என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது.
- இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன். விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
- 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் 2025 புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், 2025ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை. வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள்.
இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் Drone Camera-க்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் தகுந்த மாற்றுவழி ஏற்பாடுகளை பயன்படுத்திட வேண்டும்.
கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் (Anti Drowning Unit) இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையாக, எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.
சரக காவல் அதிகாரிகள் மேற்பார்வையில் குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்.
Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Flickering Light போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.
பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளை நடத்திட, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்கள், சென்னை பெருநகர காவல் துறையினருடன் ஒத்துழைப்பு நல்கி, 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டினை இனிதாக வரவேற்றிட "இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன்" கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சர்ச்சை காரணமாக பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம்.
- பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டு, இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார்.
ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார். இதனால் அறையின் பூட்டை உடைத்து அவர் பதவியேற்றார். இதுகுறித்த விபரம் வருமாறு:-
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017- 18-ம் ஆண்டில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உரிய தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் 40 பேருக்கும் தகுதி காண்பருவம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துணை வேந்தராக இருந்த திருவள்ளுவனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து, துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை பொறுப்பு துணை வேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை கவர்னர் நியமித்தார்.
இந்நிலையில் பொறுப்பு துணை வேந்தர் சங்கருக்கும், பேராசிரியர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதிக்கும் பதிவாளர் (பொ) தியாகராஜன் ஓரிரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். அதில் சங்கரின் செயல்பாடுகளால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே அசாதாரண சூழல் ஏற்படும் நிலை உள்ளது.
பல்கலைக்கழக நலன் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக சங்கருக்கு பதிலாக பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதி துணைவேந்தர் பணிகளை கவனிக்க எதிர்வரும் ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை செயல்படுவார் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பார்த்த பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உடனடியாக பதிவாளர் (பொ) தியாகராஜனுக்கும், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பாளராக தியாகராஜன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்.
பல்கலைக்கழக வேந்தரின் (கவர்னர்) ஆணைப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதாலும், பதிவாளர் பொறுப்பாக பணிபுரிந்து வரும் தியாகராஜனும் இந்த விசாரணை வரம்புக்குட்பட்ட ஒரு கல்வியாளராக இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்து ஆணையிடப்படுகிறது.
அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனை மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யப்படும் வரை பதிவாளர் பொறு ப்பாக நியமனம் செய்து ஆணை இடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு கடிதங்களால் எழுந்த சர்ச்சை காரணமாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பு துணை துணைவேந்தர் சங்கர் உத்தரவுப்படி பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வெற்றி செல்வன் இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக பல்கலைக்கழக ஊழியர்கள் கதவை உடைத்தனர். பின்னர், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் மற்றொரு தனி அறையில் அமர்ந்து உள்ளார்.

பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதிவேற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தமிழ் பல்கலைக்கழகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 3-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
- மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரா எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
வனத்தை விட்டு வெளி யேறி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து, வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை அருகே உள்ள முடீஷ் பகுதியில் 2 தினங்களாக 13 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி முடீஸ் பகுதிக்குள் நுழைந்தது.
அங்கு வெகுநேரமாக சுற்றித்திரிந்த காட்டு யானைகள், மணிவண்ணன், கண்ணன் ஆகியோரின் மளிகை கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. உள்ளே இருந்த பொருட்களையும் தூக்கி போட்டும், தின்றும் சூறையாடி சென்றது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
ஊருக்குள் யானை நுழைந்தது குறித்து வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மானாம்பள்ளி வன சரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனத்திற்குள் விரட்டினர். குடியிருப்பு பகுதிக்குள் யானை நுழைந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள்.
- உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி மாதந் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை வானொலி மூலம் மன்-கி-பாத்-மனதில் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசும் போது, 'உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்".
இதைப்போல கடந்த காலங்களில் திருவள்ளுவர், மகாகவி பாரதியார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இதன்மூலம் அனைத்து மொழிகளையும் சமமாக கருதுவதாக ஒரு நாடகத்தை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாகத் தான் நேற்றைய பேச்சும் அமைந்திருக்கிறது.
மோடியையும், பா.ஜ.க. வையும் தமிழக மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நிராகரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள். எனவே, பிரதமர் மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பெண்க ளுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மழையில் நனைந்தபடி அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசார் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வடக்கு அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, என். எஸ். நடராஜன், சிவசாமி, மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோக நாதன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான்,
முன்னாள் கவுன்சிலர் ஆண்டிப்பாளையம் ஆனந்தன், சூர்யா செந்தில், பகுதி செயலாளர்கள் பி.கே.முத்து, ஹரிஹரசுதன், குமார், கருணாகரன், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் இப்ராகிம் பாதுஷா உள்ளி ட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- தமிழக பா.ஜ.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
- திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், தமிழக பா.ஜ.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்.
வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- சுமார் 10 நிமிடங்களே இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
- சுமார் 10 நிமிடங்களே இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஒரு புறம் போராட்டமும், சம்பவம் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலையிலே பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக பெண்களுக்கு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து விஜய், கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து நண்பகல் 12.45 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு விஜய் வந்தார். இதன்பின், கவர்னர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்து பேசினார். அப்போது, அண்ணா பல்கலை கழக சம்பவம் மட்டும் அல்லாமல் பிற விவகாரங்கள் குறித்து மனுவாக கவர்னரிடம் விஜய் அளித்துள்ளார். சுமார் 10 நிமிடங்களே இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
விஜய் அளித்த மனுவில், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளார்.
இதனிடையே, எங்கள் கோரிக்கைகளை கேட்ட கவர்னர் அவற்றை பரிசீலிப்பதாக கூறியதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும், அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று.
- அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ.க்.கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலைஞர் அரசு மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அப்போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று அடங்காப் பிடாரித்தனமாக மறுத்தவர்கள் அவர்கள். கடைசியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி நாங்கள் அன்று நடவடிக்கை எடுக்க வைத்தோம்.
இன்று நாங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளோம். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இப்பொழுது அ.தி.மு.க. போராட்டம் என்பதெல்லாம் வீண் வேஷம். நாங்கள் இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக அ.தி.மு.க.வினர் இப்படி கபட நாடகத்தை நாடுகிறார்கள்.
பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும், அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று.
அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ.க்.கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது. இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார்.
அது இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்ற மாநிலத்திற்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு வரட்டும்.
நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம். தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள். எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று நினைப்பதை போல, எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் அண்ணாமலை உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது உடன் எம்.பி.க்கள் எம்.எம்.அப்துல்லா, நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, துணை மேயர் லியகத்அலி உட்பட பலர் உடன் இருந்தனர்.
- தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்.
- அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
கடலூர்:
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடு மைகள் கட்டுப்படுத்த தவறியதும், சட்டம்-ஒழுங்கு பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனும திமறுத்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் மேடை அமைக்காத வகையில் போலீசார் வாகனங்களை நிறுத்தி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தை திடீரென்று போலீசார் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் பேனர் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
அப்போது தி.மு.க. அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலை மையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார், மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று போலீசார் மைக் இணைப்பை நிறுத்தினர். பின்னர் அ.தி.மு.க.வினர் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய போது மீண்டும் மைக் இணைப்பு கொடுத்தனர். பின்னர் 2-வது முறை மைக்கை நிறுத்திய போது அ.தி.மு.க.வினர் கோஷத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கூறி வாகனத்தில் நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முயன்ற போது அ.தி.மு.க.வி னருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்த நிலையில் தள்ளுமு ள்ளாக மாறியது. பின்னர் போலீசார் அனைவரையும் வாகனத்தில் ஏற்றி கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
- எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனை தொடர்ந்து இன்று காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அக்கடிதத்தில், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்னருடனான சந்திப்பின் போது விஜயுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






