என் மலர்
செய்திகள்
நாகர்கோவில்:
டி.டி.வி. தினகரன் அணியின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கருத்து வேறுபாடு காரணமாக அவரது அணியில் இருந்து திடீரென விலகினார். பின்னர் இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பேன் எனவும் அறிவித்தார்.
இந்தநிலையில் நேற்று சென்னையில் நடந்த தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்தும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டனர். அப்போது 2 பேரும் கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

நாஞ்சில் சம்பத், ஏற்கனவே ம.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர். நேற்று அவர் வைகோவை சந்தித்து பேசியது ம.தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி.மு.க.வில் சேர வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதை நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார்.
வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் முன்னெடுத்த தமிழ் இலக்கிய நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். விசாகப்பட்டினம், கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோவும் கலந்து கொண்டார். நாங்கள் இருவரும் இலக்கியம் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினோம்.
அப்போது மரியாதை நிமித்தமாக நாங்கள் சந்தித்து பேசிக் கொண்டோம். நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை. நான் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி தமிழ் இலக்கிய மேடைகளில் பங்கேற்று வருகிறேன். ம.தி.மு.க.வில் மீண்டும் சேரும் எண்ணம் இல்லை. இதுபோல எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு கிடையாது.
ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி தாக்குதல் நடந்துள்ளது. இதன் மூலம் அழியாத பழியை தேடி உள்ளது எடப்பாடி அரசு. இதற்கு அவரால் பிராயச்சித்தம் தேட முடியாது. பலியானவர்களின் ஆவி அவர்களை சும்மா விடாது.
தற்போது 56 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் உள்ளனர். ஆனால் அவர்களை சந்திக்க முதல்-அமைச்சர் அங்கு செல்லவில்லை. தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல நடப்பது அ.தி.மு.க. ஆட்சியா அல்லது பா.ஜ.க. ஆட்சியா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #vaiko
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி உரிமையை பெற்றதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு சரியான வாதத்தை முன்வைத்ததன் மூலமாக காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் 80 அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என்பது வழக்கம். இருப்பினும் குருவை சாகுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகவில்லை. அரசியலாகவே பார்க்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி பிரச்சினையை காரணம் காட்டி தான் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசு பெரும்பான் மையை நிரூபிக்க எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

கடந்த தி.மு.க. ஆட்சி தான் மைனாரிட்டி ஆட்சி. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி மெஜாரிட்டியுடன் தான் செயல்படுகிறது. எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் காம ராஜ் கூறினார். #admkgovernment #mkstalin
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“நாங்கள் எதிர்க்கட்சியினர்தானே தவிர, எதிரிக் கட்சியினர் அல்ல. இந்தப் பேரவையிலே இருக்கின்ற யாருமே எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலே எதிரிகளும் அல்லர். எல்லோருமே தமிழக மக்களுக்கு நண்பர்களாகச் செயல்படவேண்டிய பொறுப்பிலே இருக்கிறோம்.
அவர்களுக்கு நம்பிக்கையுள்ளவர்களாகக் கடமையாற்ற வேண்டியவர்களாகிறோம். அதற்குரிய வாய்ப்பு இந்த அவையிலே கிடைக்கும் என்று நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன்” என்று இன்றைய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பேற்ற நேரத்தில் உரையாற்றி, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், தொடக்கத்திலிருந்து மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை எடுத்து வைத்து ஜனநாயக ரீதியாகவும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும் ஆக்கபூர்வமாகவும் ஆர்வத்துடனும் சட்ட மன்றத்தில் பணியாற்றி வந்ததை அனைவரும் அறிவர்.
அதன் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டுப் பிரச்சனை, நீட் தேர்வுப் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை ஆகிய அனைத்துப் பிரச்சனைகளிலும் மக்களின் பொதுநலன்கருதி ஆளுங்கட்சியுடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்து தீர்மானங்களை நிறைவேற்றவும், சட்டங்களை நிறைவேற்றவும் துணை நின்றது தி.மு.க.

ஆனாலும் அ.தி.மு.க.வைப் பொறுத்த மட்டில், பெரும்பான்மை இல்லாமல் சட்டநெறிமுறைகளுக்கு எதிராக,குறுக்கு வழியில், மத்திய பாஜக அரசின் உள்நோக்கத்துடன் கூடிய தயவில், பதவியில் நீடிப்ப தோடு மட்டுமின்றி, சட்ட மன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் நசுக்கிப் பொசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
13 பேர் உயிரைப் பறித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை “துப்பாக்கிச் சூடு “பற்றியே அவையில் பதிவு செய்யாமல், ஒரு முதல்-அமைச்சர் குறிப்பாக விபரங்களைச்சொல்லிப் பதிலளிக்காமல், பொத்தாம் பொதுவாகப் பேசி அவையின் உரிமையை மீறினார்.
ஆக்கபூர்வமாகவும் வெளிப்படைத் தன்மையோடும் முறையான விவாதங்களுடன் நடைபெறவேண்டிய சட்டமன்றத்தில், மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி வாதிடவும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்து வைக்கவும் அனைத்துக் கதவுகளும் அறவே மூடப்பட்டு விட்டன.
இனியும் சட்டமன்றத்தில் அமர்ந்து பொய்புரட்டுகளையும் வறட்டு விளக்கங்களையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டு அமைதிகாப்பது, வாக்களித்த மக்களை வஞ்சிப்பதாக அமையும் என்றே சட்டமன்ற நடவடிக்கைகளை இந்தத் தொடர் முழுவதும் புறக்கணிப்பதாக தி.மு.க. கொறடா அறிவித்தார்.
கடந்த 1.6.2018 அன்று திருவாரூரில் நடைபெற்ற தலைவர் கலைஞரின் 95-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மரியாதைக்குரிய தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் “நீங்கள் சட்டமன்றத்திற்குச் செல்லுங்கள்;. எங்களுடைய குரலை பிரதிநிதித்துவப் படுத்துங்கள்; அப்போதுதான் எங்களுக்குச் சரியான பாதுகாப்பு” என்று வலியுறுத்தினார்கள்.
அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நேற்று (2.6.2018) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதித்து, சட்ட மன்றத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுத்து உருவாக்கிட, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.
பேரவைத் தலைவரை, பதவியில் அமர்த்திய போது இருந்த அந்த நம்பிக்கை இடையில் தளர்ந்து விட்டாலும், என்றைக்கும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயலாக்கத்தில் ஈடுபாடு காட்டும் மாபெரும் இயக்கம் தி.மு.க. என்ற அடிப்படையிலும், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் சட்டமன்றத்திற்குச் செல்கிறோம்.
தமிழக நலனுக்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்க பூர்வமான விவாதங்களில் மீண்டும் ஈடுபடுவோம்.
தி.மு.க. எடுக்கும் எந்த முடிவும், நாடுஇனம்மொழி ஆகியவற்றை மையப்படுத்தியும், அவற்றின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தியும் அமைந்து வருவதை, தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #TNAssembly
கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் 10-வது வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்கு விடிவு தந்திருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கையெழுத்திட்ட மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகள் தமிழ மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மத்தியில், மாநிலத்தில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது அவர்கள் ஒரு முறை கூட தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் காவிரி விவகாரத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதனை தீர்க்க கூடிய இடத்தில் தி.மு.க. -காங்கிரஸ் இருக்க வேண்டும்.
தூத்துக்குடி சம்பவத்தில் பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. இனி மேலாவது அதனை செய்ய வேண்டும். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அங்கு தேவையானவற்றை செய்வோம்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எதை கொண்டு வந்தாலும் சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் தமிழகம் முன்னேற கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒன்றரை கோடி தமிழர்களை கொன்று குவித்து ராஜபக்சேவின் கைக்கூலிகள். அவர்களை ஒன்றரை கோடி தமிழர்களின் ஆவி சும்மா விடாது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தேசத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னராசு, தேசிய செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #SVeShekher
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அற்புதங்களையும் நிகழ்த்திவிடாது என்ற போதிலும், காவிரி நீர் குறித்த கோரிக்கைகளையும், புகார்களையும் தெரிவிக்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற வகையில் இது வரவேற்கத்தக்கது.
புதிய ஆணையத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை அதன் பணிகளைக் கவனிப்பதற்கான தற்காலிகத் தலைவராக மத்திய நீர்ப்பாசனத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலோட்டமாக பார்க்கும் போது இது இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், ஆணையத்தின் அமைப்பையே மாற்றுவதற்கான தொடக்கப்புள்ளி தான் இது என்பது தான் உண்மையாகும்.
காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் ஒரு தலைவரையும், முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேரையும் கொண்டிருக்கும். இவர்களில் 8 பேர் நீர்ப்பாசனத்துறை வல்லுனராகவும், ஒருவர் வேளாண்-பொருளாதார வல்லுனராகவும் இருப்பார்கள் என்பது தான் அந்த அமைப்பின் சிறப்பாகும்.
ஆனால், இப்போது மத்திய அரசு அமைக்கவுள்ள மேலாண்மை ஆணையம் ஒரே ஒரு நீர்ப்பாசன வல்லுனரையும், 8 நிர்வாக அதிகாரிகளையும் கொண்டிருக்கும். 8 நிர்வாக அதிகாரிகளில் குறைந்தது 5 பேர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருப்பர். இதன்மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முழுக்க, முழுக்க நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பால் மாநிலங்களின் நீர்ப்பாசனத் தேவைகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடியாது.
அதுமட்டுமின்றி, நீர்ப்பகிர்வு சார்ந்த சிக்கல்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும் கூட, அதன் தீர்ப்பை ஏதேனும் மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுபற்றி மத்திய அரசிடம் முறையிட்டு உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்தே காவிரி மேலாண்மை ஆணையம் பல் இல்லாத அமைப்பு என்பது தெளிவாகிவிட்டது. இனிவரும் காலங்களில் ஆணையம் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் அதை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளாது.
அதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட்டாலும் கர்நாடகத்திற்கு எதிராக மத்திய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதால் காவிரிப் பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துள்ளது.
எனவே, காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் காவிரி ஆணையத்தின் தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமித்து அதை முழுக்க முழுக்க தொழில்நுட்ப அமைப்பாக மாற்ற வேண்டும்; காவிரி மேலாண்மை ஆணையம் அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மாநிலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஆணையத்திற்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryManagementBoard #CauveryWater
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்லி, வேண்டுமென்றே தாமதப்படுத்தி, 104 நாட்கள் கடந்த நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் அரசிதழினை மத்திய அரசு அரை குறை மனதோடு வெளியிட்டிருப்பது, ஓரளவு ஆறுதலை தருவதாக உள்ளது.
உச்சநீதிமன்றம் 16.2.2018ல் அளித்த இறுதித்தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை அளிக்க, தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாயிகளின் அமைப்புகளும், பொது மக்களும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றியாகவே, கடந்த 18.5.2018 அன்று உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்ட வரைவுத் திட்டம் அமைந்தது.
ஜூன் 1 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியிருந்த நிலையில், இந்த இடைப்பட்ட 13 நாட்களில் மாநிலங்களில் இருந்து ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டிய பெயர்களையும் பெற்று, தலைவர், உறுப்பினர்கள் யார் யார் என்ற விவரத்துடன் முழுமையாக காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும்.
ஆனால், அப்படி செய்யாமல் இறுதி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்பது மட்டுமே அரசிதழில் வெளியாகியிருக்கிறது.
இதுதவிர, ஏற்கனவே 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டுள்ளது. இப்படி திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் ஒதுக்கீடு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த திருத்தப்பட்ட இறுதித்தீர்ப்பின் நீர் பங்கீட்டு அளவுகள், மத்திய அரசின் இந்த அரசிதழிலும் இடம்பெறவில்லை. தனியாகவும் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பிற்கு அரசிதழ் வெளியாகவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களில் 5 பேர், அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்திய அரசை சார்ந்தவர்கள் என்பதால், ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு உறுதி செய்யப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் வரைவுத் திட்டத்திலோ, ஆணையம் அமைக்கும் அரசிதழிலோ இடம்பெறவில்லை. அவர்கள் மத்திய பாஜக அரசின் எண்ணத்தைத்தான் செயல்படுத்துவார்கள் என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது.

எனவே, தலைவர், உறுப்பினர்கள் கொண்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அணைகளை அதன் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவந்து, சுதந்திரமான தன்னாட்சி அதிகாரங்கள் இருக்கும் அளவிற்கு விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலான நீர்ப்பங்கீடுகள் குறித்து ஓர் அரசிதழ் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போதாவது, அதற்கான முழுமூச்சிலான நடவடிக்கைகளில், பாஜக அரசிடம் கைகட்டிச் சேவகம் செய்வதை மறந்து, தன்மானத்தோடு தலைநிமிர்ந்து, அதிமுக அரசு உடனடியாக ஈடுபட்டு, ஜூன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MetturDam #DMK #MKStalin
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான தமிழரசன் மற்றும் காளியப்பன் ஆகியோரது குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியை இன்று வழங்கினார். காளியப்பன் குடும்பத்தினருக்கு தாளமுத்துநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றும், தமிழரசன் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைத்தும் இந்த நிதியை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
மேலும் அவர், துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். பின்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மோதலில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினேன். தூத்துக்குடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சென்ற பிறகு, இங்குள்ள நிலவரம் குறித்து எடுத்துக்கூறிய பிறகே ஸ்டெர்லைட் ஆலையை மூட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை செய்யாமல் உள்ள மற்ற 6 பேரின் உடல்களும் கோர்ட் உத்தரவுப்படி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒப்படைக்கப்படும்.
பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்ட பின் தூத்துக்குடியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீஸ் எண்ணிக்கை தளர்த்தப்படும்.
மோதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வாலிபர் பிரின்ஸ்டன் கால் இழந்தது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #TNMinister #KadamburRaju #ThoothukudiFiring
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 25-வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி வரவேற்றார். கலையரங்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது:-
1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த கோடு மூலமாக செல்போனில் பாடத்தை தெரிந்து கொள்ளலாம். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி கற்றுத்தர இந்த அரசு முனைப்புடன் செயல்பட உள்ளது. புதிய சீருடைகள் மாற்றி அமைத்ததன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மானப்பான்மை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.
1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கல்வியாளர்கள் உழைத்து இந்த புதிய புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இந்த புத்தகம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழக கல்வி துறை மாறும் என்பதில் ஐயமில்லை. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி உள்ளது. இந்தியாவிலேயே எவரும் பெற முடியாத மடி கணினி திட்டத்தையும், இலவச சைக்கிள் வழங்கும் அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா தான். அவரது ஆசியோடு இந்த அரசு நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. கட்டாய கல்வி சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் விளக்கப்படும்’’ என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
திருவாரூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருவாரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அமைக்கப்படவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியில்லை. இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்படையும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு திசை திருப்பும் முயற்சிகளை மேற்கொள்ள கூடாது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டு கொடூரமான முறையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தியும், சம்பவத்திற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சட்டமன்றத்தை புறக்கணித்துள்ளது சரியான நடவடிக்கை தான். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பேசி தி.மு.க.வை குற்றம் சாட்டி வருகிறார்.

ஸ்டெர்லைட் போராட்டங்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருப்பது மோசமானது. தமிழக அரசு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த், திரைப் படங்களில் போராட்டம் நடத்துவது போன்று நடித்து வருகிறார். ஆனால், நிஜ வாழ்க்கையில் போராட மறுக்கின்றார். தற்போது மக்கள், போராட்டத்தின் மூலமாகத்தான் வெற்றி பெறுகின்றனர். தமிழக அரசு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்துள்ளது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் சரிவர நடைபெறவில்லை. விவசாய தொழிலாளர்கள் நாடோடிகளாகவும், அனாதைகளாகவும் உள்ளனர். எனவே இத்திட்டத்தின் நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும்.
பா.ஜனதா கட்சி தேர்தலில் தோல்வியடைந்து இருப்பது நாட்டு மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth
அவனியாபுரம்:
சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் பலியானார்கள். காயமடைந்த 5 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறறு வருகின்ற னர்.
இவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்திவரும் கச்ச நத்தம் கிராம மக்களையும் சந்தித்து பேசினார்.
முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளது. இதுபோதாது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்க வேண்டும்.
வன்முறையை தடுக்க தவறிய பழையனூர் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் மட்டும் செய்தது போதாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் கடுமையாக இருந்தவரை தலித்துகள் மீதான வன்முறை குறைந்து இருந்தது. தற்போது இந்த சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீர்த்துப்போய் உள்ளது. மோடி அரசு இதற்கு மாற்றாக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.

ரஜினிகாந்த் தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என கூறியது தவறு. அப்படி இருந்தால் சமூக விரோதிகள் யார்? என அவர் தெளிவுபடுத்த வேண்டும். அவரது பேச்சு உரிமைக்காக போராடும் மக்களை கொச்சைபடுத்துவது போல் உள்ளது. ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களின் பிரச்சினைக்கு போராடினால் தான் போலீசாரை பற்றி தெரியவரும்.
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மோடி வருத்தமோ? இரங்கல் தெரிவிக்காதது ஏன்? தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தனிநபர் ஆணையம் விசாரணைக்கு பதில் சிறப்பு புலானாய்வு குழு அமைத்து பதவியில் உள்ள நீதிபதி மூலம் விசாரணை செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார். #rajinikanth #thirumavalavan #tuticorinissue
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் மே 22-ந் தேதி அன்று காவல்துறையினர் கொலைவெறியுடன் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இதுவரை நடை பெற்ற போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தமிழரசன் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை. புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த இவர் திருமணம் ஆகாத இளைஞர்.
சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரசனின் உடலைக் காணச் சென்ற அவரது ஒன்றுவிட்ட அண்ணனையும் காவல்துறையினர் கைது செய்து விட்டு, தமிழரசனின் உடலை வாங்காவிட்டால் அவரது அண்ணனையும் சுட்டுக் கொல்வோம் என்று குடும்பத்தாரிடம் மிரட்டினர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரசனின் அண்ணன் ஸ்டெர்லைட் போராட்டங்களிலும் எங்கள் இயக்க நடவடிக்கைகளிலும் ஆதரவாக இருந்தவர். இவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டார்.
தமிழரசன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற என்னிடம் அக்குடும்பத்தினர் அரசாங்கத்தின் நிதி எங்களுக்கு வேண்டாம், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்தி கோரமாக 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

இந்நிலையில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் உண்மை கண்டறியும் குழுவினர் தூத்துக்குடிக்கு சென்று பொதுமக்களிடம் 22-ந்தேதி சம்பவம் குறித்த விவரங்களையும், செய்திகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவில் அந்தக்குழுவில் இருந்த 8 பேரையும் காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து எவரும் அறிய முடியாத இடத்தில் கொண்டு போய் அடைத்து வைத்துள்ளனர்.
இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்த மதுரை வக்கீல் சரவணக்குமார், கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகன், மணி, சமயன், அருப்புக்கோட்டை கோவேந்தன், தூத்துக்குடி வன்னி பெருமாள் ஆகிய எட்டு பேரும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினர் யாரைக் கைது செய்தாலும் உடனடியாக அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு, வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்க வேண்டியது கடமை ஆகும்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காவல்துறையின் ஜனநாயக விரோதமான அடக்குமுறைக்கு ம.தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விக்கிரவாண்டியில் சுங்க சாவடி பூட்டை உடைத்தார் என்று பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மேலும் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். வேல்முருகன் தொடர்ந்து போராடி வருகிறார் என்பதற்காக அவர் மீது தேச விரோத வழக்கு பதிந்துள்ளனர்.
ஆட்சி அதிகாரம் இருப்பதால்தான் அ.தி.மு.க.வில் பலர் இருக்கிறார்கள். எதிர்த்து பேசுபவர்கள் மீது இந்த அரசு பொய் வழக்கு போடுகிறது. இது பாசிச போக்காகும். மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூரில் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கனிமொழி எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
பின்னர் அவர் காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #DMK #Kanimozhi #PonRadhakrishnan






