என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகையால் சட்டசபை வளாகத்தில் 1000 போலீசார் குவிப்பு
    X

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகையால் சட்டசபை வளாகத்தில் 1000 போலீசார் குவிப்பு

    தி.மு.க. வினர் மீண்டும் திடீர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி இன்று கோட்டைக்கு வெளியேயும், உள்ளேயும், சட்டசபை வளாகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #TNAssembly #DMK
    சென்னை:

    மானியக் கோரிக்கைகளுக்காக தமிழக சட்டசபை கடந்த 28-ந்தேதி கூடியது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரச்சனையை கிளப்பினர். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அறிக்கையில் தி.மு.க. மீது குற்றம் சாட்டியதை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு செய்தனர்.

    அதன்பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினர். இந்த நிலையில் சட்டசபைக்கு மீண்டும் சென்று சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வது என்று முடிவு எடுத்தனர். அதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சட்டசபைக்கு வந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோட்டைக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் என்று அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    அவரை போலீசார் அங்கிருந்து குண்டு கட்டாக வெளியேற்றினார்கள். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். இந்த திடீர் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் சிரமப்பட்டனர்.

    இதுபோன்று தி.மு.க. வினர் மீண்டும் திடீர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி இன்று கோட்டைக்கு வெளியேயும், உள்ளேயும், சட்டசபை வளாகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கோட்டையில் மட்டும் 500 போலீசார் குவிக்கப்பட்டனர்.


    வெளியேயும், சாலையின் இருபுறமும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமான போலீஸ் வாகனங்களும் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தது. சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் சட்டசபை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    போலீஸ் பாதுகாப்புக்கு இடையே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சட்டசபைக்கு அணி அணியாக வந்து கலந்து கொண்டனர். #TNAssembly #DMK
    Next Story
    ×