search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTV Dhinakaran supporters removal case"

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #MLAsDisqualification #18MLAs #disqualification
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 அணிகளாக பிளவுபட்டது. அதன்பிறகு தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க. கட்சி பெயர், சின்னம் அவர்களுக்கே திரும்ப கிடைத்தது.

    ஆனால் டி.டி.வி.தினகரன் மட்டும் ஆதரவாளர்களுடன் தனியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் தினகரன் அணியில் இணைந்தனர். அவர்கள் கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

    18 பேரும் கொறடா அனுமதி இல்லாமல் கவர்னரை சந்தித்ததாக கூறி அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகருக்கு அ.தி.மு.க. கொறடா பரிந்துரை செய்தார். இதை ஏற்று 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வந்த இந்த வழக்கில் ஜனவரி மாதம் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.

    தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நாங்கள் எந்த அணிக்கும் தாவவில்லை, முதல்வரை மட்டுமே மாற்ற கோரினோம், எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    உள்கட்சி பிரச்சனையை கவர்னரிடம் கொண்டு சென்றது தவறு. எனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அல்லது இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


    கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து இருந்தனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஐகோர்ட்டு செயல்படத் தொடங்கியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பை, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிர்பார்த்து இருக்கின்றன. தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கூறப்பட்டாலும், செல்லாது என்று கூறப்பட்டாலும் அது ஆளும் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடியாகவே இருக்கும்.

    செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். செல்லாது என்று கூறினால் மீண்டும் சட்டசபைக்கு வந்து தினகரனுடன் தனி அணியாக செயல்பட்டு அரசை எதிர்ப்பார்கள். அவர்கள் தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சிக்கு எதிராக செயல்படும் நிலையும் உள்ளது.  #MLAsDisqualification #18MLAs #disqualification
    ×