search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஜிக்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் மதிப்பூதியம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    காஜிக்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் மதிப்பூதியம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.#TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாவட்ட காஜிக்கள் ஆற்றி வரும் சமூகப் பணியினை கருத்தில் கொண்டும், அவர்கள் அப்பணியினை எவ்வித குந்தகமின்றி தொடர்ந்திடும் வகையிலும், அவர்களால் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் பாதுகாப்பு, பணி நிமித்தமான அஞ்சலக மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டும், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கிட அரசு 1.3.2016 அன்று அரசாணை வெளியிட்டது.

    அதன்படி மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிட, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு 1 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்து 6.3.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், மாவட்ட காஜிக்களுக்கு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 மாவட்ட காஜிக்களுக்கு நிலுவைத் தொகையுடன் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 62 ஆயிரத்து 143 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், எம்.ஆர். பாளையத்தில் 1 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன வன மர விதை மையம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேட்டைத் தடுப்பு முகாம் கட்டடம் மற்றும் வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) பணியாற்றும் களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 8 ஜீப்புகள், வன விலங்களுக்கான ஆம்புலன்ஸ், ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து, மிருகங்களை ஏற்றி செல்லும் வாகனம் தலா ஒன்று, என மொத்தம் 11 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

    மரங்களை வெட்டாமல், மரத்தை வேருடன் பிடுங்கி மாற்றி நடவு செய்யும் வகையில், மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக 50 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட வாகன இயந்திரம் 1 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வாங்கப்பட்ட மண்புழு உரம் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 10 லட்சம் ரூபாய் செலவிலான இழுவை இணைப்பு வண்டியுடன் கூடிய டிராக்டருடன் இயங்கும் மண்புழு உரம் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.

    மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக தஞ்சாவூர், திருவள்ளூர் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டம்- நத்தம், புதுக்கோட்டை மாவட்டம்-ஆலங்குடி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம்- திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம்-பாலவாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம்-காளிக்கோயில் ஆகிய இடங்களில் 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான போக்குவரத்துத் துறையின் 2 சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×