என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
    • பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

    ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம். 

    குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...

    உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள். 

    300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்

    பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன. 

    10,000 சுவை மொட்டுகள்

    புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.


    குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்

    வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்

    பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

    புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்

    பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.

    • கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
    • முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சிறியதாக இருந்தாலும் ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்தாக இருப்பதுதான் முட்டை. ஒவ்வொரு நாளும் 27% அமெரிக்கர்கள் முட்டையை வேகவைத்தோ, ஆம்லெட்டாகவோ அல்லது சாண்ட்விச்சின் ஒரு பகுதியாகவோ எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் முட்டையை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடும்போது உடலில் நிகழும்  மாற்றம் என்ன? என்பது குறித்து பார்ப்போம். 

    ஒரு முட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

    கலோரிகள்: 71

    மொத்த கொழுப்பு: 5 கிராம்

    புரதம்: 6.24 கிராம்

    வைட்டமின் பி12: 0.5 மைக்ரோகிராம்

    வைட்டமின் டி: 1.24 மைக்ரோகிராம்

    கால்சியம்: 24 மி.கி.

    கோலின்: 169 மி.கி. 


    கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்

    முட்டையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள்

    புரதம்

    முட்டையில் அதிகளவு புரதம் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் பசியை கட்டுப்படுத்தும். முட்டைகள் தசைகளைப் பராமரிக்கவும், திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதியில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

    வைட்டமின் டி

    முட்டையில் நிறைந்துள்ள பலவிதமான வைட்டமின்கள் பல நன்மைகளைத் தருகின்றன. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பயோட்டின் (Biotin), மற்றும் ஃபோலேட் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

    கோலின்

    செல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான கோலின், முட்டையில் உள்ளது. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிப்பதைத் தவிர, கோலின் கொழுப்பைக் கடத்துவதற்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, முட்டைகள் கருவின் வளர்ச்சிக்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    வைட்டமின் பி12

    இரண்டு முட்டைகள் ஒரு நாளைக்குத் தேவையான பி12- ல் மூன்றில் ஒரு பங்கை கொடுக்கின்றன. இந்த வைட்டமின் "சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும், நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பதற்கும் அவசியம்.

    ஆக்ஸிஜனேற்றிகள்

    முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.   

    தினசரி முட்டை எடுத்துக்கொள்ளலாமா?

    ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது. வயதானவர்கள், அதிக புரதத் தேவைகள் உள்ளவர்கள் ஒருநாளைக்கு இரண்டு முட்டை எடுத்துக்கொள்ளலாம். எப்போதாவது அதிகமாக சாப்பிடுவது பிரச்சனையில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கும்மேல் சாப்பிடுவது நீரிழிவு, அதிக கொழுப்பு அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்ததாக இருக்காது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம். புரதச்சத்துக்கு வெறும் முட்டையை மட்டும் நம்பியில்லாமல், மீன் போன்ற மற்ற புரதச்சத்து நிறைந்தவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.   

    • ஆரஞ்சு தோல் பொடி இயற்கையிலேயே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது.
    • ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும அழகையும் கூட்டுகிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழத்தை பயன்படுத்துவதால் சருமம் அடையும் நன்மைகள் குறித்து பார்ப்போம். 

    முகப்பரு தடுப்பு

    ஆரஞ்சு தோல் பொடி முகப்பருவைக் குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் முகப்பருவை உலர்த்தவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முகத்துளைகளில் உள்ள அழுக்கை அகற்றுகிறது. இறந்த செல்களை அகற்றி, கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. 

    வயதாகும் அறிகுறிகளை கட்டுப்படுத்தும்

    ஆரஞ்சில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஹைப்பர் பிக்மென்டேஷன், கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

    நச்சுத்தன்மை வெளியேற்றம்

    ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இதனால் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

    நீரேற்றம் 

    ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது சருமத்திற்கு அவசியம். இதில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

    பிரகாசம்

    ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி மற்றும் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை பிரகாசமாக்கி இயற்கையான பளபளப்பை அளிக்கின்றன. இது இறந்த சரும செல்களை மெதுவாக நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது. சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரும அமைப்பை மென்மையாக்கவும் செம்மைப்படுத்தவும் உதவுகிறது. அதுபோல இதில் உள்ள வைட்டமின் சி, உங்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது.


    ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி & இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன

    வீக்கத்தை குறைக்கும்

    ஆரஞ்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அவை பல்வேறு காரணிகளால் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குணப்படுத்த உதவுகின்றன. 

    புத்துணர்ச்சி அளிக்கும்

    ஆரஞ்சு எப்போதும் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி முகத்துளைகளை இருக்குகிறது.

    ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

    ஆரஞ்சுகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. 

    சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழத்தை சேர்ப்பது எப்படி?

    தினசரி உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். ஆரஞ்சில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஆதரிக்கிறது. அல்லது காலையில் ஆரஞ்சை சாறாக எடுத்துக்கொள்ளலாம். சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும் வைட்டமின் சி கிடைக்கும். சாற்றின் சக்கையை ஸ்கரப்பராகவும் முகத்தில் பயன்படுத்தலாம். அது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அல்லது ஆரஞ்சு துண்டுகளை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ஒரு நல்ல வழியாகும். 

    முகத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

    ஆரஞ்சு கலந்த ஃபேஷ் வாஷ்களை பயன்படுத்தலாம். ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து, அதனை தயிர் போன்ற மற்ற அழகுக்கு நன்மை பயக்கும் பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சு சாற்றை தேன் அல்லது தயிருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடலாம். ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து மாஸ்க்காக பயன்படுத்தலாம். 

    • தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்!
    • பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும்.

    நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் சென்று மனது கொஞ்சம் கவலையாக இருக்கிறது எனக்கூறினால், பலரின் அறிவுரை "வெளியே சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்பதுதான். பலரும் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? நீண்ட தொலைவு பயணம் செய்வது மனதுக்கும், உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்தவகையில், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் அடிக்கடி பயணம் செல்வது அவர்களுக்கு நல்ல ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் தருமாம். தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாம். தொலைதூர பயணத்தால் நாம் பெறும் பலன்கள் குறித்து பார்ப்போம். 

    குறையும் மன அழுத்தம்

    வேலைக்கு செல்வோர் அல்லது குடும்பத்தை விட்டு வெளியூர்களில் இருப்போர், நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. காரணம் அவர்களின் வாழ்க்கைச்சூழல்... ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பது, வெளியில் அதிகம் செல்லாதது, வேலையைவிட்டு வந்தால் வீடு, வீட்டைவிட்டால் அலுவலகம், மற்ற வேலைகளை பார்ப்பது, சாப்பிடுவது இதற்கே நேரம் சரியாக இருக்கும். மனிதர்களிடம் அதிகம் பேச நேரம் இருக்காது. ஒருவரிடம் பேசும்போது நம் மனதில் இருக்கும் எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். பேசாதபோது அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளே இருக்கும். மேலும் சோகமான நிகழ்வு என்றால் அதை மீண்டும் மீண்டும் நினைத்து நம்மை நாமே அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்வோம். உணர்ச்சி ரீதியான அதிகப்படியான சுமையை சுமப்போம். இதன் விளைவாக பதற்றம் மற்றும் மன சோர்வு ஏற்படலாம்.

    மேலும் அதிகப்படியான தனிமை ஒருவித வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும். எதன்மீதும் ஆர்வம் இருக்காது. இந்த மனநிலையில் இருந்து மாற்றம் தேவை என்றால், இந்த அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் ஒரு பயணம் அவசியம். அது சொந்த ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம், செல்லாத ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம் அல்லது நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வதாகவும் இருக்கலாம். பயணத்தில் மனிதர்கள் இல்லையென்றாலும் நாம் இயற்கையில் இருக்கும் எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வோம். இயற்கை சூழலில் நமது மனமும், உடலும் ஓய்வெடுக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் பயணம் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகரிக்கும். இது வேலையில் கவனம் செலுத்த உதவும். 

    படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்

    அனுபவங்களைப் போலவே இயற்கையும் நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்களா? என தெரியவில்லை. பூங்காவிற்கோ அல்லது பசுமையான, பசுமை நிறைந்த இடத்திற்கோ நாம் சென்றால் மனதில் என்ன கவலைகள் இருந்தாலும் அது நினைவில் வராது. அதாவது எந்த எண்ண ஓட்டமும் மனதில் இருக்காது. வெற்றிடமாக எதுவும் தோன்றாது. அமைதியாக உட்கார்ந்திருப்போம். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். ஒரு தெளிவு கிடைக்கும். மனம் தெளிவாக, அமைதியாக இருக்கும்போது பிரச்சனைகளுக்கான தீர்வு எளிதில் கிடைக்கும். நிறைய தோன்றும். படைப்பாற்றால் அதிகரிக்கும். எழுத்தாளர்கள் பலரும் அமைதியான, பசுமையான சூழலைத்தான் விரும்புவார்கள். 

    உடல்நலன் மேம்படும்

    இயற்கை சூழலில் இருக்கும்போது கார்டிசோல் அளவு குறைகிறது. கார்டிசோல் அளவு குறைந்தால் மனஅழுத்தம் குறையும். அடிக்கடி வெளியே இருப்பது இதய நோய் விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும். மேலும் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டி அளவு சூரிய ஒளியால் அதிகரிக்கும். 

    மன ஆரோக்கியம்

    இயற்கை, மன அழுத்தம் மற்றும் கோப உணர்வுகளைக் குறைக்க உதவும். உடற்பயிற்சியும் இதற்கு உதவும், ஆனால் நீங்கள் வெளியில் இருக்கும்போது இது இன்னும் சிறந்தது. பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வெளியில் இருப்பது சமூகத்தோடு இணங்கச்செய்யும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமென்றால், ஒரு பூங்காவுக்கு செல்கிறோம் என்றால் அங்கு நமக்கு தெரியாதவர்கள் சிலரை பார்ப்போம். இரண்டு, மூன்று நாட்கள் பூங்காவிற்கு சென்றால் அவர்களுடன் ஒன்றிணைவோம். வெளியூர்களுக்கு செல்லும்போது முகம் தெரியாதவர்களோடு பேசுவோம்.


    பல கவலைகளுக்கு ஒரேமருந்து பயணம்

    இது மனிதர்களிடம் எளிதில் ஒன்றாக உதவும். கூடுதலாக, நீங்கள் தொடர்ந்து வெளியே இருக்கும்போது நன்றாக தூங்குவதைக் காணலாம். இயற்கை ஒளியில் தினமும் படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியில் வெளியே செல்வதை உறுதி செய்வதன் மூலம், இரவில் தூங்கும் திறனை மேம்படுத்தலாம். பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறைவான மன உளைச்சலைக் கொண்டுள்ளனர். அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர்.  மேலும் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டுள்ளனர். இயற்கையின் மீதான வெளிப்பாடு நாள்பட்ட நோயால் ஏற்படும் இறப்பைக் குறைக்கும்.

    பயணம் செல்லவில்லையென்றால், என்ன செய்யலாம்?

    ஒருநாளைக்கு குறைந்தது 5 நிமிடமாவது சூரிய ஒளியில்படுங்கள். காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு கொஞ்சநேரம் புல்வெளியில் நடந்து செல்லுங்கள். பூங்காக்கள் அல்லது வெளியில் மதிய உணவை சாப்பிடுங்கள். தொலைபேசியில் பேசினால் வெளியே நின்று பேசுங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியாவிட்டாலும், பூங்காவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில் உட்காருங்கள். வீட்டு முற்றத்திலோ, முன்புறமோ செடி, கொடிகளை நடுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது மனதுக்கு நெருக்கமானவரிடம், யாராக இருந்தாலும் சரி மனம்விட்டு பேசுங்கள். 

    • பெண்களின் தங்கம் என ஷியா வெண்ணெய் அழைக்கப்படுகிறது.
    • நீச்சல் வீரர்கள் பலர், ஷியா வெண்ணெயை தலையில் தடவிக்கொண்டுதான் தண்ணீரில் இறங்குகின்றனர்!

    ஷியா வெண்ணெய் என அழகு சாதனப் பொருட்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் நம்மில் பலருக்கு தெரியாது. ஆப்பிரிக்காவில் ஏராளமாகக் காணப்படும் ஷியா மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுவதுதான் ஷியா வெண்ணெய். ஷியா மரத்தின் பழத்தில் உள்ள விதைகள் எடுக்கப்பட்டு, அவை நசுக்கப்பட்டு, வேகவைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு இந்த வெண்ணெய் எடுக்கப்படுகிறது. தோல் பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக ஷியா வெண்ணெய் முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் நம்ப முடியுமா? ஆம். கிளியோபாட்ராவின் காலத்தில் இருந்து ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிளியோபாட்ரா, தனது அழகின் ரகசியங்களில் ஒன்றாக இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது பெண்களின் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. தோல் மட்டுமின்றி முடி பராமரிப்பிற்கும் ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஷியா வெண்ணெயில் உள்ள ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான பல நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். 

    சருமத்திற்கு தரும் நன்மைகள்

    ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த மாய்ச்சுரைசர் ஆகும். குறிப்பாக குளிர்காலங்களில் இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. ஷியா வெண்ணெயில் நிறைந்துள்ள ஒலிக், ஸ்டீரிக், லினோலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, ஈ, சி ஆகியவை, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கின்றன. ஷியா வெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், அதன் குறிப்பிடத்தக்க மென்மை மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் வறண்ட சருமத்தில் விழும் விரிசல்களை குணப்படுத்த உதவுகின்றன. குறிப்பாக குதிகால் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற பகுதிகளை குணப்படுத்த உதவுகின்றன. 


    பல அரசிகள், தங்கள் சரும பராமரிப்பிற்கு ஷியா வெண்ணெயைப் பயன்படுத்தியிருக்கின்றனர்!

    முடிக்கு தரும் நன்மைகள்

    ஷியா வெண்ணெய் முடிக்கு கண்டிஷனராக பயன்படுகிறது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடி புத்துயிர் பெற உதவுகிறது. முடியின் நுனியில் உள்ள கிளைத்த முடிகளை சரிசெய்கிறது. மேலும் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. சூரிய கதிர்களின் சேதத்திலிருந்து முடியை பாதுகாக்க ஆப்பிரிக்காவில் பாரம்பரியமாக ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் வீரர்கள் பலரும் ஷியா வெண்ணெயை தலையில் தடவிகொண்டு, பின்தான் தண்ணீரில் இறங்குகின்றனர். காரணம், குளோரின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் ஷியா வெண்ணெய் பாதுகாக்கும்.

    ஆரோக்கிய நன்மைகள்

    ஷியா வெண்ணெய் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிரிக்க மருத்துவத்தில் தசை வலி மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாத நோய் போன்றவைகளுக்கு நன்மை பயக்கும். வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, தோல் ஒவ்வாமைகளை ஆசுவாசப்படுத்தவும், பூச்சி கடிக்கு சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவான தோல் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வை வழங்குகிறது. 

    • ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாம்!
    • ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.

    ஆலிவ் எண்ணெய், சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இருந்தபோதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் ஆலிவ் எண்ணெயின் முழு பலனையும் அறிந்தால் கண்டிப்பாக அதனை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். ஆலிவ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம். 

    மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்

    இதயத்திற்கு நன்மை பயக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (Monounsaturated Fats - MUFAs) ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ளது. மேலும் 13.8% நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. அதேசமயம் 10.5% பாலிஅன்சாச்சுரேட்டட் உள்ளது. அதாவது ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.  இருப்பினும் ஆலிவ் எண்ணெயின் முக்கிய கொழுப்பு அமிலம் ஒலிக் அமிலமாகும். நிறைவுறா கொழுப்பான ஒலிக் அமிலம் மொத்த எண்ணெய் உள்ளடக்கத்தில் 71% ஆகும். ஒலிக் அமிலம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்களில் கூட நன்மை பயக்கும் பண்புகளை விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

    ஆக்ஸிஜனேற்றிகள்

    1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில் தினசரி மதிப்பில், 13% வைட்டமின் E-யும், 7% வைட்டமின் K-யும் உள்ளது. மேலும் பாலிஃபீனால்கள், வைட்டமின் E, ஸ்குவாலீன் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன. இவை இருதய மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதோடு, ரத்தக் கொழுப்பை ஆக்சிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

    அழற்சி எதிர்ப்பு பண்புகள்

    புற்றுநோய், இதய நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, வகை 2 நீரிழிவு நோய், அல்சைமர், கீல்வாதம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு அடிப்படை காரணம் நாள்பட்ட அழற்சி எனக் கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த நோய்களுக்கு எதிராகப் போராடுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் முக்கியமானது ஓலியோகாந்தல் கலவை. இது இப்யூபுரூஃபன் (ibuprofen) போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் போலவே செயல்படுவதாகவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம், சி-ரியாக்டிவ் புரதம் அழற்சிகளைக் குறைக்கின்றன. 

    பக்கவாதத்தை தடுக்க உதவும்

    இரத்த உறைவு அல்லது இரத்தப்போக்கு காரணமாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, மரணம் ஏற்படுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது. 2014ஆம் ஆண்டு 841,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆலிவ் எண்ணெய் சாப்பிட்ட இவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 2020ல் ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளலுக்கும், பக்கவாத ஆபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது. 


    புற்றுநோய் அபாயத்தை ஆலிவ் எண்ணெய் குறைக்கிறது

    இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், மத்திய தரைக்கடல் நாடுகளில் இதய நோய் அபாயங்கள் குறைவாக இருந்தன. இது அந்நாடுகளின் உணவுமுறை பழக்கத்தை ஆய்வுசெய்ய வழிவகுத்தது. அப்போது அவர்கள் உணவில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் முக்கியப் பொருளாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஆலிவ் ஆயில் ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டது. 

    எடை இழப்பு

    ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கின்றன என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. காரணம் இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA) பசியைக் கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இருப்பினும், எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதையும், ஆலிவ் எண்ணெய் விதிவிலக்கல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  

    அல்சைமர் நோயை எதிர்த்து போராடும்

    அல்சமைர் நரம்புச்சிதைவு நிலைகளில் ஒன்றாகும். இது மறதி நோய்க்கும் வழிவகுக்கும். அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களுக்குள் பீட்டா-அமிலாய்டு (Beta-amyloid) பிளேக்குகள் குவிவதாகும். ஆலிவ் எண்ணெய் இந்த பீட்டா- அமிலாய்டு சுரப்பிகளை தடுக்கும் என்றும், அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

    வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்

    ஆலிவ் எண்ணெய் வகை 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவும். அதுபோல ஆலிவ் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் CRP (சி-ரியாக்டிவ் புரதம்) அளவைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி) பாக்டீரியாவுக்கு எதிராக போராடக்கூடிய பண்பு ஆலிவ் எண்ணெயில் உள்ளது.  

    • சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க தக்காளி உதவும்.
    • ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

    சமையலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பயன்படுகிறது தக்காளி. உங்களின் செயற்கை அழகு சாதனப் பொருட்களை தள்ளிவைத்துவிட்டு தக்காளியை போட்டாலே போதும். சரும அழகை மெருகூட்டலாம். தக்காளி சருமத்திற்கு எப்படி நன்மை பயக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். 

    இறந்த செல்களை நீக்கும்...

    தக்காளியை தொடர்ந்து முகத்தில் தடவினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். தக்காளியில் இயற்கையான நொதிகள் உள்ளன. அவை சருமத்தை உரிப்பதற்கு (exfoliating) உதவுகின்றன. இந்த நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

    முகப்பரு

    தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. மேலும், இது அமிலத்தன்மை கொண்டது. இது உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க உதவுகிறது. முகப்பரு பாதிப்புள்ள சருமத்தில் தக்காளியைத் தொடர்ந்து தடவுவது, அதன் இயற்கையான பண்புகளால் முகப்பரு வெடிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும். 

    எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது

    தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது. தக்காளியை இரண்டாக வெட்டி, அந்தத் துண்டை முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் பச்சை தண்ணீரில் முகத்தை கழுவவும். எண்ணெய் பசை இல்லாத மென்மையான சருமத்திற்கு இதை தொடர்ந்து செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறை பச்சை தக்காளியை முகத்தில் தேய்க்கலாம்.

    வெயில் பாதிப்பு

    சூரியனின் புறஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துவதிலும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவதிலும் தக்காளி சிறந்தது. சருமத்தின் பழுப்பு நிறத்தை நீக்கவும் உதவுகிறது. 


    தக்காளியை தேன், மஞ்சள், சர்க்கரையுடனும் பயன்படுத்தலாம்

    சருமத்தை ஆற்றும்

    சருமத்திற்கு அவசியமான பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை தக்காளியில் உள்ளன. இது தோல் அழற்சியை தணிக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவை எரிச்சலூட்டும் சருமத்திற்கு நல்லது.

    வயதான அறிகுறியைக் குறைக்கும் தக்காளி

    சுற்றுசூழல் மாசு, நமது உணவுமுறைகள், நாம் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனப்பொருட்கள் இளமையிலேயே சருமத்திற்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதை சரிசெய்ய தக்காளி மிகவும் உதவியாக இருக்கும். வயதானதற்கான பொதுவான அறிகுறிகளில் கருவளையங்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை அடங்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் டி இவற்றை குறைக்க உதவுகிறது. 

    விளைவுகள்

    தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும், சிலருக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். தக்காளி அமிலத்தன்மை கொண்டது, எனவே அதிகமாக தக்காளி உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். தக்காளியை முகத்தில் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால் தடவுவதை நிறுத்துங்கள். தக்காளியைப் பயன்படுத்திய பிறகு முகம் சிவத்தல், அரித்தல் அல்லது தோல் எரிச்சல் ஏற்பட்டால், பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

    • குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது.
    • குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    பிறந்தது முதல் தவழும்வரை குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை அடிக்கடி எதுக்களிப்பது, சாப்பிட்ட உடன் வாந்தி எடுப்பது. இது நோய் அல்ல. ஆனால் உணவு உடனேயே வெளியேவந்தால், போதுமான அளவு வயிறு நிறையாது. சத்தும் கிடைக்காது. பிறந்த குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் அவர்களின் வயிற்றில் உள்ள வால்வுகள் இணக்கமாக வேலை செய்யாது. இதன் விளைவாக, தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் காற்றை எளிதில் விழுங்கலாம். இந்த அதிகப்படியான காற்று அசௌகரியத்தை ஏற்படுத்தி, உணவளித்த பிறகு எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் வழிவகுக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடனேயே அதனை வெளியே உமிழாமல் இருக்க தாய்மார்கள் தங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நுட்பங்களை கொஞ்சம் மாற்றினாலே அவற்றை தடுக்கலாம். 

    கொஞ்சம் கொஞ்சமாக...

    குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது. இதனால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அதிகமாக உணவளிக்காமல், நேர இடைவெளி எடுத்து கொடுக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இது விரைவாகவும், எளிதிலும் ஜீரணமாக உதவும். 

    தாய்ப்பால் கொடுத்த உடன் படுக்க வைக்கக்கூடாது

    பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பால் கொடுத்தவுடன் உடனேயே குழந்தையை படுக்கவைக்கக்கூடாது. கொஞ்சநேரம் தோளில் வைத்துக்கொண்டு, பின்னர் படுக்கவைக்கலாம். குழந்தையை உடனடியாக படுக்க வைத்தால், எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.  

    அளவு

    நாம் குழந்தைகளுக்கு எந்த அளவு பால் அல்லது உணவுக் கொடுக்கிறோம் என்பது மிக முக்கியம். பால் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுதால், பசிக்கிறது என்று மீண்டும் பால் கொடுப்பார்கள். அப்போது வயிற்றில் இடம்கொள்ளாமல் உணவு மேலே எகித்து கொண்டுவரும். அதுபோல குழந்தைகளை வேகமாக பால்குடிக்க விடக்கூடாது. புரை ஏறிவிடும். இதனால் குடித்த மொத்த பாலும் வெளியே வந்துவிடும். குழந்தையை மெதுவாக மட்டுமே பால் குடிக்க பழக்க வேண்டும். அதேபோல் ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது.


    குழந்தைகளுக்கு ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது

    சிகரெட் புகையை தவிர்க்க வேண்டும்

    சிகரெட் புகை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். சிகரெட் புகையை குழந்தை சுவாசித்தால், வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தியாக வழிவகுக்கும். இதனால் குழந்தைக்கு அருகில் யாரேனும் புகைபிடித்தால் அவர்களை தள்ளி செல்ல சொல்லுங்கள். அல்லது குழந்தையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். 

    கால்சியம் குறைபாடு

    தூக்கத்தில் சிரமம் அல்லது இருமல், அடிக்கடி எச்சில் துப்புதல், வாந்தி எடுத்தல் போன்றவை குழந்தைக்கு கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதனால் கால்சியம் உள்ள உணவுப்பொருட்களை குழந்தைக்கு வழங்கலாம்.

    • வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன.
    • வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற உப்பு சேர்க்காத வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.

    ஆரோக்கிய உணவுமுறை பட்டியல் என்று இப்போது எடுத்தால் அதில் கண்டிப்பாக நட்ஸ் இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது நமது உணவுகள் சத்தானதாக இல்லை. அதனால் உடல் ஆரோக்கியத்தைப்பெற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட நட்ஸ் வகைகளில் முக்கியமான ஒன்றுதான் அக்ரூட் பருப்பு, அதாவது வால்நட்ஸ். ஒருகாலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே இதனை சாப்பிட்டு வந்தார்கள். அப்படி அரச குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    இதய ஆரோக்கியம்

    வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் (ALA) சிறந்த மூலமாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படும் ஒரே பருப்புவகை வால்நட்ஸ் ஆகும். அதிக கொழுப்பு பெரும்பாலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இதய நோய்களை ஏற்படுத்துகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன.

    மூளை ஆரோக்கியம்

    வால்நட்ஸில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பாலிபினால்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை மெதுவாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

    குடல் ஆரோக்கியம்

    குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகின்றன. வால்நட்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் வால்நட் சாப்பிடும் பெரியவர்களுக்கு குடலின் நுண்ணுயிர் உற்பத்தி அதிகமாக இருப்பதாகக் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன

    புற்றுநோய் தடுப்பு

    குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வால்நட்ஸில் காணப்படும் சேர்மங்களை கொண்டு யூரோலிதின் (தசைகளின் வலிமையை மேம்படுத்த உதவும் ) கலவையை உற்பத்தி செய்கின்றன. இந்த யூரோலிதின்கள் சில புற்றுநோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும். 

    எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

    அமெரிக்க விவசாயத் துறை பரிந்துரைப்படி, அமெரிக்காவில் வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதிகமாக எடுத்துக் கொண்டால் கலோரி அளவு அதிகமாகி விடும். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன. கலோரிகளைப் போலவே வால்நட்ஸில் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. வால்நட்டில் உள்ள ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் நீண்டநேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் எளிதில் பசி எடுக்காது. மேலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியத்தை தருகிறது. 

    எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?

    வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற பச்சையாக எடுத்துக்கொள்ளவேண்டும். வாங்கும்போது உப்பு சேர்க்காததாக பார்த்து வாங்குங்கள். ஓட்மீலில் கலந்து சாப்பிடலாம். 

    • மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம் நிறைந்தது.
    • ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் நாடுகளில் பின்பற்றப்படும் பாரம்பரிய உணவுமுறை!

    இதய நோய்களை தடுக்க பெரும்பாலும் மெடிட்டரேனியன் டயட் முறையை பின்பற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு காரணம் மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம், கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தும் உணவு முறையாகும். இது, ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நாடுகளில் பல காலங்களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய உணவு முறையாகும். நாளடைவில் இந்த டயட் பிற நாடுகளுக்கும் பரவி, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வகை உணவிலிருந்து கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். 

    இதய ஆரோக்கியம் 

    மத்தியத் தரைக்கடல் உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைவாக இருப்பதற்கான சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

    தூக்கம்

    மத்தியத் தரைக்கடல் உணவுமுறை ஆரோக்கியமான தூக்கமுறைக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுமுறை தூக்கத்தை மேம்படுத்தும் என்றும், தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறதும் என்று கூறப்படுகிறது.

    புற்றுநோய் எதிர்ப்பு

    மத்தியத் தரைக்கடல் உணவில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்துள்ளன. இவை சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன. 

    மன ஆரோக்கியம்

    மத்தியத் தரைக்கடல் உணவுமுறை மன ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கின்றன. மனச்சோர்வை குறைக்கின்றன.

    நீரிழிவு நோய்

    மத்தியத் தரைக்கடல் உணவைப் பின்பற்றுபவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் இந்த உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

    எடை மேலாண்மை

    உடல் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. 


    சிவப்பு இறைச்சிக்கு பதில் உணவில் கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

    கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள்...

    மத்தியத் தரைக்கடல் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். முதலில் உணவுமுறையில் பழங்களை சேர்க்க தொடங்குங்கள். பின்னர் ப்ரோக்கோலி அல்லது கேரட் போன்ற காய்கறிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து தானிய வகைகளை உணவில் சேர்க்க தொடங்குங்கள். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு, பன்றி இறைச்சி) சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக மீன் மற்றும் மற்ற கடல் உணவுகளை சாப்பிடுங்கள். இந்த சிறிய மாற்றங்கள் காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

    மெடிட்டரேனியன் டயட்டை ஃபாலோ செய்தால் தவிர்க்கவேண்டிய உணவுகள்

    • அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
    • வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா மற்றும் பிட்ஸா போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
    • கொழுப்பு நிறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்.
    • அதிகம் சோடியம் உள்ள உணவுகள்.
    • நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் (மாட்டிறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் போன்றவை).
    • பேஸ்ட்ரிகள், சோடாக்கள், மிட்டாய்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்.
    • கருப்பு புடவை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர்!
    • இருமுடி கட்டி, 18 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்றார் முர்மு!

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்திப் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று (22.10.25) இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் குடியரசு முன்னாள் தலைவர் விவி கிரி, ஆளுநராக இருந்த காலத்தில்தான் சபரிமலை சென்றுள்ளார். இந்நிலையில், இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் திரவுபதி முர்மு!

    இருமுடிக்கட்டை தலையில் சுமந்துசென்ற திரவுபதி முர்மு, பதினெட்டுப்படி தாண்டி, சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சுமந்து சென்று சன்னிதானத்தில் சமர்பித்தனர். தொடர்ந்து குடியரசுத் தலைவரின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையை குடியரசுத் தலைவர் தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.  


                                                 இணையத்தில் வைரலாகிவரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் சபரிமலைப் புகைப்படம்

    திரவுபதி முர்மு யார்?

    இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஜூலை 25, 2022-ல் பதவியேற்றவர் திரவுபதி முர்மு. பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர், பிரதிபா பாட்டிலுக்கு பின் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராவார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவரும் இவர்தான். முன்னதாக 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் , 2000 முதல் 2009 வரை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் முர்மு பணியாற்றினார். ராம்நாத் கோவிந்திற்கு பிறகு ஜூன் 2022 இல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு முர்முவை பரிந்துரைத்தது.

    • பன்னீரை கடையில் வாங்காமல், வீட்டில் நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
    • 1947-ல் பாபா தாக்கூர் தாஸ் என்பவரால் கலாகண்ட் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்!

    தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமூன், லட்டு என எண்ணெய் பலகாரங்கள் நிறைய செய்திருப்போம், சாப்பிடிருப்போம். ஆனால் பலரும் இந்தியாவின் பிரபலமான இந்த இனிப்பை மறந்திருப்போம். அப்படி தீபாவளிக்கு கலாகண்ட் செய்ய மறந்தவர்களுக்கான பதிவுதான் இது. சுவையான கலாகண்ட் செய்வது எப்படி என பார்ப்போம். கலாகண்ட் செய்வதற்கு பால், பன்னீர், நெய், சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்டவை அவசியம். இதில் பன்னீரை கடையில் வாங்கமல், வீட்டில் இருக்கும் பாலை வைத்து நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.

    தேவையான பொருட்கள்...

    பால் - 1 லிட்டர்

    நெய் - 1/2 கப்

    சர்க்கரை - 1 கப்

    குங்குமப்பூ - (வேண்டுமென்றால்)

    ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

    பிஸ்தா - (வேண்டுமென்றால்)

    பாதாம் - (வேண்டுமென்றால்)

    எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்


    ருசிக்க தயாராக கலாகண்ட் இனிப்பு 

    செய்முறை

    முதலில் பன்னீர் செய்வது எப்படி என பார்ப்போம். பன்னீர் செய்வதற்கு 500மிலி பால் எடுத்துக்கொள்வோம். பாலை நன்கு காய்ச்சவேண்டும். பால் நன்கு கொதித்தபின்பு, அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து விடவேண்டும். பால் முழுவதுமாக திரிந்து வரும்வரையில் அடுப்பை நிறுத்தவேண்டாம். பின்னர் தண்ணீர் தனியாக பிரிந்த உடன், அதனை எடுத்து வடிகட்டி கொள்ளலாம். பின்னர் பன்னீர் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அப்போதுதான் பன்னீரில் எலுமிச்சைப் பழத்தின் புளிப்பு தெரியாது.

    பின்னர் ஒரு லிட்டர் பால் எடுத்துக்கொண்டு, அதனை நன்கு கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும்போது கிண்டிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பாத்திரத்தில் அடிபிடிக்காது. பால் நன்கு வற்றி, க்ரீம் பதத்திற்கு வரும்வரை கிண்டவேண்டும். இந்தப்பதம் வரும்போதே பாலில், செய்துவைத்த பன்னீரை எடுத்துக்கொட்டி கிண்டுங்கள். தொடர்ந்து கிண்டியபிறகு பாலில் உள்ள ஈரம் வற்றியபிறகு, அதில் அரை கப் நெய் ஊற்றவேண்டும். நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிண்டியபின், 1 கப் வெள்ளை சர்க்கரையை சேர்க்கவேண்டும். இனிப்பு கூடுதலாக வேண்டுமென்றால், கூடுதல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

    கடைசியில் ஏலக்காய்தூள் போட்டு கிண்டவேண்டும். பின்னர் கலாகண்ட் நன்கு கெட்டி பதத்திற்கு வந்தபின் இறக்கிக்கொள்ளலாம். நன்கு நிறம்வேண்டும் என்பவர்கள் கூடுதல் நேரம்வைத்து கிண்டலாம். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்தடவி, கலாகண்ட் கலவை சூடாக இருக்கும்போதே அதனை கொட்டி அழுத்திவிடவேண்டும். வேண்டுமானால் அதன்மேல் முந்திரி, பாதாம், என உங்களுக்கு பிடித்த பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இரண்டுமணிநேரம் கழித்து கலாகண்ட் கலவையை எடுத்துப்பார்த்தால் நன்கு ஆறி, கெட்டியாக இருக்கும். அருமையான கலாகண்ட் இனிப்பு தயார்.

    ×