என் மலர்
செய்திகள்
சென்னை:
அ.தி.மு.க.வில் கட்சிக்காக பாடுபட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவர் பெரும்பாக்கம் ராஜசேகர். இவர் இதற்கு முன்பு மாவட்ட மாணவரணி செயலாளராகவும், பரங்கிமலை ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான பெரும்பாக்கம் ராஜசேகர் இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் கழக வேட்பாளர்களுக்காக தீவிரமாக வாக்கு சேகரிப்பவர். கட்சிக் கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்தி பெயர் பெற்றவர்.
கட்சியில் இவரது உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக கட்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் பரிந்துரை செய்த பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பதவி கிடைத்ததும் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி தனது பணிகளை துவங்கினார். #ADMK
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியை ரூ.20 லட்சமாக உயர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது. பயங்கரவாதிகள் பஸ்சுக்கு தீ வைத்ததில் ஒரு பெண் பலியாகி இருக்கிறார். அந்த குடும்பத்துக்கு என்ன செய்யப்போகிறார்கள்.
பிரிவினைவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்க தி.மு.க. தயங்குவது ஏன்? பயங்கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் தண்டிக்க வேண்டும் என்று சொல்லக்கூட தி.மு.க. தயங்குவது ஏன் என்று புரியவில்லை.
தமிழகத்தில் நடந்து வரும் பல விஷயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தை இழந்து நிற்கிறது. முக்கியமான பொருள் பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது கூட்டத்தை புறக்கணித்து விட்டு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் நாடகத்தை அரங்கேற்றி போலியான சட்டமன்ற கூட்டங்களை கட்சி அலுவலகத்திலும் திருச்சி, சேலம், திருநெல்வேலி நகரங்களிலும் நடத்துகிறார்கள். இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு அனுப்பினார்கள்.

சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துவார்கள் என்றால் ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தி.மு.க.வும், காங்கிரசும் சமஅளவு காரணமாக இருந்ததை ஆளும் கட்சியால் வெளிக்காட்டப்படும் ஆபத்து இருக்கிறது.
அ.தி.மு.க. செய்த தவறுகளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய ஆபத்தும் உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
அதனால்தான் அவர்களுக்குள் இப்படி ஒரு உடன்பாட்டை போட்டு நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க. தனது போலித்தனமான அரசியல் விளையாட்டுக்களை விட்டு விட்டு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை எதிரொலிப்பது மட்டுமே வாக்களித்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
தவறுகளை திரைக்குப் பின்னால் மறைக்கும் முயற்சிதான் இது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #DMK #PonRadhakrishnan
மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்க மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ராஜ்வர்தன் ரத்தோர் இன்று கோவை வந்தார்.
அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தமிழகம் முழுவதும் மத்திய மந்திரிகள் விளக்க இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும்.
தூத்துக்குடி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதுகுறித்து எதிர்கருத்துகள் வந்தால் அதை தாங்கி கொள்ளாமல் மிக மோசமான விமர்சனம் செய்யும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.
பொதுமக்கள் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை திசைதிருப்பி வரம்பு மீறச் செய்து அதை அபாயக்கட்டத்தில் கொண்டு போய் விடுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
போராட்டத்தின் போது சமூக விரோதிகள் கலந்திருக்கிறார்கள் என்ற பா.ஜ.க. மற்றும் ரஜினி சொல்லும் போது மற்ற கட்சிகள் ஏன் எதிர்த்து பாய்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களை கொச்சைப்படுத்துவதாக சொல்லி கொந்தளிக்கிறார்கள்.

ஸ்டெர்லைட்டில் அபாயம் இருப்பதற்கு காரணம், 40 ஆயிரம் டன் காப்பர் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியின் போது ஸ்டெர்லைட் நிர்வாகம் பெற்ற ஊக்கம் தான். அதுதான் அவர்களை 4 லட்சம் டன் காப்பரை உற்பத்தி செய்ததன் விளைவு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தி.மு.க. ஒப்புக்கொள்ள வேண்டும்.
முதல்-அமைச்சர் சொன்னது போல தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு பல உதவிகள் கிடைத்தது உண்மை தான். அதை மறைக்க அவர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
போராட்டம் மட்டுமே தமிழகத்தில் சோறு போடும் என எல்லா கட்சிகளும் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைதியாக வாழக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யும் நாடகத்தை எல்லா கட்சிகளும் நடத்தினால் தமிழக மக்கள் அதை புறக்கணிப்பார்கள். மிக மோசமான முன் உதாரணத்தை தமிழக அரசியலில், சட்டமன்ற வரலாற்றில் ஸ்டாலின் படைத்து வருகிறார். இப்படி வெளிநடப்பு செய்தால் தமிழக மக்கள் நலன் புறக்கணிப்படுகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1996-ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டம் இந்த நிலைக்கு மாறியது சமூக விரோதிகளால் தான். தற்போது எனக்கு கடுமையாக விமர்சனங்கள் வருகிறது. தொலைபேசியில் மிரட்டல்கள் வருகின்றன.
யாரெல்லாம் சமூக விரோதிகளை சொன்னால் கோபப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்கள். ரஜினி துணிச்சலாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது. உடனே அவர் பின்னால் பா.ஜ.க., அ.தி.மு.க. இருக்கிறது என்று சொல்லக் கூடாது. சினிமாவில் வேண்டும் என்றால் அவருக்கு டப்பிங் பேசலாம். உண்மையான அரசியலில் அப்படி இருக்க முடியாது.
ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு காரணம் தி.மு.க., காங்கிரஸ் தான். அதற்கு முழு பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் முடிந்த பிறகு வேறு எந்த பிரச்சினையை தேடலாம் என்று எதிர்கட்சிகள் யோசிப்பார்கள். இதனால் தான் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடி இருக்கின்றன. இனிமேல் தான் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும்.
விஞ்ஞான பொருளைக் கண்டுபிடிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார்கள். கெயில் திட்டத்தை கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தை சுடுகாடாக மாற்றத்தான் பல போராட்டங்கள் இருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பல உதவிகளை செய்தார். மக்களுக்கு பாதிக்கப்படுகின்ற திட்டங்களை மத்திய அரசு ஒப்புக் கொள்ளாது.
தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விடும் என்பதால் சமூக வலைதளங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெண் தலைவர் என்று கூட பார்க்காமல் வரம்பு மீறி தரக் குறைவாக விமர்சனங்களை செய்கின்றனர்.
இதை நாங்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டோம். எங்கள் வேலையை திறம்பட செய்வோம். என்னை பற்றி வரம்பு மீறி பேசினால் அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:
தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது தான். போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.
அவர்களை தூண்டி விட்ட சதிகாரர்கள் யார் என கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கர்நாடகத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் காங்கிரஸ் கட்சி சதி செய்து ஆட்சி அமைக்க விடாமல் செய்து விட்டது.
தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம் பாளையத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குளம் தூர் வாரப்பட்டதாக கூறி பணம் மோசடி நடைபெற்று உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் அரசு தான் கொண்டு வந்தது.
இத்திட்டத்தில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை. இத்திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஆதார் கார்டு மூலம் தான் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அவ்வாறு இருந்தும் முறைகேடு நடைபெறுகிறது. இனி இவ்வாறு நடைபெறாமல் நல்ல வழி ஏற்படுத்தப்படும்.
எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. அவர்கள் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. வீட்டையும், நாட்டையும் தாங்கும் தூண் போல் செயல்பட வேண்டும்.
முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் பயத்தில் இருப்பார்கள். இப்போது இளைஞர்கள் வெளியே சென்றால் பெற்றோர் பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட தலைவர் உத்திரகுமார், செயலாளர் சுப்பு, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். #ilaganesan #rajinikanth #thoothukudiprotest
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-
நானும் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையிலும், அது அவருடைய சொந்த குரலா? என்பது ஒரு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற்கனவே பா.ஜ.க. சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறது.
எனவே, அந்த குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார். அவரே தீவிரவாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்த தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதுமட்டுமல்ல வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திர போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி எல்லாமே போராட்டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விஜயதாரணி (காங்கிரஸ்), அபுபக்கர் (முஸ்லிம் லீக்) டி.டி.வி.தினகரன் (அம்மா முன்னேற்ற கழகம்) ஆகியோர் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை மீண்டும் சட்டசபைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அப்போது கூறியதாவது:-
காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தி.மு.க.வை மீண்டும் அழைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அரசுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை வெளியே பேசி வருகிறார்கள்.
இந்த ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து ஒரு கருத்தை இங்கு தெரிவிக்க நான் விரும்புகிறேன். நான் இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சொல்ல வைத்து விட்டார்கள்.
நேற்று இந்த ஆலை பிரச்சனை குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான் விளக்கம் அளித்திருக்கிறேன். எந்த தவறான கருத்தையும் நான் சொல்லவில்லை. அது ஒரு தனிப்பட்ட ஆலை.
எனவே சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி இந்த ஆலை அனுமதியை ரத்து செய்வது பற்றி முடிவு எடுத்து இருக்கிறோம். இந்த முடிவு சட்டப்படி செல்லும் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
மாவட்ட மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கிறது.

2010-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி அதற்காக 230 ஏக்கர் நிலம் வழங்கும் அனுமதியை அளித்திருக்கிறார். தொழில் துறை அமைச்சராக இருந்தபோது அனுமதியை வழங்கி விட்டு இப்போது அ.தி.மு.க. அரசு மீது குறை சொல்கிறார்கள்.
நீங்கள் என்ன சொன்னாலும், பேசினாலும் அதை அறிவதற்கு தகவல் உரிமை சட்டம் இருக்கிறது. அதன் மூலம் பொதுமக்களும் இந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
உண்மை இவ்வாறு இருக்க தாங்கள் நிராபராதி என்று வெளியில் போய் பேசுகிறார்கள். இங்கே பேசினால் உண்மை வெளியாகி விடும் என்று அவர்களுக்கு பயம். இப்போதும் சொல்கிறேன். அந்த ஆலையை நிரந்தரமாக மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருக்கிறது.
2013-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆலையை மூட உத்தரவிட்டார். அப்போதே இந்த ஆலையை மூட நடவடிக்கை தொடங்கி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார். #TNCM #EdappadiPalanisamy #SterlitePlant
தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். தற்போது 3,866 மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.750 சம்பள உயர்வு அளிக்கப்படும். டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.600, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 என்ற விகிதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்.
தமிழகத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பை பெறும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #TasmacSalaryHike #TNassembly
மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். இன்று அவர் சக விவசாய சங்கத்தினருடன் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்றபோது பா.ஜ.க.வினர் தாக்கி உள்ளனர். இதற்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவும், அவருடன் பயணித்த இயக்கத்தினரும், அரக்கோணம் வழியாக திருத்தணி செல்லும் வழியில் பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

அவர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல் என்பது கடும் கண்டனத்திற்கு உரியது. அய்யாக்கண்ணு தனிநபர் அல்ல, அவர் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத்தான் போராடி வருகிறார்.
பாஜகவினர் சட்ட மீறல்களில் ஈடுபடும்போது தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டுவது தமிழகத்தை அபாயச் சூழலுக்குத்தான் கொண்டு செல்லும் என்பதை பழனிசாமியின் அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #AttackOnAyyakannu #TTVDhinakaran
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க புதுவை வந்தார்.
புதுவையில் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், ஆட்சியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவருடைய கருத்து முதல்-அமைச்சர் மற்றும் மதவாத சக்திகளின் கருத்துகளை பிரதிபலிப்பதாக உள்ளது. சாதியவாதிகள், மதவாதிகள் கருத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆட்சியாளர்,காவல்துறையினருக்கு எதிராக பேசக் கூடாது என்ற சிந்தனை மேலோங்கி உள்ளது.
தமிழக முதல்வரும், நடிகர் ரஜினிகாந்தும் சமூகவிரோதிகள் யார் .? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி வழங்கி உள்ளார். அவரின் மனிதநேய மாண்பை பாராட்டுகிறோம். அதேவேளையில் ரஜனிகாந்தின் கருத்து காவல் துறையின் ஒடுக்கு முறையை நியாயப்படுத்தும் போக்கில் உள்ளது.

அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள். இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்க கூடாது. வேல்முருகன் மீதான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்
இவ்வாறு திருமாவளவன் கூறினார். #thirumavalavan #rajinikanth #thoothukudiprotest
சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் மாதிரி சட்டமன்றக் கூட்டம் கீழ்க்கண்ட நாட்களில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் நடைபெறும்.
5-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) திருநெல்வேலி- வி.எம்.எஸ்.திருமண மண்டபம், மகாராஜா நகர், பாளையங்கோட்டையில் நடக்கிறது.
8-ந் தேதி (வெள்ளி) திருச்சியில் கரூர் பை-பாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது.
12-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) சேலம்- இரும்பாலை ரோட்டில் உள்ள எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில் நடக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி சட்டசபையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருகிறார்கள்.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தினார்கள். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தவிர அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன்அன்சாரி ஆகியோர் உள்பட 97 பேர் கலந்து கொண்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதனால் சட்டசபையில் ஆளும் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் தவிர தனியரசு, டி.டி.வி. தினகரன் உள்பட 116 பேர் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாமல் சட்டசபை கூட்டம் நடந்தது. அவ்வாறு சட்டசபையை நடத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234 ஆக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே சபையை நடத்தலாம். அதாவது 10-ல் 1 பங்கு உறுப்பினர்கள் சபையில் இருந்தாலே போதுமானது. சபையை நடத்த முடியும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சபையை நடத்த முடியுமா? என்ற கேள்வியே எழாது.
ஓட்டெடுப்பு என்று வரும் போது சபையில் எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அதில் பெரும்பான்மையை கணக்கிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுக்கடைகளில் திருட்டு நடப்பதை தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 மதுக்கடைகளில் எச்சரிக்கை ஒலி சாதனத்தை நிறுவி உள்ளோம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் 1250 கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களும், 7 பீர் தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பீர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டில் 10,08,625 பீர் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.161.69 லட்சம் ஏற்றுமதி கட்டணமாக பெறப்பட்டுள்ளது.
மது விற்பனை மூலம் அரசுக்கு கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.26,995 கோடியே 25 லட்சம் வருமானம் கிடைத்து இருந்தது. 2017-18ம் ஆண்டில் ரூ.26,794 கோடியே 11 லட்சம் வருமானம் வந்துள்ளது.
இதில் ஆயத்தீர்வை வருவாய் 2016-17ல் ரூ.6,248 கோடியே 17 லட்சம் வந்தது. 2017-18ல் 6,009 கோடியே 25 லட்சம்தான் கிடைத்துள்ளது. ஆயத்தீர்வை வருவாய் குறைவாகவும், மதிப்பு கூட்டு வரி அதிகமாகவும் இருப்பது, வரி விதிப்பு முறைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களால் ஆகும்.
இந்த தொகை அரசிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தால் 2012-13ம் ஆண்டில் மிகையாக செலுத்தப்பட்ட சிறப்புரிமை கட்டணம், விற்பனை கட்டணம் ரூ.193 கோடியே 96 லட்சத்தை கழிப்பதற்கு முன்னதாக உள்ள தொகையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பழுதான 1,66,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து 1,000 டிரான்ஸ்பார்மர் கைமாற்றாக வாங்கி இருக்கிறோம். இப்போது டிரான்ஸ்பார்மர் இல்லாத பகுதிகளுக்கு கொடுத்து வருகிறோம்.
தட்கல் முறையில் வருடத்துக்கு 10,000 மின் இணைப்புகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பதிவு செய்தவர்களுக்கு கொடுத்து விட்டோம். ஆண்டுக்கு 10,000 மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின் ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் கம்பங்களில் ஏறுவதாக உறுப்பினர் தெரிவித்தார். மின்வாரியம் பாதுகாப்பு கவசங்களை ஊழியர்களுக்கு கொடுத்து உள்ளது. அவர்கள் அதை கொண்டு வராமல் இருந்து இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly






