என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை
- குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ச்சியான சூழலும் நிலவியது. மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்டம் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி மற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியான நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலையிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.
இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, மத்தளம்பாறை, இலஞ்சி, குத்துக்கல்வலசை, வல்லம், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக செங்கோட்டையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குற்றாலத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள்ளும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாலை மெயின் அருவியில் சற்று தண்ணீர் அதிகரித்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






