search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை: மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்- ஜிகே வாசன்
    X

    நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை: மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்- ஜிகே வாசன்

    மாணவர்களே தயவு செய்து படிப்பிற்காக மட்டுமல்ல வேறு எந்த காரணத்திற்காகவும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம் என்று வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு விலக்குப் பெற்றுத்தர முன்வரவில்லை. மேலும் தமிழக அரசும் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை முன்னரே எடுத்து, விலக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும்.

    அதனையும் முறையே, காலத்தே செய்ய தவறிய அரசாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத போனதால் மனம் உடைந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது மிகுந்த வருத்தத்துக்கு உரியது.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து உயிரிழந்ததும் வேதனைக்குரியது. உயிரிழந்த மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணமாக 25 இலட்சம் ரூபாய் கொடுக்க முன்வர வேண்டும்.

    மாணவ, மாணவிகளே நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் தொடர வேண்டும். நீங்கள் நாட்டின் வருங்கால தூண்கள். எப்பேற்பட்ட கஷ்டத்திலும், எதற்காகவும், படிப்பிற்காகவும் அல்லது வேறு எந்த பிரச்சனைக்காகவும் மனம் உடையாமல், தளராமல் தொடர்ந்து முயற்சித்து, அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாணவர்களே தயவு செய்து படிப்பிற்காக மட்டுமல்ல வேறு எந்த காரணத்திற்காகவும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilMaanilacongress #GKVasan
    Next Story
    ×