என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனை ஆதரித்த அ.தி.மு.க. கூட்டணி எம். எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி இப்போது தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர். #TTVDhinakaran

    சென்னை:

    தினகரனை ஆதரித்த அ.தி.மு.க. கூட்டணி எம். எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி இப்போது தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர்.

    முக்குலத்தோர் புலிப்படை எம்.எல்.ஏ. கருணாஸ் எடப்பாடி பழனிசாமி அரசை தற்போது கடுமையாக வசைபாடுகிறார்.

    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் இவர் அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் தி.மு.க. நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார். சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி அரசை ஆதரித்து பேசுவதும் இல்லை.

    கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. தனியரசு ஆரம்பத்தில் தினகரன் பக்கம் இருந்தாலும் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். தமிமுன் அன்சாரி மற்றும் கருணாசுடன் கூட்டு சேராமல் தனித்து செயல்படுகிறார்.


    மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோது ரம்ஜான் நோன்பு கஞ்சி இலவச அரிசி வழங்குவது குறித்து பேசியதாக தெரிவித்தார். கட்சி வி‌ஷயங்கள் குறித்து பேசவில்லை என்றார்.

    எடப்பாடி பழனிசாமி - தினகரன் அணி இரண்டும் இணைய வேண்டும் என்று பாடுபட்டதாகவும் அது சாத்தியமில்லாததால் தான் ஒதுங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாகவே கருத்து சொல்லி வந்தனர். ஆனால் இப்போது 3 பேரும் தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர். இந்த போக்கு தினகரனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    அது மட்டுமல்ல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜி, பழனியப்பனை தவிர மற்ற 16 எம்.எல்.ஏ.க்களும் நமது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வெறுத்துபோய் உள்ளனர்.

    எம்.எல்.ஏ.வாக இல்லாததால் தொகுதியில் வலம் வர முடியவில்லை. சட்டசபைக்கு போகாததால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளனர். தீர்ப்பு வரும் என்று காத்திருந்து காலம் விரயமானது தான் மிச்சம் என்று புலம்பி வருகின்றனர். #TTVDhinakaran

    அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. #EdappadiPalaniswami #Panneerselvam #ADMK

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

    அதன்பிறகு கட்சி நலன் கருதி அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அந்த அணிக்கே அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் திரும்ப கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி கூட்டப்பட்டு அதில் அ.தி.மு.க. சட்ட விதிகள் மாற்றப்பட்டன. பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது.

     


    ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நியமித்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுகளும், புதிய விதிகளும் தேர்தல் கமி‌ஷன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர்.

    தற்போது அதற்கு தேர்தல் கமி‌ஷன் ஒப்புதல் அளித்தள்ளது. அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    இந்த முடிவை தேர்தல் கமி‌ஷன் தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    தேர்தல் கமி‌ஷன் முடிவுக்கு டி.டி.வி. தினகரனின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில் தேர்தல் கமி‌ஷனின் அங்கீகாரத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    #EdappadiPalaniswami #Panneerselvam #ADMK

    ரஜினி இனி அடுத்த படம் வரும்போதுதான் வருவார் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். #Elangovan #Rajinikanth

    கரூர்:

    கரூர் அருகே உள்ள புலியூர் செட்டிநாடு விருந்தினர் மாளிகையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷனை கவர்னர் நியமித்தார். அந்த விசாரணை கமி‌ஷன் எந்த உண்மையை கண்டுபிடித்தது என தெரியவில்லை.

    தமிழக கவர்னருக்கும், நிர்மலாதேவிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெளிவாகவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது சோனியா காந்தி உடனே அவரை பதவியில் இருந்து நீக்கினார். அதே போன்று மோடியும் தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்கவேண்டும்.

    மாவோயிஸ்டுகள் பிரதமர் மோடியை கொல்ல முயற்சி செய்தாலும் தவறுதான். அவர்களை அடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மாணவர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தகூடாது.

    தமிழக காங்கிரசில் மாற்றம் ஏதும் ஏற்படுமானால் அதனை ராகுல் காந்தி அறிவிப்பார். அவர் யாரை வேண்டுமானால் புதிய தலைவராக நியமிக்க முடியும். ஆனால் தமிழக காங்கிரசார் தற்போது சோர்வாக இருப்பது உண்மை. அவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் வேலை வாங்கவில்லை.


    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டிற்கு சென்றது தவறு. அவர் தனது கடைசி காலத்தில் இப்படி திசை மாறிச்சென்றது வெட்கக்கேடானது. காங்கிரசுக்கு அவர் துரோகம் செய்தார் என்பதை விட இந்திய மக்களுக்கு இந்தியாவின், மதச்சார்பற்ற கொள்கைக்கு துரோகம் செய்துவிட்டார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    எனவே தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு குளு கோஸ் தேவை. தமிழக அரசின் செயல்பாடு ஜீரோவாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுருட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பதவியில் உள்ள நீதிபதியே ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஒப்பானது என கூறியுள்ளார். அதனை புதிதாக முளைத்துள்ள அரசியல் தலைவர் என சொல்லிக் கொள்பவர் (ரஜினி) அதில் பயங்கரவாதிகள் பங்கேற்றனர் என கூறியுள்ளார். தற்போது அவர் நடித்த படம் வெளியாகிவிட்டது. இனி அடுத்த படம் வெளியாகும் போது தான் அவர் பேசுவார் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Elangovan #Rajinikanth

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #CauveryManagementBoard #Vaiko

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் கண்மூடித் தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக காவரி நீரை திறக்க மாட்டார்கள் என ஏற்கனவே கூறினேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அணை பாதுகாப்பு, சி.ஆர்.பி.எப். வீரர்களை பாதுகாப்புக்காக நிறுத்துவது போன்ற எந்த அதிகாரமும் இல்லாமல் அதிகாரமற்ற அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது.

    தற்போது உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மாறும் வரை நமக்கு நீதி கிடைக்காது.

    முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது என ஆய்வு செய்து கூறி உள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழக அரசு எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #CauveryManagementBoard #Vaiko

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆவின் விற்பனையகம் தொடங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #RajendraBalaji #AavinMilk
    விருதுநகர்:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் செய்யப்படவில்லை என கூறும் தகவல்கள் தவறு. அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தரமில்லாத பால்தான் கொள்முதல் செய்யப்படவில்லை.

    உலக நாடுகளில் ஆவின் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மையில் கூட ஹாங்காங்கில் ஆவின் பால் கிடைக்குமா? என்று கேட்டார்கள். வளைகுடா நாடுகளில் விரைவில் ஆவின் பால் விற்பனை தொடங்கப்படும்.

    இந்த பட்ஜெட்டில் பால்வளத்துறைக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆவின் விற்பனையகம் தொடங்கப்படும். தமிழகத்தில் 6 இடங்களில் ஆவின் பொருட்கள் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. விருதுநகரில் ரூ.10 கோடி செலவில் இந்த தயாரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
    நீட் தேர்வு தோல்வியால் இறந்த மாணவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். கால சூழ்நிலைக்கு ஏற்ப போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி தனது மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. சிலர் அவருடைய கருத்தை திரித்து கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளிவரும்.

    தென் மாவட்டங்களில் வன்முறையை தூண்ட சமூக விரோதிகள் முயற்சிக்கிறார்கள். இதை தடுக்க தமிழக முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #RajendraBalaji #AavinMilk
    மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று கூறியதுடன் அரசின் தோல்வியை மறைப்பதற்கு தி.மு.க. மீது குறை கூறுவதாக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ந்தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.

    தி.மு.க. ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம்.

    இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார்.

    ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12-ந்தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதல்-அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

    காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது.


    அதை கோட்டை விட்ட முதல்-அமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை.

    மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.

    ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறுவது உள்ளபடியே மனவேதனையளிக்கிறது.

    தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    உலக கடல் தினம் மீன்வளத்துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இன்று உலக பொம்மைகள் தினம். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உலகமே ஒரு நாடகமேடை. இதில் அனைவரும் பொம்மைகள். மனிதர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் சமுதாயத்திற்கு படைப்பாளிகளாக இருக்க வேண்டும்.

    கடல் தூய்மை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே போதும். மக்கள் மனதில் மாற்றம் தேவை. அதே போல் அனைத்து துறைமுகங்களிலும் சுத்தமாக இருப்பது குறித்து போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலில் பிளாஸ்டிக் கலக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கனிமொழிக்கு காற்று தான் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால் அவர் 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்.


    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது. ஒரு தலைவரை ஏற்றுக் கொள்வது என்பது அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி மற்றும் கொள்கைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

    மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மக்கள் அப்படித்தான் ஏற்றுக் கொண்டனர். மத்திய மந்திரியாக இருந்து கொண்டு பொன்.ராதா கிருஷ்ணன் கூறும் கருத்தை ஏற்க முடியாது. அவர் மத்திய அமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சாதாரண மனிதர் போல தெருவில் செல்பவர் போல் பேசக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். #governorkiranbedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி ராஜ் நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று வழிபட்டார்.

    தொடர்ந்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கிரண்பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பலரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தனக்கு வாழ்த்து சொல்ல வந்த சிறுவனை கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிறந்த நாள் என்பது நம்மை ஈன்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். நமக்கு பிறந்த நாள் என்பதை விட அன்னைக்கு மறுபிறவி என்பதே சரி. புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #governorkiranbedi

    காலி பணியிடங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் செய்ய முடியாத நிலை உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகே உள்ள புதுவள்ளியம் பாளையத்தில் ரூ.4½ லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். சத்தியபாமா எம்.பி., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 500 பட்டய கணக்காயர்கள் மூலம் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சி.ஏ. படிக்க முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.

    துணி வடிவமைப்பு பயிற்சி, ஆஸ்பத்திரி மேனேஜ்மெண்ட் உள்பட 12 தொழில் படிப்புகள் நடப்பாண்டில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக்க ஐ.ஐ.டி. மூலம் பேராசிரியர்களை கொண்டு பாடம் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு தேர்வையும் மாணவர்கள் சந்திக்கலாம்.


    ஜெர்மனி, லண்டனில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க 600 பயிற்சியாளர்கள் வர உள்ளனர். இது கல்வி துறையின் புதிய முயற்சியாகும்.

    10, 12-ம் வகுப்புகளில் அரசு பள்ளிகளில் சேர எந்த தடையும் இல்லை. தனியார் பள்ளிகளில் இருந்து வந்தாலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

    ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடைபெறும். குறிப்பாக தென் மாவட்டம், வட மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடங்கள் குறைவாக உள்ளது. ஆனால் அங்கு மாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் உள்ளனர்.

    பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற விரும்புகிறார்கள். ஆனால் அந்த பகுதிகளில் காலி பணியிடங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் செய்ய முடியாத நிலை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ஒரே ஆண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடந்த ஓராண்டில் மிகக்கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. வரலாறு காணாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 50,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

    தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 201617ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 லட்சத்து 67,310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17,981 ஆக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது ஒரே ஆண்டில் 49,329 சிறு, குறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் 5 லட்சத்து 19,075 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது எளிதாக ஒதுக்கிவிட்டு செல்லும் அளவுக்கு சாதாரண பின்னடைவு அல்ல.

    சிறுதொழில்துறையின் வீழ்ச்சிக்கான காரணங்களில் பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையும் தாண்டிய முக்கியக் காரணம் அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல் தான் என்பதே உண்மை. கடந்த ஓராண்டில் ரூ.11,000 கோடி முதலீடு சிறுதொழில் துறையிலிருந்து வெளியேறியிருக்கிறது.

    கடந்த 2009-10ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, ஓராண்டு கூட குறைந்ததில்லை. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆளுங்கட்சியினரின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால்தான் சிறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறியுள்ளன.

    பெருந்தொழில் துறையில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய முடியாமல் அரசு தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது குறித்த உண்மையை தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

    சிறு தொழில் நிறுவனமாக இருந்தாலும், பெருந்தொழில் நிறுவனமாக இருந்தாலும் அதற்கு அனுமதி அளிப்பது முதல் ஒவ்வொரு நிலையிலும் சதவீதக் கணக்கில் ஆட்சியாளர்கள் கேட்கும் கையூட்டு தான் தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களையும் விரட்டி அடிக்கிறது.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை அரசு காக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதியன்று நீதிபதிகள் சபர்வால், தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூவர் அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உடனடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், பின்னர் காலப்போக்கில் 152 அடி வரை உயர்த்தலாம் என்றும் தீர்ப்பளித்தது.

    ஆனால் கேரள அரசு மிகவும் தந்திரமாக கேரள மாநிலத்துக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பரப்புக்கு அருகில் ‘பஸ் ஸ்டேசன்’ என்ற ஒரு வளாகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அது பசுமைத் தீர்ப்பாயத்தால் தடுக்கப்பட்ட பின் பிரச்சனையை உச்சநீதிமன்றத்துக்கு கேரள அரசு கொண்டு சென்றது.

    ‘பஸ் ஸ்டேசன்’ என்று சொல்லும் இந்த வளாகத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களையும், கேளிக்கை விடுதிகளையும், வணிக வளாகங்களையும் கட்ட முடிவு செய்து, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பதுதான்.

    கேரள அரசின் பின்னணியில் அம்மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஸல் ஜாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் மூன்று கோடி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

    இதைத் தடுப்பதற்கான ஒரு அவசரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். கேரளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் ஜார்ஜ் உச்சநீதிமன்றத்தில் வாதாடுகையில், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிக் குயிக் இந்த அணை ஐம்பது ஆண்டுகளுக்குத்தான் வலுவாக இருக்கும் என்று கூறி உள்ளதகாவும், எனவே அணை எந்த நேரத்திலும் உடையலாம் என்றும், பொய் தகவலை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த வாதங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, பேரழிவு தடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் தனது ஆணையில் நீண்ட உபதேசம் செய்திருக்கிறார்.

    தமிழகத்துக்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மேற்கொள்ளவிடாமல் பிரச்சனையை அரசியல் சட்ட அமர்வுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு முற்பட வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko
    மாணவர்களே தயவு செய்து படிப்பிற்காக மட்டுமல்ல வேறு எந்த காரணத்திற்காகவும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம் என்று வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு விலக்குப் பெற்றுத்தர முன்வரவில்லை. மேலும் தமிழக அரசும் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை முன்னரே எடுத்து, விலக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும்.

    அதனையும் முறையே, காலத்தே செய்ய தவறிய அரசாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத போனதால் மனம் உடைந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது மிகுந்த வருத்தத்துக்கு உரியது.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து உயிரிழந்ததும் வேதனைக்குரியது. உயிரிழந்த மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணமாக 25 இலட்சம் ரூபாய் கொடுக்க முன்வர வேண்டும்.

    மாணவ, மாணவிகளே நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் தொடர வேண்டும். நீங்கள் நாட்டின் வருங்கால தூண்கள். எப்பேற்பட்ட கஷ்டத்திலும், எதற்காகவும், படிப்பிற்காகவும் அல்லது வேறு எந்த பிரச்சனைக்காகவும் மனம் உடையாமல், தளராமல் தொடர்ந்து முயற்சித்து, அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாணவர்களே தயவு செய்து படிப்பிற்காக மட்டுமல்ல வேறு எந்த காரணத்திற்காகவும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilMaanilacongress #GKVasan
    ×