என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #TNAssembly #TNMinister #Jayakumar
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி. சாமி, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புயலின்போது மூழ்கிய படகுகள் மீட்கப்படாமல் இருக்கின்றன. அந்த பகுதி சேறும் சகதியுமாக உள்ளது.

    இதனால் மற்ற மீன்பிடி படகுகளுக்கும், மீனவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே மூழ்கிய படகுகளை மீட்கவும், சேறு, சகதிகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    தற்போது இந்த மீன்பிடி துறைமுகம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழக அரசு சார்பில் அங்கு எந்த பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது.


    ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோது இந்த மீன்பிடி துறைமுகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நான் டெல்லி சென்றபோது இந்த துறைமுகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறேன். இங்கு ரூ.100 கோடி செலவு செய்து கடல் பகுதியை ஆழப்படுத்தி மீனவர்களுக்கு வசதி செய்து கொடுத்தால் தற்போது ஏற்றுமதியாகும் 4 லட்சம் டன் மீன் 8 லட்சம் டன்னாகும். மீனவர்களும் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

    விரைவில் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புகிறோம். தமிழக அரசும் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #TNMinister #Jayakumar
    மாணவர்கள் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த மாணவி பிரதிபா, மற்றும் டெல்லி மாணவர் தற்கொலை செய்துள்ளனர்.

    61 ஆயிரத்து 350 மருத்துவ பணியிடங்களுக்கு, 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 7¼ லட்சம் பேர் தேர்வு பெற்று ஒரு மருத்துவ பணியிடத்திற்கு 12 பேர் போட்டியிடும் நிலை உள்ளது.

    நீட் தேர்வை சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி அந்தந்த மாநில கல்வி பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீட் தேர்வு முடிவுகளை அவசர அவசரமாக வெளியிட காரணம் என்ன? இதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    நீட் தேர்வு காரணமாக மாணவ-மாணவிகள் தற்கொலை தொடர்கிறது. இதனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம். மத்திய, மாநில அரசுகள், ஆலை நிர்வாகம் திட்டமிட்டு ஒடுக்குமுறையை ஏவி உள்ளது. மக்கள் பேரணியாக செல்லும் போது கலெக்டர் அலுவலக குடியிருப்புகளில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததற்கு காவல்துறையே பொறுப்பு.

    சுப்பிரமணியசாமி பொதுவாக தமிழர் நலனையோ, போராட்டங்களையோ ஆதரிப்பது கிடையாது. கொச்சைப்படுத்தி பேசுவது தான் வாடிக்கை. தூத்துக் குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையம் விசாரணை வேண்டாம் என்கிறோம்.

    மேலும் இதற்கு முன் நடைபெற்ற விசாரணையில் அவர் ஆளும் கட்சிக்கு சாதமாகவே இருந்துள்ளார். ஆகவே பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அதில் புலனாய்வு துறையை கொண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்.

    சென்னை ஸ்டீபன் சன் சாலையில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே தற்போதுள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் ரூ.67.76 கோடி மதிப்பில் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.#TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 77 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * மணலி பகுதியில் மழை காலங்களில் தரைப்பாலங்களில் மழை நீர் சூழ்ந்து கொள்வதால் ஆமுல்லை வாயில், வடபெரும்பாக்கம், பர்மா நகர் ஆகி இடங்களில் ரூ.44.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலங்கள் அமைக்கப்படும்.

    * யானைக்கவுனியில் பழுதடைந்த மேம்பாலத்துக்கு பதிலாக அதை இடித்து விட்டு ரெயில்வே துறையுடன் இணைந்து ரூ.30 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்.

    * சென்னை ஸ்டீபன் சன் சாலையில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே தற்போதுள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் ரூ.67.76 கோடி மதிப்பில் கட்டப்படும்.

    * சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்து பூமிக்கடியில் உள்ள மழைநீர் வடிகால் கட்டுமானத்தைப் பலப்படுத்தி ரூ.30 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். இங்கு மேடவாக்கம் டேங்க் சாலை முதல் ஓட்டேரி பாலம் வரை ஏற்கனவே ஆக்கிரமிப்பை அகற்றிய 950 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் உள்ள சாலையினை விரிவுபடுத்தி போக்குவரத்து தடையின்றி செல்ல ஏதுவாக சாலை விரிவாக்கம் செய்யப்படும். இதனால் ஏகாங்கிபுரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படாதவாறு தடுக்கப்படும்.

    தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உயிரி அகழ்வு (பயோ மைனிங்) முறையில் களைந்து நிலங்கள் மீட்டெடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாக அறிவிக்கப்படும்.

    அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய முயற்சியாக திட்ட மதிப்பீட்டிலேயே உள்ளடக்கி பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் வழங்கப்படும்.

    மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், அனைத்து வார்டுகளிலும் உயர்தரம் வாய்ந்த குடிநீர் மிகக்குறைந்த விலையில் வழங்க தானியங்கும் குடிநீர் மையங்கள் நிறுவப்படும்.

    ராமேசுவரத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலனுக்காக அக்னி தீர்த்தத்துக்கு நடுவே நவீன வசதிகளுடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்படும்.

    11 மாநகராட்சிகள் மற்றும் 124 நகராட்சிகளில் உள்ள பூங்காக்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

    8 மாநகராட்சிகள் மற்றும் 12 நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை மனித ஆற்றலின்றி முழுக்க எந்திரங்கள் மூலமாகவே நீக்கும் வண்ணம், அடைப்பு நீக்கும் மற்றும் தூர்வாரும் எந்திரங்கள் வழங்கப்படும்.

    அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் ஒரு லட்சம் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு தனி நபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்படும். இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 275 கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை மையம் உருவாக்கப்படும். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிப் பகுதிகளிலுள்ள 165 குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    ஊரகப் பகுதிகளில் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 500 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் அமைக்கப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களுக்கு 107 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 கி.மீ. நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்படும்.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 20 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை மொத்தம் 104 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 13 ஆயிரத்து 500 சுய உதவிக் குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் ஆதார நிதியாக ரூ.20.25 கோடி வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் 385 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 25 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #TNAssembly #TNMinister #SPVelumani
    ‘நீட்’ அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டதால் ஏற்படுகிற பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    தற்போது நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேசிய அளவில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 45 ஆயிரத்து 336 மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. இது 39.56 சதவீதமாகும்.

    எதிர்காலங்களில் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    செஞ்சிக்கு அருகில் பெருவர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்கிற தலித் மாணவி 1125 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது.

    இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், அதில் 3050 இடங்கள் இருந்தாலும் நீட் தேர்வு காரணமாக நமது மாநிலத்திலேயே மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பை இழக்க வேண்டிய மோசமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு தான் காரணமாகும்.

    எனவே, தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதிகள் பல முனைகளில் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அநீதிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தி வருகின்றன. இந்த அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் ரூ.3 கோடியில் திருப்பணி கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.#TNAssembly #KasiViswanatharTemple
    சென்னை:

    சட்டசபையில் இன்று தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது:-

    வடக்கே வடகாசி என்றால் தெற்கே தென்காசி என்பார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரில் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில் காணப்பட்டது.

    அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் முன்வந்து கோவில் கோபுர திருப்பணிகளை தொடங்கி வைத்தார். 25.11.1984 அன்று தனது முதல் பணியை தொடங்கி, முதல் தளத்தை அய்யா சிவந்தி ஆதித்தனார் முடித்து கொடுத்தார்கள்.

    அதைத்தொடர்ந்து அந்த கோபுர பணிகள் 6 ஆண்டுகள் செய்யப்பட்டு முடிந்தது. அப்போது கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

    2004-ம் ஆண்டு அம்மா ஆட்சியின்போது காசி விசுவநாதர் கோவிலுக்கு மீண்டும் திருப்பணிகள் ஆரம்பித்து கும்பாபிஷேகம் நடந்தபோது அரசு சார்பில் ரூ.10 லட்சம் அந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது.

    அப்போது திருப்பணிகள் தொடங்கும் சமயத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் கோவிலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார். இதனால் 17.3.2006 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

    தற்போது 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் காசிவிசுவநாதர் ஆலயத்துக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கோவில் திருப்பணிக்கு பக்தர்கள் நன்கொடைகள் வழங்க தயாராக உள்ளனர்.

    எனவே கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறியதாவது:-

    தென்காசி காசி விசுவநாதர் கோவில் 17.3.2006 அன்று குடமுழக்கு நடந்தது. ஆகம விதிப்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.

    குடமுழக்கு நடைபெற அம்மாவின் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பணிக்கான மதிப்பீடு ரூ.3 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNAssembly #KasiViswanatharTemple
    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #NEET #DMK #MKStalin
    சென்னை:

    நீட் தேர்வால் பலியான மாணவி பிரதீபா குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நேற்று வெளியான நீட் தேர்வு முடிவை பார்த்ததும் விழுப்புரம் மாவட்டம் பெரவள்ளூர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் பிரதீபா தற்கொலை செய்துள்ளார். தனது நீண்ட நாள் கனவான டாக்டர்ஆக வேண்டும் என்ற லட்சியம் பொய்த்து போகும் நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார்.

    அதே விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடியபடி உள்ளார்.

    சென்ற ஆண்டு நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதிய பிரதீபாவை இழந்துள்ளோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

    நீட் நுழைவுத்தேர்வு குறித்து நமது உணர்வுகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுதியதை தவறாக மொழி பெயர்த்ததால் மதிப்பெண்கள் குறைந்து பாதிக்கப்பட்டதாக பிரதீபா கடிதம் எழுதியுள்ளார்.

    தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா

    நீட் தேர்வு கொடுக்கும் மன அழுத்தத்தால் அவர் இறந்துள்ளார். இந்த தேர்வு தென் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. மிக குறைந்த எண்ணிக்கையில் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    வடமாநில மாணவர்கள் தான் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழகத்தின் கீர்த்தனா 12-வது இடத்தில் உள்ளார்.

    தமிழக மாணவர்களின் 2 ஆண்டு டாக்டர் கனவு சின்னாபின்னமாகி சிதைந்து போய் உள்ளது. ஏழை-எளிய மாணவர்கள், கிராமப்பகுதி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கேட்டு அனைவரும் ஒருமனதாக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம்.

    அந்த மசோதாக்கள் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதை தட்டி கேட்க நாதி இல்லாததால் அந்த மசோதா அதோ கதியாக உள்ளது.

    இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற தமிழக அரசு என்ன செய்தது என்பதை முதல்- அமைச்சரும் தெரிவிக்க வேண்டும்.

    அந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும்.

    இதே போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி நீட்டை எதிர்த்து பேசினார். #NEET #DMK #MKStalin
    சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.#Deepa #Sasikala #AssetsCase
    சென்னை:

    மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    குக்கரில் வேக வைத்து விசில் அடிக்கும் டி.டி.வி. தினகரன் 98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் இருப்பதாக சொல்லியுள்ளார். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்-தி.மு.க. என கூட்டணியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    2004-ம் ஆண்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்தான் இந்த தினகரன். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளும் பிடுங்கப்பட்டது. அதனால் 98 சதவீதம் இல்லை. 100 சதவீதம் கூலிப்படையினர் மட்டுமே இவர் பின்னால் வருவார்கள்.


    2011-ம் ஆண்டு ஜெயலலிதா சசிகலா குடும்பத்தின் கூட்டு கொள்ளை சதியை முறியடித்து, பத்திரிகையாளர் சோ.ராமசாமி மற்றும் அப்போதைய டி.ஜி.பி. ராமானுஜம் மற்றும் பெங்களூர் உளவு பிரிவு போலீஸ் எச்சரிக்கையின் அடிப்படையில் காவல்துறை உதவியோடு சசிகலா மற்றும் அவரின் கூட்டாளிகள் 100-க்கும் மேற்பட்ட காவலர்களின் உதவியோடு போயஸ் தோட்டத்தை விட்டு போலீஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த சசிகலா குடும்பம் திக்குமுக்காடி, தி.மு.க.வின் உதவியை நாடியது. அதன்பிறகு சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான். ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பூங்குன்றன் என்னை தொடர்பு கொண்டார்.

    நான் அவரை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அத்தை என்னிடம் பேச கூடாது என்று சசிகலா சொன்னதால் காவலர்கள் என்னை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க தாமதித்தனர். அப்போது மாலை 6 மணி வரை காத்திருந்து திரும்பி சென்றேன். ஆறுமுகசாமி கமி‌ஷனை வைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அரை வேக்காடு குக்கரை வைத்து கையாலாகாத தினகரனை வைத்து அ.தி.மு.க.வை ஆளவும் முடியாது.

    இவ்வாறு தீபா கூறியுள்ளார். #Deepa #TTVDhinakaran
    காலா படத்துக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை ரஜினி காந்த் தடுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். #Kaala #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச் சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்படுகிறது. பிற இந்திய மொழிப் படங்களுக்கு ரூ.176.44, ஆங்கிலப் படங்களுக்கு ரூ.184.06 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரப் பூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட அதிகமானக் கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட 10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.

    சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி விட்டது. அந்த திரையரங்குகளில் பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு செய்யப்பட்டன.

    ஆனால், வணிக வளாங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும், இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. இவற்றில் முன்பதிவு தொடங்கும் போதே 95 சதவீதம் இருக்கைகள் நிரம்பியிருந்தன.

    அவற்றுக்கான நுழைவுச் சீட்டுகள் தான் சட்டவிரோதமாக சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ள சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5 சதவீதம் முன் வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

    நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைக் கூறுகின்றனவா, இல்லையா? என்பது ஒருபுறமிருக்க அவரது திரைப்படங்களை, அவை வெளியாகும் நாளிலோ, அதற்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்த சில நாட்களிலோ கண்டு மகிழ வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் லட்சியம் ஆகும்.

    இதற்காக, ரஜினியின் ஏழை ரசிகர்கள் கூட கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்ட தயாராக உள்ளனர். ரசிகர்களின் இந்த பலவீனம் தான் நடிகர் ரஜினி மற்றும் அவரது படத்தயாரிப்பாளர்களின் பலம். ஆனால், இந்தக் கலாச்சாரம் தான் சட்ட விரோத கள்ளச்சந்தையை ஊக்குவிப்பதுடன், ஏழை ரஜினி ரசிகர்களை கடன்காரர்களாக்குவதற்கும் வகை செய்து வருகிறது.

    ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். உரிமைகளுக்காக போராடுவது சமூகவிரோதிகளின் செயல் என்று அவர் கூறினாலும் கூட, தமது திரைப்படத்தில் கைத்தட்டல்களை வாங்குவதற்காக உரிமைகளுக்காக அவர் போராடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்; விதிமீறல்களையும், ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பது தான் நடிகர் ரஜினிகாந்தின் நோக்கம் என்றால், அதற்கான நடவடிக்கைகளை தமது திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

    அதற்காக தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தமது ரசிகர்களுக்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாகவோ, காணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்த திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்படுவதை தயாரிப்பாளர் மூலம் தடுத்து நிறுத்தவும் நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும். அப்போது தான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kaala #PMK #AnbumaniRamadoss
    காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.#TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாவட்ட காஜிக்கள் ஆற்றி வரும் சமூகப் பணியினை கருத்தில் கொண்டும், அவர்கள் அப்பணியினை எவ்வித குந்தகமின்றி தொடர்ந்திடும் வகையிலும், அவர்களால் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் பாதுகாப்பு, பணி நிமித்தமான அஞ்சலக மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டும், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கிட அரசு 1.3.2016 அன்று அரசாணை வெளியிட்டது.

    அதன்படி மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிட, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு 1 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்து 6.3.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், மாவட்ட காஜிக்களுக்கு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 மாவட்ட காஜிக்களுக்கு நிலுவைத் தொகையுடன் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 62 ஆயிரத்து 143 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், எம்.ஆர். பாளையத்தில் 1 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன வன மர விதை மையம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேட்டைத் தடுப்பு முகாம் கட்டடம் மற்றும் வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) பணியாற்றும் களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 8 ஜீப்புகள், வன விலங்களுக்கான ஆம்புலன்ஸ், ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து, மிருகங்களை ஏற்றி செல்லும் வாகனம் தலா ஒன்று, என மொத்தம் 11 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

    மரங்களை வெட்டாமல், மரத்தை வேருடன் பிடுங்கி மாற்றி நடவு செய்யும் வகையில், மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக 50 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட வாகன இயந்திரம் 1 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வாங்கப்பட்ட மண்புழு உரம் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 10 லட்சம் ரூபாய் செலவிலான இழுவை இணைப்பு வண்டியுடன் கூடிய டிராக்டருடன் இயங்கும் மண்புழு உரம் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.

    மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக தஞ்சாவூர், திருவள்ளூர் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டம்- நத்தம், புதுக்கோட்டை மாவட்டம்-ஆலங்குடி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம்- திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம்-பாலவாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம்-காளிக்கோயில் ஆகிய இடங்களில் 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான போக்குவரத்துத் துறையின் 2 சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #TNAssembly #TNMinister #KadamburRaju
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.

    சமூக விரோத செயல்கள் நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளது. வர்தா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில் வருமாறு:-

    ‘‘வள்ளுவர் கோட்டத்தை அரசு முறையாக பராமரித்து வருகிறது. அங்கு எந்தவித சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு இல்லை. அங்கு தற்போது தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வர்தா புயலின் போது பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


    சிற்பங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள திருக்குறள் எழுத்துக்களை புதுப்பிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோன்று சிற்பங்களுக்கு வர்ணம் பூசுவது போன்ற தனியாரின் நடவடிக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    தற்போது இங்கு கண்காட்சிகள் நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி வருகிறது. சமீபத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துறையின் மானிய கோரிக்கை வரும்போது வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பது தொடர்பான முழு விவரங்கள் அறிவிக்கப்படும்’’ என்றார். #TNAssembly #TNMinister #KadamburRaju
    முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசு ஒடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
    திருச்செங்கோடு:

    பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவானதையொட்டி கட்சியின் ஒவ்வொரு நிர்வாகியும், சமுதாய தலைவர்கள், பல துறைகளின் முன்னோடிகள், பிரபலமானர்களை சந்தித்து 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை செயல்பாடுகள் குறித்து பேச வேண்டும் என்று தேசிய தலைமையால் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்செங்கோட்டில் உள்ள அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவரும், குழுவின் உறுப்பினருமான காளியண்ண கவுண்டரை சந்திக்க பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் எச்.ராஜா திருச்செங்கோடு வந்தார்.

    அப்போது எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக செயல்பட ஊக்கப்படுத்தபடுகிறார்கள்.பொதுவாக மக்கள் போராட்டம் என்றால் அரசு தீர்வு சொன்னவுடன் அடங்கி விடும்.

    ஆனால் இவர்கள் ஊடுருவலால் முடிவுக்கு வர வேண்டிய ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள் பெரிதானது. காவல் துறை தலையிட வேண்டிய நிலை உருவானது.

    நெடுவாசலை பொருத்த வரை உள்ளூர் மக்களும், மாநில அரசும் ஒப்புக் கொள்ளும் வரை திட்டம் அமல்படுத்தப்படாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. வட நாடு பகுதிகளில் இன்னும் இன்றும் பல இயக்கங்களை சேர்ந்த 30 பேர் போராட்டம் செய்கின்றனர்.

    ஏப்ரல்-1 முதல் ஸ்டெர்லைட் செயல்படாத நிலையில் கலவரம் உண்டாகும் வரை பிரிவினைவாத, பயங்கரவாத நக்சலிச செயல்பாடுகள் அதிகரித்து இருக்கிறது. உளவு துறைக்கு தெரியுமா அல்லது தெரியாதா என தெரியவில்லை.

    தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 8 வழி சாலை சீமான் கொடுத்த அறிக்கை சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடியதல்ல. முன்னேற்றத்திற்கு எதிரான சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசு ஒடுக்க வேண்டும்.


    காவிரி பிரச்சனையில் 50 ஆண்டு கால திராவிட இயக்கங்களில் துரோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேட்ட மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஒரு நன்றி கூட தி.மு.க தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாட்டில் மணல் கொள்ளை என்பது மிகவும் சீரியசான ஒன்று ஆகும். மணல் அடுத்த மாநிலத்துக்கு அனுமதிக்க கூடாது. இறக்குமதி மணல் கிடைப்பதால் மணல் அள்ள விட மாட்டோம் என்று சட்டம் கொண்டும் வர வேண்டும். 18 அடி வரை மணல் அள்ளினால் தண்ணீர் வந்தாலும் பள்ளத்தில் தேங்கி கடைமடை வரை வராது.

    2004-ல் பெட்ரோல் விலை 34 ரூபாய், 10 ஆண்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 2014ன் படி லிட்டர் 74 ரூபாய் 10 ஆண்டில் 41 ரூபாய் விலை உயர்வு சராசரியாக ஆண்டுக்கு 4 ரூபாய் 4 பைசா உயர்ந்துள்ளது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு 9 ரூபாய் உயர்ந்துள்ளது. சராசரியாக 2 ரூபாய் 10 பைசாதான் உயர்ந்துள்ளது. விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

    விலை உயர்வு என்பது பொய் பிரசாரம். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. அவ்வாறு வந்தால் டீசல் ரூ.45க்கும், பெட்ரோல் ரூ.55 க்கும் கிடைக்கும் ஆனால் அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறுகிறார்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #MLAsDisqualification #18MLAs #disqualification
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 அணிகளாக பிளவுபட்டது. அதன்பிறகு தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க. கட்சி பெயர், சின்னம் அவர்களுக்கே திரும்ப கிடைத்தது.

    ஆனால் டி.டி.வி.தினகரன் மட்டும் ஆதரவாளர்களுடன் தனியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் தினகரன் அணியில் இணைந்தனர். அவர்கள் கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

    18 பேரும் கொறடா அனுமதி இல்லாமல் கவர்னரை சந்தித்ததாக கூறி அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகருக்கு அ.தி.மு.க. கொறடா பரிந்துரை செய்தார். இதை ஏற்று 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வந்த இந்த வழக்கில் ஜனவரி மாதம் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.

    தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நாங்கள் எந்த அணிக்கும் தாவவில்லை, முதல்வரை மட்டுமே மாற்ற கோரினோம், எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    உள்கட்சி பிரச்சனையை கவர்னரிடம் கொண்டு சென்றது தவறு. எனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அல்லது இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


    கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து இருந்தனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஐகோர்ட்டு செயல்படத் தொடங்கியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பை, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிர்பார்த்து இருக்கின்றன. தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கூறப்பட்டாலும், செல்லாது என்று கூறப்பட்டாலும் அது ஆளும் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடியாகவே இருக்கும்.

    செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். செல்லாது என்று கூறினால் மீண்டும் சட்டசபைக்கு வந்து தினகரனுடன் தனி அணியாக செயல்பட்டு அரசை எதிர்ப்பார்கள். அவர்கள் தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சிக்கு எதிராக செயல்படும் நிலையும் உள்ளது.  #MLAsDisqualification #18MLAs #disqualification
    ×