி சங்கீதா(வயது 24). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சங்கீதா, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த 26-ந் தேதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரத்தப்போக்கு இருந்ததால், அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து கர்ப்பப்பையையும் அகற்றி உள்ளனர். தொடர்ந்து ரத்தப்போக்கு நிற்காத நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சங்கீதா உயிரிழந்ததாக குற்றம்சாட்டி ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சூழலில் டாக்டர்களின் கவனக்குறைவே சங்கீதா சாவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி குமார் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சங்கீதாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

    ×