என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்னும் சில காலங்களில் தினகரன் கட்சி செயல் இழந்து விடும் என்று சீர்காழியில் நடைபெற்ற கூட்டத்தில் தீபா பேசினார். #Deepa #TTVDhinakaran
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியில் எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.

    இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஜனநாயக ஆட்சி நடக்கும் இக்காலகட்டத்தில் மக்களின் போராட்டத்தை கையாள பல்வேறு வழிகள் உள்ளன.

    பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு 99 நாட்கள் ஆதரவு அளித்தது இந்த அரசுதான். திடீரென போராட்ட மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது. இந்த மக்கள் விரோத ஆட்சி உடனடியாக கலைக்கப்படவேண்டும்.


    நீட் தேர்வினால் ஏற்கனவே மாணவி அனிதா இறந்த போதே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மற்றொரு மாணவி இறந்த பின்னரும் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு அறிவிப்பு கூட வெளியிடவில்லை. மத்திய மோடி அரசு தமிழகத்தை அடக்கி ஆள மட்டுமே நினைக்கிறது.

    கர்நாடகா மீது உள்ள அக்கறைக் கூட தமிழகத்தின் மீது மத்திய அரசிற்கு இல்லை. டி.டி.வி.தினகரன் தற்போது தனி கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் சில காலங்களில் தினகரன் கட்சி செயல் இழந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Deepa #TTVDhinakaran
    மானிய கோரிக்கைகளை விவாதிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று சபாநாயகர் தனபால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    13.6.2018 அன்று எடுத்துக் கொள்வதாக இருந்த மானியக் கோரிக்கை எண். 26- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் 9.7.2018 அன்று எடுத்துக் கொள்வதாக இருந்த மானியக் கோரிக்கைகள் எண். 38- பொதுத்துறை, 1- மாநிலச் சட்டமன்றம், 2- ஆளுநர் மற்றும் அமைச்சரவை, 16- நிதித்துறை, 36- திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, 50. ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், 35- பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை ஆகியன 5.7.2018, 6.7.2018 ஆகிய நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 9.7.2018 அன்று பதிலுரை வழங்கப்படும்.

    5.7.2018 அன்று எடுத்துக்கொள்ளப் பெறுவதாக இருந்த மானியக் கோரிக்கைகள் எண். 46- தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை), 47- இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), 49- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியன 13.6.2018 அன்றும், 6.7.2018 அன்று எடுத்துக் கொள்வதாக இருந்த மானியக் கோரிக்கைகள் எண். 12- கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), 13- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை) ஆகியன 2.7.2018 அன்றும் எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Dhanapal
    பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக அரசு வருகின்ற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கும், பயன்பாட்டிற்கும் தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை வெறும் அறிவிப்பாக மட்டுமே அமைந்துவிடாமல் கண்டிப்பாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    எக்காரணத்திற்காகவும், எச்சூழலிலும், எக்காலத்திலும் தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆளும் ஆட்சியாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்.

    மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை இனிவரும் காலம் தோறும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் பொது மக்களின் கடமையாகும்.

    எனவே வருங்கால சந்ததியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்கேற்ப பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    தமிழக சட்டசபையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    பீளமேடு:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்த நீட் என்ற மரண கயிறு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சுக்கு நூறாக்கி அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளி உள்ளது.

    திருச்சியில் பஸ் டிரைவர் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வு தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏற்கனவே அனிதாவும், பிரதீபாவும் இதே நீட் தேர்வால் உயிரிழந்து உள்ளனர்.

    நீட் தேர்வு மூலம் சிறந்த டாக்டர்களை உருவாக்க முடியும் என்ற வாதம் பொய்யானது. தமிழகத்தை சேர்ந்த தணிகாசலம் உள்ளிட்ட பல டாக்டர்கள் வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2வில் 91.9 சதவீதம் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிளஸ்-2 வில் 65 சதவீதம் பெற்ற பல மாநிலங்கள் முன்னணி இடத்தில் உள்ளது.

    தமிழக மாணவர்களை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என கூறி உள்ளார். அவருக்கு என்ன ஆணவம்?

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.


    தற்போதைய ஆணைப்படி இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விட வாய்ப்பு உள்ளது. எனவே சட்டசபையை கூட்டி ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும். அப்போது தான் ஆலையை திறக்க முடியாது.

    மகாராஷ்டிராவில் ஆலையை உடைத்த போது அனில் அகர்வால் ஏன் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி ராமநாத் போராடுபவர்கள் சமூக விரோதிகள் என கூறி உள்ளார்.

    நானும் பல போராட்டங்கள் நடத்தி உள்ளேன. அப்படி என்றால் நானும் சமூக விரோதியா? அவர் நாவை அடக்கி பேச வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் சில அமைப்புகள் மூலம் பணம் பெற்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறி உள்ளார். இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து ஓட்டுவோம் என கூறி உள்ளார். அவ்வாறு ஓட்டினால் ஆலை இருக்காது.

    ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா? பணமா என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #SterlitePlant
    மின்சாரம் மற்றும் மண் சரிந்து பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம் தாக்கி மற்றும் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-

    நாகப்பட்டினம் மாவட்டம், பெருமாள் வடக்கு வீதியில் உள்ள வீட்டில் 8.5.2018 அன்று கணேசன் தொலைக்காட்சி பெட்டிக்கு கேபிள் இணைப்பை கொடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரணைக்கு வந்தபோது, அவருடைய சகோதரர் ராஜு, தனது அண்ணன் எவ்வாறு இறந்தார் என்பதை காவலர் முன் செய்து காண்பிப்பதற்காக மீண்டும் தொலைக்காட்சி பெட்டிக்கு இணைப்பை கொடுக்க முற்பட்டபோது, அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவ்விருவரும் உயிரிழந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்கள் கணேசன் மற்றும் ராஜுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, கணேசன் மற்றும் ராஜு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருவண்ணாமலை மாவட்டம், பொலக்குணம் கிராமத்தில் 31.5.2018 அன்று பாறைகளை வெடிக்கச் செய்து கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த குமார், தங்கராஜ் மற்றும் சீதாராமன் ஆகியோர் 31.5.2018 அன்று மண் சரிந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, குமார், தங்கராஜ், சீத்தாராமன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    நிலத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 1-ந்தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்ற விபரத்தை இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    காலா பட பிரச்சனை காரணமாக காவிரியை ரஜினி கர்நாடகத்திடம் அடகு வைக்கிறார் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். #Kaala #Rajinikanth
    திருவாரூர்:

    திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தை தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு பிறகும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

    வருகிற ஜூன் 15-ந் தேதி பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி சந்திக்க உள்ளார். ஆனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க அமைச்சர்கள் கொண்ட குழுவை டெல்லி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக மக்களின் கருத்துக்கு எதிராக கமல் பேசுவதும் அதற்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பதும் கண்டனத்திற்குரியது.

    ரஜினி, கமல் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் வருகிறது.

    ‘‘காலா’’ பட பிரச்சனை காரணமாக காவிரியை ரஜினி கர்நாடகத்திடம் அடகு வைக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கூடாது என கர்நாடகம் கூறுவது போன்று ரஜினி கூறினால் தமிழகத்தை விட்டு கர்நாடகத்திற்கு சென்று விடலாம்.

    காவிரி விவகாரத்தில் ரஜினியும் கமலும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இது தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் காவிரி விவகாரம் தொடர்பாக தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கமல்- ரஜினி இருவரும் செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kaala #Rajinikanth #PRPandian
    கமல்ஹாசனும், ரஜினி காந்த்தும் சுயநலவாதிகள் என்றும் இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


    காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

    அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

    தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.#TNAssembly #TNMinister #Sengottaiyan
    சென்னை:

    சட்டசபையில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கான ஒரு தகுதி தேர்வு மட்டுமே ஆகும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய இயலும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சுயநிதி பள்ளிகளில் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்பு உள்ளது.

    அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது ஆண்டு தோறும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் ஏற்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட மதிப்பீட்டை கணக்கிட்டு அந்த காலிப் பணியிடங்களுக்கேற்ப, பணிநாடுநர்களது ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண், தேர்வர்கள் பெற்ற கல்வித் தகுதிக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இனசுழற்சி முறை அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது.

    ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் அடுத்த முறை ஆசிரியர் நியமனத் தேர்வில் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றால் மடடுமே அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #TNMinister #Sengottaiyan
    சென்னை மீன்பிடி துறைமுகத்தில் இட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஒரு சூரை மீன்பிடி துறைமுகம் 200 கோடி ரூபாய் செலவில் திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் வருவாயை பெருக்குவதற்கு முன்னோடி திட்டங்களை தீட்டி, மீனவர் நலன் காக்க மீன்பிடித்தடை காலத்தில் நிவாரணத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக,

    ஆழ்கடல் மீன்களை கையாளுவதற்கு ஏற்ற தரமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சென்னை மீன்பிடி துறைமுகத்தில் தற்போதுள்ள இட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், ஒரு சூரை மீன்பிடி துறைமுகம் 200 கோடி ரூபாய் செலவில், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்படும். இந்த மீன்பிடி துறைமுகம், ஆழ்கடல் சூரை மீன்பிடிப் படகுகள் கொண்டு வரும் மீன்களை கையாளுவதற்கும், ஏலமிடுவதற்கும், ஏற்ற உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.

    கடலூர் முதுநகரில், தற்போதுள்ள மீன்பிடி துறைமுகம், படகுகளை நிறுத்துவதற்கும், மீன்களை ஏலமிடுவதற்கும், வலை பின்னுவதற்குமான உலகத்தரம் வாய்ந்த கூடுதல் கரையோர வசதிகளுடன், 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

    கன்னியாகுமரி மாவட்டம் 72 கி.மீ நீள கடற்கரை கொண்ட மாவட்டமாகும். ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு மீனவ கிராமத்தை கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோரங்களை தாக்கிய “ஒக்கி” புயல் மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை மற்றும் நீரோடி கிராமங்களில், மீனவர்களின் வீடுகளும் உடைமைகளும் பலத்த சேதம் அடைந்தன. எனவே, அம்மீனவர்களின் இருப்பிடம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை ஆபத்தான அலைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் மேற்படி மூன்று மீனவ கிராமங்களில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறைந்த நீளமுள்ள தூண்டில் வளைவுச் சுவர்கள் அமைக்கப்படும்.

    தற்போது தமிழ்நாட்டில் திலேப்பியா மீன் வளர்ப்பானது மிக லாபம் தரக்கூடிய ஓர் தொழிலாக வளர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட, பாலாறு புரந்தலாறு அணையில் திலேப்பியா மீன் தொழில் முனைவோர் பூங்கா, 6 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி அமைகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #edappadipalanisamy
    மாதவரம் மத்திய பால் பண்ணை புதிய தானியங்கி நவீனமயமாக்கப்பட்ட பால் பண்ணையாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பெருநகர நுகர்வோர்களின் பெருகி வரும் தேவைகளை எதிர் கொள்ளும் வகையில் பால்பண்ணைகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகிறது. அதனடிப்படையில் தற்பொழுது நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் என்ற கையாளும் திறன் கொண்ட மாதவரம் மத்திய பால் பண்ணை, 10 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்ட புதிய தானியங்கி நவீனமயமாக்கப்பட்ட பால் பண்ணையாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விரிவாக்கம் செய்யப்படும்.

    சேலம் பால்பண்ணையின் பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற அளவிலிருந்து, 7 லட்சம் லிட்டர் என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 30 மெட்ரிக் டன் டெய்ரி ஒயிட்னர் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    வேலூர் திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிய பால்பண்ணை நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டது. தற்போதுள்ள பால்பண்ணை இயங்கும் இடம் பெங்களூர் நெடுஞ்சாலையில் பாலாறுக்கு அருகே அமைந்துள்ள காரணத்தினால், தற்போதுள்ள இடத்திலேயே விரிவாக்க பணிகள் மேற்கொள்வது இயலாததாக உள்ளது. இதனால், நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை, 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற் நுட்ப கலை நயத்துடனும், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் பால் பதப்படுத்தும் உபகரணங்களுடன் புதிய இடத்தில் உருவாக்கப்படும்.


    தஞ்சாவூர் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 55,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் பண்ணை 25,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட, பால் பொருட்கள் தயாரிக்கும் வசதிகளுடன் கூடிய தானியங்கி பால் பண்ணையாக 75 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

    மாவட்ட ஒன்றியங்களின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடனும், நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், 30 மாவட்டங்களில் மொத்தம் 500 பாலகங்கள் தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    திருச்சி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை, அதிநவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி ஐஸ்கிரீம் கலவை தயாரிக்கும் கருவி, கெட்டியாக்கும் அரை தானியங்கி சிப்பங்கட்டும் இயந்திரம், குளிரூட்டும் அமைப்பு மற்றும் குளிர்பதன சேமிப்பு அறைகள் கொண்டதாக அமையும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    நீட் தேர்வை சுய நலத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துவதாக அரசியல் கட்சிகள் மீது மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BanNEET #NeetPolitics
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    இந்த விவகாரம் நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.



    இந்த நிலையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா மரணம் அடைந்தது குறித்து மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏறப்டுத்துகிறது. இந்த விஷயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டும். நீட் தேர்வை கட்சிகள் சுய நலத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துகின்றன. நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்கின்றனர்’ என்று குற்றம் சாட்டினார் பொன்.ராதாகிருஷ்ணன். #BanNEET #NeetPolitics

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா மற்றும் கேரளா உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #Cauveryissue GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சனை நீடித்து வந்தது. இப்பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்தால் ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர்வளத்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

    இதுவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தங்கள் மாநிலத்துக்கான உறுப்பினர்களை நியமித்திருக்கிறது. மற்ற இரண்டு மாநிலங்களும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தேவைப்படுவதால் நியாயமாக கிடைக்கக்கூடிய காவிரி நதியின் தண்ணீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழக விவசாயிகளும், பொது மக்களும் காத்துக் கிடக்கிறார்கள்.

    இச்சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரும், 4 மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் காலம் தாழ்த்தாமல் நியமிக்கப்பட்டால் தான் ஆணையத்தின் செயல்பாடு விரைவாக இருக்கும். குறிப்பாக விரைவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு விவசாயம் சார்ந்த, நேர்மையான, ஒரு வல்லுநரை முழு நேர தலைவராக நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    மிக முக்கியமாக குறுவை சாகுபடியை ஆரம்பிக்க தயார் நிலையில் இருக்கின்ற தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைத்தால் தான் சாகுபடி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Cauveryissue GKVasan
    ×