என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாக காத்து நிற்கின்றன. ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பிலும், தமிழக முதல்-அமைச்சர் பதவியிலும் இருந்து நடத்திய சட்ட போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தியும், மத்திய அரசிடம் வலியுறுத்தி பேசியும், உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்றுள்ளது.

    இது அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உடனடியாக காவிரி நீர் பங்கீட்டை தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாக திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். தமிழக அரசு, காவிரி தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகின்ற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    திருவாரூரில் 17-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், மயிலாடுதுறையில் 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள் அனைத்து அணியினருடனும் இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    துணை செயலாளர்கள் நேரடியாக நியமனம் செய்வது அரசு நிர்வாகத்தை காவிமயமாக்கும் சதி என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    மத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரத்தில் 10 இணைச் செயலாளர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பதிலாக மத்திய அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழு தான் தேர்ந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடிமைப்பணிகளுக்கான இணைச் செயலாளர்களை அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்படாத குழுவால் தேர்ந்தெடுக்க முடியாது. அதுமட்டுமின்றி தேர்வுக்குழு மூலம் நியமனங்கள் செய்யப்படும் முறை வெளிப்படையாக இருக்காது.

     


    மத்தியில் 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற நாளில் இருந்தே கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. இப்போது அடுத்தக்கட்டமாக மத்திய அரசு நிர்வாகத்தையும் காவிமயமாக்கும் நோக்கத்துடன் தான் தனியார் துறையிலுள்ளவர்களை இணைச் செயலாளர்களாக நியமிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது.

    மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் பதவி முக்கியத்துவம் வாய்ந்த தாகும். பொதுவாக செயலாளர் நிலையிலான அதிகாரிகள் மேற்பார்வை பணிகளை மட்டுமே செய்யும் நிலையில் கொள்கை ஆவணங்கள் மற்றும் சட்ட முன்வரைவுகளை இணைச் செயலாளர்கள் தான் தயாரிப்பார்கள்.

    இந்த பதவியில் சங்பரிவாரின் பின்புலம் கொண்டவர்களை நியமிப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தலைமைச் செயலகமாக மாற்றுவது தான் மத்திய அரசின் நோக்கமாகும். 40 வயதில் இணைச் செயலாளராக ஒருவர் நியமிக்கப்பட்டால், அவரது பதவிக்காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டால் மத்திய அமைச்சரவை செயலாளர் நிலை வரை உயர முடியும் என்பதால் அரசு நிர்வாகத்தின் மீதான சங்பரிவாரங்களின் பிடி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும். இது மிகவும் ஆபத்தானது; இதை அனுமதிக்கவே கூடாது.

    இந்தியாவின் நிர்வாகச் சூழல் அமெரிக்கச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் நியமிக்கப்படுபவர்கள் கொள்கைத் திணிப்புகளில் ஈடுபடமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அதற்கு மாறான சூழல் நிலவுவது தான் இந்நிய மனங்கள் குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே, மத்திய அரசில் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர் நிலையில் பணியாற்ற தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவே செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss

    குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #CMEdappadiPalaniswami #childlabour

    சென்னை:

    குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் நாள் “குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்” அனுசரிக்கப்படுகிறது.

    குதூகலமாய் துள்ளித் திரிந்து, பள்ளி சென்று கல்வி பயின்று, அளவில்லா இன்பத்தை அள்ளிப் பருக வேண்டிய பள்ளிப் பருவத்தில், குழந்தைகளை பணிக்கு அனுப்புவது மிகக் கொடிய செயல் ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகளே! எனவே, அறிவும், வலிமையும் பொருந்திய தலைமுறையை உருவாக்கிட, குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிப்பதோடு, அவர்களின் நலனைப் பேணுவதும் நமது தலையாய கடமையாகும்.

    குழந்தைத் தொழிலாளர் முறையினை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றிடும் உயரிய நோக்கில், அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களை சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் ஆகியவற்றை வழங்குதல், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் ரூ.500 மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    அதுமட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    “குழந்தைகள் உழைப்பு நாட்டிற்கு சிறுமை” என்பதை உணர்ந்து, அனைத்து பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்கு அழிவில்லாத கல்விச் செல்வம் கிடைக்கச் செய்ய வேண்டும். “தொழிலாளர்களாக இல்லாமல், குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்போம்” என்ற உறுதியினையும், “குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம்” என்ற உறுதியினையும், அனைவரும் ஏற்று, குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கிட அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #CMEdappadiPalaniswami #childlabour

    அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குழப்பம் இருப்பதால் அதனை திருத்தம் செய்து சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #electioncommisionofindia
    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

    அதன்பிறகு கட்சி நலன் கருதி அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அந்த அணிக்கே அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் திரும்ப கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி கூட்டப்பட்டு அதில் அ.தி.மு.க. சட்ட விதிகள் மாற்றப்பட்டன. பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன.

    அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு ஒப்புதல் அளித்து இனி ஈ.பி.எஸ் ஓ.பி.எஸ் அணி தான் அதிமுக என அங்கீகாரம் அளித்திருந்தது.



    இந்நிலையில், அதிமுக சார்பில் அளிக்கப்பட்டிருந்த அறிக்கையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி 1976-ம் ஆண்டு முதல் இல்லை என்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி 1976-ம் ஆண்டு முதல் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்றால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அக்கட்சியில் வகித்த பதவி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, இந்த குழப்பத்தை சரி செய்யும் வகையில், அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட அக்கட்சியின் சட்டவிதிகள் குறித்த அறிக்கையில், விதி 46-ஐ திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #electioncommisionofindia
    பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் சென்னை வருகிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார். #BJP #amitshah #tamilisai
    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு தங்களை பலப்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.



    அடுத்த மாதம் அவர் சென்னை வருகிறார். சென்னையில் பா.ஜனதாவின் வாக்குகளை பலப்படுத்த கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அமித்ஷாவின் வருகை தொண்டர்களுக்கு ஒரு உற்சாகமாக அமையும்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாற்றம் வேண்டும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக எம்.பி.க்களை பெற வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்வோம்.

    இன்று தமிழகத்தில் பல வளர்ச்சி திட்டங்கள் வரவேண்டும். ஆனால் எல்லா வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் தவறான கருத்து உள்ளது. சேலம்-பசுமை சாலை திட்டம் பல கோடியில் வர இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அது ஒரு நல்ல திட்டம். இப்போதே அந்த திட்டத்தை பற்றி ஒருசில குழுக்கள் எதிர்த்து பிரசாரம் செய்ய தயாராகி வருகிறது.

    அதில் எந்த அளவிற்கு காடுகள் பாதுகாக்கப்பட வேண்டுமோ, எந்த அளவிற்கு மக்களின் நிலங்கள் பாதுகாக்கப்படுமோ, எவ்வளவு குறைவாக பாதிப்பு ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்குதான் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரவேண்டும்.

    தென்மேற்கு பருவ மழை வர இருக்கிறது. அரசு அதற்கான ஆயத்த பணிகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #amitshah #tamilisai

    அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க எனவும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேளுங்கள் என்றும் ஈரோட்டில் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
    நம்பியூர்:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டப்படும் கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நம்பியூர் அடுத்த திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜையிலும் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இந்த 2 நிகழ்ச்சியின் போதும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் தனது கல்விதுறை சம்பந்தமானவற்றையே கூறினார்.

    பேட்டியின்போது அரசியல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூற மறுத்தார்.

    “அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க... அதற்கென்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளார். அவரிடம் அரசியல் கேள்விகளை கேளுங்க...” என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
    திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். அவரது புதிய கட்சிக்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறினார். #TTVDhinakaran #Divakaran
    முத்துப்பேட்டை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காவிரி பிரச்சனைக்காக ஜெயலலிதா பல்வேறு வகையிலும் போராடி உறுதியான நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். அவரது பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைக்கட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும்.

    விதி எண் 110-ஐ பயன்படுத்தி பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இல்லை என சொல்லி தட்டிக் கழிக்கவெல்லாம் முதல்வர், விதிஎண் 110-ஐ இப்போது பயன்படுத்துகிறார்.

    மத்திய அரசின் பாதுகாப்பில் இந்த அரசு ஓடிக்கொண்டுள்ளது. இவர்களது ஆட்சியில் தொடர முடியாமல் தான் 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்தனர். இவர்கள் கட்சி நலனுக்காக தியாகம் செய்துள்ள அனைவரும் இன்றைக்கே ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர்.

    இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் தான் எல்லா போராட்டமும் நடக்கும். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்துவிடும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளும் ஆர்.கே.நகர் போலவே மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளன.

    வரும் தேர்தலில் 39 இடங்களிலும் வெற்றி பெற்று மத்தியில் யார் ஆட்சியமைப்பது என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும்.

    தனியரசு, கருணாஸ், தமிமூன் அன்சாரி 3 பேரும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார்கள். அவர்கள் மூவேந்தர்கள் போல சுதந்திரமாக உள்ளனர்.



    மன்னார்குடியில் புதிய கட்சி உதயம், கொடியேற்றம் குறித்தெல்லாம் எதுவும் சொல்வதிற்கில்லை. இந்த மாதத்தில் கேட்ட சிறந்த ஜோக்குகளில் புதிய கட்சி தகவலும் நல்ல ஜோக்ஸ் என்பதை தவிர, அந்த கட்சி குறித்து வேறெதுவும் எதுவும் சொல்வதற்கில்லை,

    திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். கட்சி பெயரை கேட்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அண்ணாவிற்கு இவருக்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க.வில் அவர் உறுப்பினர் கூட கிடையாது. எப்படி கட்சியினர் அவர் பக்கம் செல்வார்கள்? அவர் என்றும் தனிமரம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #Divakaran
    எஸ்.வி.சேகரை கைது செய்ய விடாமல் பாதுகாப்பது, மத்திய அரசா, அவரது உறவினர்களா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். #DMK #Kanimozhi #SVeShekher
    அவனியாபுரம்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா சொல்வதை கேட்டு தலையாட்டும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.

    பா.ஜனதாவினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது இதனை வெளிப்படையாக காட்டுகிறது.


    நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் அவரை கைது செய்யாதது ஏன்? அவரை பாதுகாப்பது மத்திய அரசா? அல்லது இங்குள்ள அவரது உறவினர்களா? என்று தெரியவில்லை. இதை நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வடமாநிலத்தில் கோவிலுக்குள், ஜனாதிபதி அனுமதிக்கப்படாதது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கனிமொழி சாதி என்பது இந்திய சமூகத்தில் எப்படி இருக்கிறது? என்பதையே இது காட்டுகிறது.

    தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இருப்பதால் இது போன்று நடப்பது இல்லை என்றார். #DMK #Kanimozhi #SVeShekher
    தி.மு.க.வில் சமீபத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, 10 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட வாரியாக கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அந்த வகையில், கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்டங்களில், சில இடங்களில் பகுதிக் கழக, ஒன்றிய கழக செயலாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல், திருப்பூர் வடக்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, நாமக்கல் கிழக்கு ஆகிய மாவட்டங்களிலும், சில இடங்களில் மாநகரப் பொறுப்பாளர், பகுதி கழகப் பொறுப்பாளர், நகரக் கழகச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் மாற்றப்பட்டு, அந்தப் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக, கோவை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் இரா.தமிழ்மணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தென்றல் செல்வராஜ் புதிதாக கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பார்.இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.காந்திசெல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அ.தி.முக.வை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #admk #ministersellurraju

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.முக. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட ஜெய்ஹிந்துபுரத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு பாசறை செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இன்றைக்கு இளைஞர்களுக்கு எதிர்காலம் நம்பிக்கை எல்லாம் அ.தி. மு.கவில் மட்டுமே உள்ளது. இதனை உணர்ந்துள்ள இளைஞர்கள் திரளாக அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.

    1½ கோடி தொண்டர்களுடன் வலுவான இயக்கமாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. அ.தி.மு.க. இயக்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.

    திவாகரன் இன்றைக்கு ஒரு புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது. சிலர் கட்சி தொடங்கியதால் அ.தி.மு.க.வுக்கு கடுகளவு கூட இழப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #admk #ministersellurraju

    தூத்துக்குடி படுகொலையை நியாயப்படுத்த அரசு ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்குவதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.#sterliteprotest #ThoothukudiFiring

    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொது மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழகக் காவல்துறை, அதை நியாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களை கட்டாயப்படுத்தி போலி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. காவல் துறையின் இந்த சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை பணிக்கு வந்த பணியாளர்களின் மேசைகளில் காவல்துறை சார்பில் ஒரு படிவம் வைக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்ன நடந்தது? போராட்டக்காரர்களால் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கு எத்தகைய காயங்கள் ஏற்பட்டன.

    பொதுச்சொத்துக்கள் எந்தெந்த வகையில் சேதப்படுத்தப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு பணியாளரும் அவர்களின் பெயர், முகவரி, பதவி உள்ளிட்ட விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தாக செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருந்த விவரங்களை காவல்துறையினர் விரும்பும் வகையில் நிரப்பித் தரும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிகாரிகளின் அனுமதியின்றி இத்தகைய விவரங்கள் கோரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள், உடனடியாக தங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, படிவத்தை நிரப்பித் தருவதில்லை என்று தீர்மானித்தனர் அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் படிவத்தை நிரப்பித்தர மறுத்து விட்டனர்.

     


    தூத்துக்குடியில் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல் துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளன.

    அதன் ஒரு கட்டமாகவே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தாக்கப்பட்டதாக அவர்களிடமிருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க காவல்துறை துடிக்கிறது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உடன்படாததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளூர் காவல்துறை நிலையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. எங்கிருந்தோ தமிழக ஆட்சியாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் உள்ளூர் காவல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டுக்கு துணை வட்டாட்சியர்கள் தான் ஆணையிட்டதாக ஒரு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.

    ஆனால், சம்பவ இடத்திலேயே இல்லாத துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து, அதுவும் அம்பலமானது. அதனால் வேறு வழியின்றி இப்படி நாடகத்தை அரங்கேற்ற அரசு முயல்கிறது. செய்த குற்றத்தை மறைக்க அரசே போலி ஆவணங்களை தயாரிப்பது அருவருக்கத்தக்கது.

    சட்டப் பேரவையில் பேசுவதே விசாரணையை பாதிக்கும் எனும் போது, விசாரணையுடன் சம்பந்தமில்லாத உள்ளூர் காவல் துறை ஆட்சியர் அலுவலக ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் பெறுவது விசாரணையை பாதிக்காதா? என்பதை முதல்- அமைச்சர் விளக்க வேண்டும். இதன் பின்னணியிலுள்ள சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நடை பெற்றுவரும் நிகழ்வுகள் அனைத்துமே, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதைத் தான் உறுதி செய்கின்றன. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்த வேண்டும். அதேபோல், இதுகுறித்த குற்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #sterliteprotest #ThoothukudiFiring

    என்னுடன் இருப்பவர்கள் பதவிக்காக இல்லை. ஆனால், அங்கு இருப்பவர்கள் அப்படி இல்லை என்று தி.மு.க.வை மறைமுகமாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி விமர்சித்துள்ளார். #DMK #MKAlagiri
    மதுரை:

    மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மகள் பிரீத்தி-சுவாதித்தன் திருமணம் இன்று விரகனூர் ரிங்ரோடு வேலம்மாள் மருத்துவக்கல்லூரி கல்யாண மகாலில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, மனைவி காந்தி அழகிரி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இது யாருடைய இல்ல விழா என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயரே மன்னன்.

    கலைஞரின் ஆசியுடன் துணை மேயராக பொறுப்புக்கு வந்தார். இந்த திருமணத்திற்கு வரும்போது நல்லவேளையாக என் வேட்டியை உருவிவிடாமல் இருந்தார்கள். அந்த அளவுக்கு மாநாடுபோல கூட்டம் உள்ளது. மன்னன் என்னிடம் எந்த எண்ணத்திலும் இல்லை. அவருக்கு பதவி ஆசை கிடையாது.

    இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் கடுமையாக உழைத்து கலைஞரின் கையில் வெற்றிக் கனியை பறித்து தந்தவர், மன்னன்.

    மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் ஆகட்டும், திருமங்கலம், திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆகட்டும் மன்னனின் உழைப்பு மகத்தானது. மன்னனும், அவரது நண்பர்களும் என்னிடம் பதவிக்காக இல்லை. ஆனால் அங்கே (தி.மு.க.) இருப்பவர்கள் அப்படி அல்ல.

    அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அப்போது அங்கே எத்தனைபேர் இருப்பார்கள்? எத்தனை பேர் போவார்கள்? என்பது தெரியவரும். நான் அடுத்த வருடம் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் தோழர்களின் வற்புறுத்தலால் இங்கு பேசவேண்டியதாகி விட்டது.

    நடிகை மனோரமா சினிமாவில் கின்னஸ் சாதனை படைத்தார். பின்னணி பாடகி சுசிலா 17 ஆயிரத்து 500 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தார். இதேபோல மன்னனுக்கும் தொலைபேசியில் பேசுவதற்காக கின்னஸ் சாதனை தரலாம்.

    அவர் என்னிடம் பேசும் போதும், என்னுடன் பயணம் செய்யும்போதும் அவருக்கு நிறைய போன் கால்கள் வரும். இதில் இருந்தே அவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

    மன்னனின் இல்ல திருமண விழாவுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நண்பர்கள் வந்து இருக்கிறார்கள். இதன் மூலம் அவரது நண்பர்கள் வட்டம் எவ்வளவு பெரியது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மன்னன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதில் எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பெருமை ஆகும். மணமக்களுக்கு கலைஞரின் நல்வாழ்த்தையும் தெரிவித்து மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி, டைரக்டர்கள் பாலா, சமுத்திரக்கனி, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKAlagiri
    ×