என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
    • ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை அதிகாரிகள் உட்பட சில வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை அதிகாரிகள் உட்பட சில வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ஊழல் நடந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறை வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    • விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் கூறினார்.
    • தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு உதவ முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்வதாக அறிவித்தார். அப்போது அருகில் இருந்த அன்புமணி குறுக்கிட்டு மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் கோபமடைந்த ராமதாஸ், தான் ஆரம்பித்த கட்சி பாமக என்றும், தாம் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது தொண்டர்கள் சிலர், முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, "இது தன் கட்சி" என அழுத்தம் திருத்தமாகக் கூறிய ராமதாஸ், விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் என்றார்.

    இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி, பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாகக் கூறிவிட்டு மைக்கை தூக்கி எறிந்தார். தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் சூழ பொதுக்குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறி நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் சென்னை பனையூரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் அன்புமணி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இன்று 3-வது நாளாக மாவட்டச் செயலாளர்களுடன் பனையூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து அன்புமணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

    • சபா நாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
    • அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக் கூட் டம் வருகிற 6-ந்தேதி கூடுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்து உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.

    அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்று பூங்கொத்து வழங்கி சட்ட சபைக்குள் அழைத்து வருவார்கள்.

    சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அரசின் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அதை தமிழில் வாசிப்பார்.

    கடந்த ஆண்டு சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி அரசின் முழு உரையையும் வாசிக்காமல் முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.

    அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சனை ஏற்பட்டது. அவர் கூட்டம் முடியும் முன்பே பாதியிலேயே வெளியே சென்று விட்டார்.


    அதன் பிறகு அரசுக்கும் அவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் இணக்கமான சூழல் உருவானது.

    இப்போது 2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் உரையாற்ற வருமாறு கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

    • மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்தில் வேறு ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மேலும், மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் யார் அந்த சார்? என்று கேட்டும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடைபெறுவதாக, தினமும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரும்போது, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுன சாமியாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.



    • போராட்டத்தால் தினந்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
    • சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி நீதி முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்.

    நீதிமன்றம் அளித்த நேற்றைய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அனைவரும் இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்பதை அனைத்து மக்கள் மனதிலும் கல்வெட்டாக பதிந்து விட்டது.

    இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் அவரை நோக்கி மக்கள் போராடுகின்ற சூழல் உண்டாகி விடும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    நேற்றைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டவுன்லோடு செய்து அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் அனுப்புகின்றோம்.

    போராட்டம் என்பது எந்த போராட்டமாக இருந்தாலும் போராட்டத்தை நோக்கிய கவனத்தையும் அரசின் கவனத்தையும் ஈர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.

    இவர்கள் கையில் எடுத்து இருக்கும் போராட்டத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக ஜாமினில் வெளி வரமுடியாத அளவிற்கு கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயன்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நாள்தோறும் போராட்டம் போராட்டம் என்று வீதிக்கு வரும்போது தங்களுடைய சுய விளம்பரத்திற்காக அப்படி செய்யும் போராட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    தினந்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. பள்ளி மற்றும் பணிக்கு செல்வபவர்கள் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. பேருந்து, ரெயில், விமானத்திற்கு செல்பவர்களும் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் நேரத்திற்கு செல்ல முடியாமல் அல்லல்படுகின்றனர். அதேநேரம், போராட்டத்தில் ஈடுபடுவோரை அப்புறப்படுத்தி, கைது செய்து, விடுவித்து விடுகிறார்கள். இதில், எந்தவிதமான அடக்குமுறையும் இல்லை.

    இந்த ஆர்ப்பாட்டம் போராட்டத்தால் யாராவது இதுவரையில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று இருக்கிறார்களா? எப்படி அடக்குமுறை என்று சொல்ல முடியும்.

    போராட்டக்காரர்கள் மக்களுடைய தேவைகளையும் உணர வேண்டும். ஏற்கனவே சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் அதிகப்படியான வளர்ச்சி திட்டங்களுக்கு வித்திட்டு அந்த பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    இந்தநிலையில் இவர்கள் ஒரு செயற்கையான நெருக்கடியை உருவாக்குகின்றபோது அதை முழுவதுமாக கவனித்து அதற்குண்டான வழிவகைகளை கண்டறிந்து, மக்களுக்கு சுகமான பயணத்தை அளிப்பது அரசின் கடமை என்பதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    யாரையும் ஒடுக்குகின்ற அரசு அல்ல. மன்னிப்போம் மறப்போம் என்ற அரசே இந்த அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    • அரசியல் தெரியாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் சிரிக்க தான் செய்வேன்.
    • உங்கள் கூட்டணி ஆளுகின்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை.

    மதுரை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திரை இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை கைநீட்டி காட்டினாலே அவர்களை கைது செய்வதும், வழக்குப் பதிவு செய்வது மட்டும்தான் தமிழகத்தில் நடைபெறுகிறது.

    பள்ளிக்காக ரூ.44 ஆயிரம் கோடி செலவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள், அதை செய்தார்களா? அதற்கு சாட்டை எடுத்து அடிக்கட்டுமா? அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை முதல் பிரச்சனை இல்லை, அதுபோல எக்கச்சக்க பிரச்சனைகள் உள்ளது.

    மாணவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என தி.மு.க. அமைச்சர்கள் கூறுவது போல் நிச்சயமாக இதில் யாரும் அரசியல் செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லியிருப்பதால் இதற்கு பேச முடியாது. அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் போராடுகிறோம்.

    அரசியல் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அரசியல் செய்யாமல் அவியல் செய்ய வேண்டுமா என்று கேட்ட முதல்வர் தானே இவர். நீங்கள் அவியல் செய்யும்போது தற்போது நாங்கள் கேட்டால் மட்டும் அது அரசியல் என்றால் ஜனநாயக ரீதியாக இது எப்படி நியாயம்.

    மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க. குரல் கொடுக்கவில்லை என சீமான் கூறியுள்ளார். அதுபோன்று மக்களை திசை திருப்புவதற்காக பேசக்கூடாது. மணிப்பூர் பிரச்சனையும் பாலியல் விவகாரமும் ஒன்று கிடையாது. மணிப்பூரில் எல்லை மீறிய பிரச்சனைகள் உள்ளது. அது கூட தெரியாமல் தி.மு.க.வினர் பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எதுக்கு அரசியலில் இருக்கிறார்கள். அரசியல் தெரியாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் சிரிக்க தான் செய்வேன்.

    உங்கள் கூட்டணி ஆளுகின்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. மணிப்பூரில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பது தெரியாமல் முதல்வர் ஸ்டாலினோ, தி.மு.க.வி.னரோ, காங்கிரஸ் கட்சியினரோ இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அரசியலில் இருக்கக்கூடாது.

    பேரணியில் பங்கேற்றதற்காக நாங்கள் கைது செய்யப்படுவோம். ஜனநாயக ரீதியாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை. கைது செய்தால் செய்யட்டும், பார்த்துக் கொள்ளலாம். பா.ஜ.க. மாநிலத் தலைவரை மாற்றுவதற்காக வாய்ப்புள்ளதா என்பதில் யாரும் எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.

    பாலியல் பிரச்சனை உருவெடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டுத்திறன் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் எதற்காக இந்த மையங்கள். பெண்களுக்கு எதிராக ஒரு வன்கொடுமை நடந்தால் அது எந்த ஜாதியோ, சமுதாயமோ, கட்சியோ எதுவும் பார்க்காமல் அந்த சமுதாயத்திற்கு எதிரான வன்கொடுமை என்று பார்க்க வேண்டும், அதில் அரசியல் செய்யக்கூடாது.

    பாலியல் விவகாரத்திற்கு எதிராக த.வெ.க. தலைவர் விஜய் குரல் கொடுத்து உள்ளார். இதேபோல் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் குரல் மட்டும் கொடுக்கக்கூடாது, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள். த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் பதில் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
    • கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநி லங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    அவ்வாறு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில் அருகில் உள்ள கடலில் புனித நீராடி குடும்பத்தோடு சுவாமியை தரிசனம் செய்தது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

    எப்போதும் நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு வண்ணத்தில் அலைகள் அதிகமாக காட்சியளிக்கிறது.


    கடற்கரை பகுதிகளில் கருப்பு நிறங்கள் படிந்த மணல்கள் ஆங்காங்கே கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளன.

    தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதால் ஒரு வாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும்.

    அப்படி கடல் சீற்றம் ஏற்படும் நேரங்களில் கடலின் அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறி கடல் தண்ணீர் குழம்பிய நிலையில் கருப்பு நிறத்தில் மாறி காணப்படும். அதனால் தான் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு கரை அரிப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி வரை ஆழம் காணப்பட்டது. அந்த நிலைமை சற்று மாறி இன்று சுமார் 3 அடி அளவுக்கு அரிப்பு காணப்படுகிறது.


    இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடற்கரையில் பேரிகாடு கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அனாலும் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

    • சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • தலைமை செயலகத்தில் இன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன் கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

    முன்னதாக, தலைமை செயலகத்தில் இன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
    • 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

    மதுரை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் ஈடுபட்ட ஞானசேக ரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று யார் அந்த சார்? என்ற கேள்விக்கு விடை காண போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

    மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கோஷமும் வலுத்துள்ளது. எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து சட்டம்-ஒழுங்கை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திைர பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சியை செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க. மகளி ரணி சார்பில் மாநில தலைவர் உமாரதி தலைமை யில் மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    இதையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திலகர் திடல் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன்படி மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள செல்லத்தம்மன் கோவிலில் மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் மகளிரணியை சேர்ந்த 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.


    மேலும் கண்ணகி நீதி கேட்டு போராடியபோது அம்மனுக்கு மிளகாய் வற்றல் அரைத்து பூசிய நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் அணியினர் மிளகாய் வற்றல் அரைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் கண்ணகி நீதி கேட்டு போராடியை நினைவூட்டும் வகையில் கையில் சிலம்பு ஏந்தி வந்தனர்.


    தொடர்ந்து டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்க ணக்கான மகளிரணி நிர்வா கிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    முன்னதாக பேரணி தொடங்குவதாக அறி விக்கப்பட்ட சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • மதுரையில் 2 குழுவினருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் போலீசார் செல்லத்துரை, சுரேஷ், அருண், செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் லிங்கம் பட்டியில் உள்ள அந்த வீட்டை மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர்.

    அதில் அந்த வீட்டில் குற்றவாளிகள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களைப் பிடிக்க அந்த வீட்டுக்கு சென்றபோது வீட்டில் இருந்தவர்கள் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கதவைத் திறக்க மறுத்துள்ளனர். கதவை உடைத்து அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் முயன்ற போது, திடீரென கதவை திறந்து கண்ணிமைக்கும் நொடியில் வீட்டில் இருந்து 3 பேர் தப்பி சென்றனர்.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மதுரை புது மீனாட்சி நகரை சேர்ந்த அழகுராஜா என்ற கொட்டு ராஜா (வயது 29), மதுரை கீரை துறையை சேர்ந்த முனியசாமி (50) மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (28) என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட அழகுராஜா மீது 3 கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளும், முனியசாமி மீது 4 கொலை வழக்குகள் உள்ளிட்ட 11 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தங்கராஜ் மீது 4 கஞ்சா வழக்குகளும் உள்ளது.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், 15 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    பிரபல ரவுடிகள் இங்கு ஏன் தங்கியிருந்தனர்? வேறு யாரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் 2 குழுவினருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இதில், கோவில்பட்டியில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    மதுரையில் தங்களுக்கு எதிர் முகாமை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் இருந்ததால் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியில் வீடு எடுத்து பதுங்கி இருந்ததாக அவர்கள் கூறினர். ஆனால், வேறு யாரையும் கொலை செய்யத் திட்டமிட்டு பதுங்கி இருந்தனரா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

    • தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம்.
    • குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டு புயல் மழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.

    அங்கு கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.


    ஊட்டியில் அவலாஞ்சி, தலைகுந்தா, காந்தள் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் உறை பனி நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலத்தை பார்க்க முடிகிறது.

    சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், புல்வெளிகளில் படர்ந்துள்ள பனிகளை கையில் எடுத்து விளையாடி வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×