search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.200 கோடியில் துறைமுகம்- முதலமைச்சர் பழனிசாமி தகவல்
    X

    திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.200 கோடியில் துறைமுகம்- முதலமைச்சர் பழனிசாமி தகவல்

    சென்னை மீன்பிடி துறைமுகத்தில் இட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஒரு சூரை மீன்பிடி துறைமுகம் 200 கோடி ரூபாய் செலவில் திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் வருவாயை பெருக்குவதற்கு முன்னோடி திட்டங்களை தீட்டி, மீனவர் நலன் காக்க மீன்பிடித்தடை காலத்தில் நிவாரணத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக,

    ஆழ்கடல் மீன்களை கையாளுவதற்கு ஏற்ற தரமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சென்னை மீன்பிடி துறைமுகத்தில் தற்போதுள்ள இட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், ஒரு சூரை மீன்பிடி துறைமுகம் 200 கோடி ரூபாய் செலவில், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்படும். இந்த மீன்பிடி துறைமுகம், ஆழ்கடல் சூரை மீன்பிடிப் படகுகள் கொண்டு வரும் மீன்களை கையாளுவதற்கும், ஏலமிடுவதற்கும், ஏற்ற உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.

    கடலூர் முதுநகரில், தற்போதுள்ள மீன்பிடி துறைமுகம், படகுகளை நிறுத்துவதற்கும், மீன்களை ஏலமிடுவதற்கும், வலை பின்னுவதற்குமான உலகத்தரம் வாய்ந்த கூடுதல் கரையோர வசதிகளுடன், 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

    கன்னியாகுமரி மாவட்டம் 72 கி.மீ நீள கடற்கரை கொண்ட மாவட்டமாகும். ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு மீனவ கிராமத்தை கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோரங்களை தாக்கிய “ஒக்கி” புயல் மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை மற்றும் நீரோடி கிராமங்களில், மீனவர்களின் வீடுகளும் உடைமைகளும் பலத்த சேதம் அடைந்தன. எனவே, அம்மீனவர்களின் இருப்பிடம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை ஆபத்தான அலைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் மேற்படி மூன்று மீனவ கிராமங்களில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறைந்த நீளமுள்ள தூண்டில் வளைவுச் சுவர்கள் அமைக்கப்படும்.

    தற்போது தமிழ்நாட்டில் திலேப்பியா மீன் வளர்ப்பானது மிக லாபம் தரக்கூடிய ஓர் தொழிலாக வளர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட, பாலாறு புரந்தலாறு அணையில் திலேப்பியா மீன் தொழில் முனைவோர் பூங்கா, 6 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி அமைகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #edappadipalanisamy
    Next Story
    ×