என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் அநீதியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் - திருநாவுக்கரசர் அறிக்கை
    X

    நீட் அநீதியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் - திருநாவுக்கரசர் அறிக்கை

    ‘நீட்’ அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டதால் ஏற்படுகிற பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    தற்போது நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேசிய அளவில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 45 ஆயிரத்து 336 மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. இது 39.56 சதவீதமாகும்.

    எதிர்காலங்களில் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    செஞ்சிக்கு அருகில் பெருவர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்கிற தலித் மாணவி 1125 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது.

    இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், அதில் 3050 இடங்கள் இருந்தாலும் நீட் தேர்வு காரணமாக நமது மாநிலத்திலேயே மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பை இழக்க வேண்டிய மோசமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு தான் காரணமாகும்.

    எனவே, தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதிகள் பல முனைகளில் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அநீதிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தி வருகின்றன. இந்த அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×