என் மலர்
செய்திகள்
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் திருச்செந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது. ஆலை நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்றால் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்படும். எனவே அரசு சட்டசபையில் ஆலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிரந்தரமாக மூடவேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அப்பாவி பொதுமக்களை சமூக விரோத கும்பல் என கூறி போலீசார் கைது செய்வதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்
இந்த ஆலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் விசாரணை கமிஷன் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது வெறும் கண்துடைப்பு ஆகும். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்திக்க 2 முறை அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை எனக்கு அனுமதி இல்லை.
பெட்ரோல், டீசல் விலையில் ஜி.எஸ்.டி.யில் சேர்க்க வேண்டும். அப்போது தான் விலை குறையும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்துக்கு எதிரானவர் என்பதை போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதை அவருடைய கருத்து தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்-அமைச்சர் கனவு கலைந்துவிடக்கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும், சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தை திட்டமிட்டு சிதைக்க முற்படும் நேரத்தில் கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.
ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்த போராட்டத்துக்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதார போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினிகாந்த் சொந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. சொந்த கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல்ல அடையாளம்.
ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினிகாந்த் தன் சொந்த கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவர் இல்லை. ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்ப்பது வருந்தத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற அவைகளின் நிகழ்வுகளையும், ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற நிகழ்வுகளையும், நேரடி ஒளிபரப்பு செய்வது போன்று, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள், விவாதங்கள் போன்றவை பொதுமக்களுக்கு தெரியவரும்.
அதேவேளை எதிர்க்கட்சிகளின் அமளிகள், அவசியமற்ற வெளி நடப்புகள் போன்றவையும் வெளிச்சத்திற்கு வரும். தங்களுடைய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பேரவை செயல்பாடுகளையும் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாகும். எனவே பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதற்கும், அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததற்கும் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து பேசினார்கள்.
அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிட வேண்டாம். எல்லோரும் என்னை இப்படி அழைத்தால் ஜல்லிக்கட்டு போட்டியை நான் வேடிக்கை பார்க்க சென்றாலும் ஜல்லிக்கட்டு நாயகன் வந்து விட்டார். அவர் காளையை அடக்குவார் என்று அறிவித்து விட்டால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும். எனவே என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம்” என்றார்.
அதனால் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. #TNAssembly #OPS
சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் ஏற்கெனவே இருந்த அரசு ஊழியர்களுக்கான 126 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால், அக்குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ், 200 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்த இடத்தில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள 606 அடுக்கு மாடி வாடகைக் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், சேர்த்து மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 240 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பட்டுக்கோட்டை புறவழிச் சாலை (கட்டம்2), 26 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 3 இரயில்வே மேம்பாலங்களை திறந்து வைத்து, 381 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 3 இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 2 புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கோயம்புத்தூர்மாவட்டம், கோவைப்புதூரில் 2 கோடியே 80லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணி காவலர்களுக்கான பாளையம் மற்றும் ஆயுதக்கிடங்கு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 77 கோடியே 76 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 283 காவலர் குடியிருப்புகள், 12 காவல் நிலையங்கள், 12 காவல் துறை கட்டடங்கள், நாட்ராம்பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, ஆவடியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள காவலர் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். #TNCM #Edappadipalanisamy
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் விவகாரத்தை மீண்டும் கிளப்பினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
‘‘தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை வேண்டாம் என்று ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கோவாவில் இந்த ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மராட்டியத்தில் இந்த ஆலை வெளியேற்றப்பட்டது. எனவே தாமிர உருக்காலை தமிழகத்துக்கு வேண்டாம் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆலைக்கு எதிராக ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அந்த தொகை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது. அந்த நிலையில் இருந்து கூடுதலாக ரூ.80 லட்சம் நிதி வழங்கி உயிர் இழந்தவர்களுக்கு ரூ.1 கோடியாக அறிவிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விரோதிகள், விஷ கிருமிகள், பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். இன்னும் போலீசார் வீடு வீடாக சென்று சோதனை நடத்துகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கடந்த 29-ந்தேதி கவன ஈர்ப்பு தீர்மானம் வந்த போது எதிர்க்கட்சி தலைவர் உள்பட உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது நான் 1 மணி நேரத்துக்கும் மேல் விளக்கமாக தெளிவாக எடுத்துச் சொன்னேன். அங்கு என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றன என்பதை விளக்கி புகைப்படங்களையும் இங்கு காண்பித்தேன்.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சொல்கிறார். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது மட்டுமின்றி அந்த தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை முழுமையாக செல்லும் சட்டவல்லுனர்கள், அரசு வழக்கறிஞர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்து பேசி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பல பேர்களை போலீஸ் தேடுவதாக இங்கு குறிப்பிட்டனர். தூத்துக்குடி சம்பவத்தில் யார்-யார் உருட்டுக்கட்டைகளுடன் தாக்குதல் நடத்தினார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசி பொது சொத்துக்களுக்கு தீ வைத்தார்கள் என்பதெல்லாம் அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ளது.
பொது மக்கள் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள். விஷமிகள், சமூக விரோதிகள் தான் இம்மாதிரியான காரியங்களில் ஈடுபடுவார்கள். எனவே மக்கள் போராடுவதற்கு தடை கிடையாது. அம்மா ஆட்சி காலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தியாவில் அதிக அளவில் போராட்டங்கள் நடந்த மாநிலம் தமிழ்நாடு தான். அந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்சியினரும் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது எங்கேயாவது உருட்டு கட்டைகளை எடுத்துச் சென்றோமா? தூத்துக்குடியில் ஒரு காரை உடைத்து பெட்ரோல் குண்டு போடுகிறார்கள். உருட்டு கட்டைகளை எடுத்து அடிக்கிறார்கள். இவர்களைத்தான் சமூக விரோதிகள் என்று சித்தரிக்கிறோமே தவிர பொது மக்களை அல்ல. எனவே சமூக விரோதிகளை ஊக்கப்படுத்தக்கூடாது.
பொதுச்சொத்துக்கு தீ வைத்தவர்கள், உருட்டு கட்டையால் தாக்கியவர்கள், யார்-யார் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதை கண்டறிந்து தக்க ஆதாரம் இருந்தால்தான் கைது செய்கிறார்கள். பொது மக்கள் யாரையும் கைது செய்யவில்லை. அதற்கு அரசும் அனுமதிக்காது.

ஸ்டெர்லைட்டை மூடியதாக அறிவித்தாலும், அவர்கள் நீதிமன்றம் போக வாய்ப்பு உள்ளது. எனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன் வருமா?
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:- ஸ்டெர்லைட் பிரச்சனையில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. எனவே சட்டம் இருக்கும் போது மீண்டும் ஒரு சட்டம் தேவையில்லை. எந்த நீதிமன்றம் என்றாலும் தமிழ்நாட்டின் சட்டத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் சட்டசபையில் தீர்மானம் தேவையில்லை.
மு.க.ஸ்டாலின்:- தி.மு.க. ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் நீதிமன்றம் சென்று தடை வாங்கி உள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஒரு ஆலை தொடங்கும் போது விதிமுறைகளை வகுத்து கொடுக்கிறோம். விதியை மீறும் போது அதை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை என்னென்ன விதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். பல விதிமீறல் நடந்துள்ளதால் அதை சுட்டிக் காட்டி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்:- இந்தப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றாலும் நாங்கள் கேவியட் மனு போட்டு இருக்கிறோம்.
அமைச்சர் சி.வி.சண்முகம்:- ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூட தீர்மானம் போட்டோம். ஆனால் அது ஏற்கப்படாமல் விடுதலை செய்ய மறுக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #EdappadiPalanisamy #Sterliteplant #MKStalin
தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் அனுபவித்தவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக 27.5.2018 அன்று 10 வருடங்கள் நிறைவு பெற்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சனை இன்று சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சட்டசபை நடைபெறும் போது இந்த சபையில் அதை தெரிவிக்காமல் வெளியே செய்தியாக வெளியிடுவது மரபுதானா என்பதை அறிய விரும்புகிறேன். 67 பேர் விடுதலை செய்யப்படுவதை நான் வரவேற்கிறேன். என்றாலும் மரபுபடி அதை சட்டமன்றத்தில் அறிவித்து இருக்க வேண்டும்.

அரசியல் சட்டப்படி கவர்னர் பரிந்துரையின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இது தொடர் நடவடிக்கை. எனவே இந்த விடுதலை பற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மு.க.ஸ்டாலின்:- இவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. தொடர் நடவடிக்கை என்றாலும் அவர்கள் விடுதலை செய்யப்படுவது இதுதான் முதல்முறை. எனவே சட்டமன்றத்தில் இதை அறிவிக்காதது மரபு அல்ல.
அமைச்சர் சி.வி.சண்முகம்:- கடந்த காலங்களில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மொத்தமாக அறிவிக்கப்படும்.
தற்போது ஒவ்வொரு கைதியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதால் மொத்தமாக யாரையும் விடுவிக்க முடியாது. அது முதல் கட்டம். தொடர்ந்து இன்னும் பலர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நடவடிக்கை தொடங்கி விட்டதால் சபையில் அறிவிக்கவில்லை.
சபாநாயகர் தனபால்:- கைதிகள் விடுதலையை தொடர் நடவடிக்கை என அமைச்சர் கூறிவிட்டார். எனவே இதுகுறித்து மேலும் விவாதிக்க வேண்டாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #DMK #MKStalin
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது சட்டமன்ற கொறடா சக்கரபாணி, தனது தொகுதியில் உள்ள வனப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால், “சபாநாயகராக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கும்” என்றார்.
இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது. #TNAssembly #Dhanapal
கடந்த ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த கமல்ஹாசன் அரசியலில் வேகம் எடுத்து வருகிறார். தொடர்ந்து போராட்டங்கள், தலைவர்கள் சந்திப்பு, நிர்வாகிகள் நியமனம் என்று வேகம் காட்டும் கமல் அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட தயாராகி வருகிறார்.
கடந்த நவம்பரில் மக்கள் நீதி மய்யம் என்னும் அமைப்பை தொடங்கிய கமல் அதை கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இந்த பெயருக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் மே 31 வரை கெடு கொடுத்து இருந்தது. ஆனால் யாரும் ஆட்சேபணை தெரிவிக்காததால் கமல் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயர் உறுதியானது.
கமல் கட்சியின் பெயர் உறுதியனாதை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் அவரது கட்சி பதிவு தொடர்பாக ஜூன் 20-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜூன் 20-ந் தேதி கமல்ஹாசன் தனது கட்சிக்கான சின்னத்தை கேட்பார் என்று தெரிகிறது.
சின்னத்தின் அடிப்படையில் தேர்தல் நடந்து வருவதால் மக்களுக்கு பரிட்சயமான நெருக்கமான சின்னத்தில் போட்டியிடவே கட்சிகள் ஆர்வம் காட்டும். அதனால் கமல் விசில் சின்னத்தை கேட்கவே வாய்ப்பு அதிகம் என்று கமலுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறும்போது ‘கட்சியின் பெயரிலேயே ஆறு கைகள் இணைவது போல ஒரு சின்னம் இருக்கிறது. ஆனால் அதை வாங்கினால் காங்கிரசுக்கு ஓட்டு கேட்பது போல் ஆகிவிடும். சின்னத்தை சொல்லி ஓட்டு கேட்பதும் சிரமம்.
ஆனால் விசில் அப்படி இல்லை. மிக எளிதில் மக்கள் மனதில் பதியும். கமல் ஏற்கனவே விசில் என்ற ஆப் மூலம்தான் தொண்டர்களுடன் இணைந்து வருகிறார். எனவே விசில் சின்னத்தை கேட்கவே வாய்ப்பு அதிகம்’ என்றார்கள்.
கமல் சின்னம் கேட்டாலும் அந்த சின்னத்தை அவர் நிரந்தரமாக அவர் பயன்படுத்த ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டே ஆக வேண்டும். நிரந்தரமாக சின்னத்தை பெற சில விதிமுறைகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட கட்சி ஒரு தேர்தலில் பத்து சதவீத தொகுதிகளில் குறைந்தது போட்டியிட வேண்டும். அப்போது தான் அந்த கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்படும். #MakkalNeedhiMaiam #KamalHaasan
மானியக் கோரிக்கைகளுக்காக தமிழக சட்டசபை கடந்த 28-ந்தேதி கூடியது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரச்சனையை கிளப்பினர். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அறிக்கையில் தி.மு.க. மீது குற்றம் சாட்டியதை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு செய்தனர்.
அதன்பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினர். இந்த நிலையில் சட்டசபைக்கு மீண்டும் சென்று சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வது என்று முடிவு எடுத்தனர். அதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சட்டசபைக்கு வந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோட்டைக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் என்று அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அவரை போலீசார் அங்கிருந்து குண்டு கட்டாக வெளியேற்றினார்கள். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். இந்த திடீர் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் சிரமப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்புக்கு இடையே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சட்டசபைக்கு அணி அணியாக வந்து கலந்து கொண்டனர். #TNAssembly #DMK

பீளமேடு:
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-
அண்ணா மறைவுக்கு பிறகு தி.மு.க.வை கண்ணை இமை காப்பது போல் காத்து வரும் கலைஞருக்கு இன்று 95-வது பிறந்த நாள். அவரை மனமார வாழ்த்துகிறேன். அவரது கணீர் குரல் மீண்டும் ஒலிக்க இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அரசிதழில் வெளியிட்டது வெற்றி என முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கூறி வருகிறார்கள்.
இதில் நாம் ஏமாற்றப்பட்டு உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீதியை குழி தோண்டி புதைத்து விட்டு தமிழகத்துக்கு ஓர வஞ்சனை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முற்றிலும் மாற்றி உள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனில் எதிர் காலத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.
இல்லை என்றால் மேகதாது உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது.
விவசாயிகளின் விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கி எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கேடு விளைவிக்கும் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது.
பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும். தமிழகம் வளம் பெறட்டும். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை.
மத்திய அரசு பல கேடு விளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை பாலை வனமாக்க முயற்சி செய்து வருகிறது.
திருட்டு போன ராஜராஜ சோழன் சிலையை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்க வேலை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #centralgovernment #cauveryissue






