search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு
    X

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

    மின்சாரம் மற்றும் மண் சரிந்து பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம் தாக்கி மற்றும் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-

    நாகப்பட்டினம் மாவட்டம், பெருமாள் வடக்கு வீதியில் உள்ள வீட்டில் 8.5.2018 அன்று கணேசன் தொலைக்காட்சி பெட்டிக்கு கேபிள் இணைப்பை கொடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரணைக்கு வந்தபோது, அவருடைய சகோதரர் ராஜு, தனது அண்ணன் எவ்வாறு இறந்தார் என்பதை காவலர் முன் செய்து காண்பிப்பதற்காக மீண்டும் தொலைக்காட்சி பெட்டிக்கு இணைப்பை கொடுக்க முற்பட்டபோது, அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவ்விருவரும் உயிரிழந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்கள் கணேசன் மற்றும் ராஜுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, கணேசன் மற்றும் ராஜு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருவண்ணாமலை மாவட்டம், பொலக்குணம் கிராமத்தில் 31.5.2018 அன்று பாறைகளை வெடிக்கச் செய்து கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த குமார், தங்கராஜ் மற்றும் சீதாராமன் ஆகியோர் 31.5.2018 அன்று மண் சரிந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, குமார், தங்கராஜ், சீத்தாராமன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    நிலத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 1-ந்தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்ற விபரத்தை இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×