என் மலர்tooltip icon

    இந்தியா

    • மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து வர வேண்டும்.
    • மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    அவருக்கு விழா கமிட்டியினரும், கிராம மக்களும் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்களின் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    2028-ம் ஆண்டு வரும் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக நிச்சயமாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

    அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வருவது என்பது கூடாது. கடுமையாக உழைத்து அனுபவரீதியாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசியலுக்கு வர வேண்டும். சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும்.

    சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என்று நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல். மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக் கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வருகிற 5-ந் தேதி சேப்பாக்கத்தில் மோதுகிறது.
    • www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 5-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்து அனுமதி வழங்கப்படும்.
    • 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 202 ரெஸ்டோ பார்கள் உட்பட மொத்தம் 396 சில்லரை மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

    இந்த மதுபான கடைகள் இயங்குவதற்கு கலால் துறை சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதுக்கடையும் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த நிதி ஆண்டிற்கு முதல் நிதி ஆண்டான மார்ச் 31-ந் தேதிக்குள் ரூ.6 லட்சத்தை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்த முள்ள 396 சில்லரை மதுபானக் கடைகளில் 381 கடைகள் உரிமத்தை புதுப்பித்தன. உரிமம் புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 மதுபான கடைகளுக்கு கலால் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 15 கடைகளும் உரிமத்தை புதுப்பிக்க வில்லை.

    இதையடுத்து கலால் உதவி ஆணையர் மேத்யூஸ் பிராங்ளின் உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர்.

    இந்த கடைகள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன் 10 சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்த பின் திறக்க அனுமதி வழங்கப்படும்.

    • கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.

    பெங்களூரு:

    சித்தராமையா தலைமையிலான இந்த அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

    அதுபோல் பெங்களூருவில் குப்பை கழிவுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய நிதி ஆண்டு தொடங்கிய முதல் நாளான நேற்று முதலே விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-திருப்பதி, பெங்களூரு-தேவனஹள்ளி சாலைகளில் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துள்ளது.

    இந்த விலையை உயர்த்திய பிறகும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.

    பால் விலை, மின்சார கட்டணம், குப்பைக்கு வரி விதிப்பு ஆகியவை நேற்று அமலுக்கு வந்த நிலையில் அரசு தற்போது டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    சென்னை:

    தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந்தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயர்ந்து வந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

    அந்த வகையில் கடந்த 28-ந் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. அதேபோல் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.520 அதிகரித்து இருந்தது. இப்படியாக விலை உயர்ந்து, நேற்றும் அதிரடி உச்சத்தை காட்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து425-க்கும், ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று, கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,510-க்கும் சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையாகிறது.



    தங்கம் விலையை போல, வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-04-2025- ஒரு கிராம் ரூ.114

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    29-03-2025- ஒரு கிராம் ரூ.113

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    • ஏப்ரல் 18-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது.
    • சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து விளக்கு ஏற்றினார்.

    பின்பு காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றம் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறுகிறது.

    மறுநாள் (11-ந்தேதி) பகல் 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருவிழா கொடியிறக்கப்படுகிறது. அத்துடன் 10 நாட்கள் ஆராட்டு திருவிழா முடிவடைகிறது.

    அதன் தொடர்ச்சியாக சித்திரை விஷூ பண்டிகை மற்றும் மாதாந்திர பூஜை வருவதால் ஆராட்டு திருவிழாவுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படவில்லை. ஏப்ரல் 14-ந்தேதி சித்திரை விஷூ திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தந்திரிகள் மற்றும் மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கைநீட்டம் வழங்கு வார்கள்.

    சித்திரை விஷூ மற்றும் மாதாந்திர பூஜை முடிவ டைந்து ஏப்ரல் 18-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது. பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகை அடுத் தடுத்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.

    அந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் என்றும், சித்திரை விஷூ தினத்தில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப் படும் எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித் துள்ளது.

    பக்தர்கள் 18 நாட்களும் வழக்கமாக நடக்கும் பூஜை களில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம், இரு முடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டும் சாமி தரிச னத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

    சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்ற நடைமுறை கடைபிடிக்கப் படுகிறது. உடனடி சாமி தரிசனத்துக்காக பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. பங்குனி ஆராட்டு திருவிழா இன்று தொடங்கியிருப்பதை தொடர்ந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு
    • வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு

    ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் நேற்று மீண்டும் தொடங்கியது. வரும் 4-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதனையொட்டி பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்று வலுவான எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

    • ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கடலூர் மாவட்டம் எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறார்கள், லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன்களை பறித்து செல்வதாக கூறிய ஓட்டுநர்கள், ஜி-பே பாஸ்வேர்டையும் வாங்கி சென்று பணத்தை திருடுவதாக தெரிவித்தனர்.

    ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பாதிப்பை உருவாக்கும்.
    • பிரதமரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தங்களை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பாதிப்பை உருவாக்கும். பிரதமரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், கூட்டு நடவடிக்கை குழு தீர்மானங்களை பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் நேரில் சந்தித்து வழங்க நேரம் கேட்டு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.



    • தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதால் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
    • தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    விருதுநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல் சாம்பலாயின.

    விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இன்று அதிகாலையில் ராஜா என்பவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதால் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல் சாம்பலாயின. தீ விபத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    • உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர்.
    • மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    சென்னை:

    வங்கி கிளை தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங், கார்டு புகார்கள் குறித்த விவரங்களை அறிய வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் வங்கி வாயிலாக வழங்கப்பட்டு உள்ளன.

    வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாத பட்சத்தில் பலர் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை பதிவிட்டு வாடிக்கையாளர் சேவை மைய எண்களை பெறுவர். அதில் சில செல்போன் எண்கள் வரும். இவ்வாறு தேடப்படும் எண்கள் சமீப நாட்களாக மோசடி கும்பலால் மாற்றப்படுகிறது. உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர். மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை தேட வேண்டாம். எனவே வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்வது சரியானதாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • கூடுதல் ஊழியர்கள் இல்லாததால், இ-பாஸ் சோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களில் வரும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

    தற்போது கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.

    இந்த கட்டுப்பாடு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதனை செய்கிறார்கள். இதன் பின்னரே மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல் கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார் குன்னு, கக்கநல்லா ஆகிய சோதனை சாவடிகளிலும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

    இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். 

    இந்நிலையில் 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இ-பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு உள்பட பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெறுகிறது.

    ×