என் மலர்tooltip icon

    இந்தியா

    • தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது.

    ஹாவேரி:

    ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தை சேர்ந்தவர் ரூபா(வயது 30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ரூபாவை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவ அறையில் படுக்கை வசதி பற்றாக்குறையாக இருந்ததால், ரூபா பிரசவ அறையின் வெளியில் நடைபாதையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

    பின்னர் அவருக்கு கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடுமையான வலியால் துடித்த ரூபா இருக்கையில் அமர முடியாமல் எழுந்து அங்கும் இங்கும் வலியில் துடித்தப்படி நடந்து கொண்டிருந்தார். அவர் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது. பின்னர் தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததால் அந்த குழந்தை உடனே இறந்துவிட்டது.

    ரூபா கடுமையான பிரசவ வலியில் அலறி துடித்த போதிலும் டாக்டர்கள் அனைவரும் அலட்சியமாக செயல்பட்டதாகவும், அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததும் தான் குழந்தை இறப்புக்கு காரணம் எனவும் ரூபாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

    பின்னர் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    கார் மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த மருத்துவ மாணவர்களான சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம்.
    • கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    சென்னை:

    மதுரை, கோவை மாநகரங்களில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து உள்ளது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    கோவில் நகர் 'மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.



    சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்!

    தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்துள்ளார். 

    • குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

    அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ச்சியான சூழலும் நிலவியது. மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்டம் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி மற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியான நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலையிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.

    இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, மத்தளம்பாறை, இலஞ்சி, குத்துக்கல்வலசை, வல்லம், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக செங்கோட்டையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    குற்றாலத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள்ளும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாலை மெயின் அருவியில் சற்று தண்ணீர் அதிகரித்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது.
    • மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது.

    ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.

    இந்த கால அட்டவணைப்படி, இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்பட உள்ளது. ரெயில் இயக்கப்பட்ட பின்னர், நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    இலங்கை கடலோர பகுதி அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து, நேற்று காலை 8.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவியது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.

    இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதன்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும் அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    • 5 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
    • எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் கடந்த நவம்பர் 16 அன்று இடிந்து பாறைகள் விழுந்ததில் 15 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    இந்நிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணியில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    பாறை இடிபாடுகளை அகற்ற முடியாததால் மீட்புப்பணிகள் கைவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

    எஞ்சிய 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
    • ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் மோடசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு நாள் குழந்தை அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது.

    மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குழந்தையுடன், குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (38), டாக்டர் சாந்திலால் ரெண்டியா (30), மற்றும் செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • 94.74 சதவீதம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
    • 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது வரை 6,07,41,484 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 94.74 சதவீதம் ஆகும். இவற்றில் 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 13.02 சதவீதம் ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    68,467 வாக்குச்சாவாடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    12 மாநிலங்களிலும் 50.25 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 98.54 சதவீதம் ஆகும் எனவும், இவற்றில் 11.76 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளது.

    • டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 547 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு:

    ரஞ்சி டிராபி தொடரின் 5-வது சுற்று போட்டி நடந்து வருகிறது. கர்நாடகாவின் ஹூப்ளியில் கர்நாடகா, சண்டிகர் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 547 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்மரண் ரவிச்சந்திரன் சிறப்பாக ஆடி இரட்டை சதம் கடந்து 227 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட நிலையில் கருண் நாயர் 95 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் கோபால் 62 ரன்னும், ஷிகர் ஷெட்டி 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மனன் வோரா பொறுப்புடன் ஆடி சதமடித்து 106 ரன் எடுத்தார்.

    கர்நாடக அணிச் ஆர்பில் ஷ்ரேயாஸ் கோபால் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    பாலோ ஆன் பெற்ற சண்டிகர் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடக அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், சண்டிகர் 2வது இன்னிங்சில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 185 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.

    கர்நாடக அணியின் ஷ்ரேயாஸ் கோபால் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    ×