search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விற்பனை வருவாய் குறைந்து விட்டது- சட்டசபையில் அமைச்சர் தகவல்
    X

    மது விற்பனை வருவாய் குறைந்து விட்டது- சட்டசபையில் அமைச்சர் தகவல்

    டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் ரூ.26,995 கோடியிலிருந்து ரூ.26,794 கோடியாக குறைந்துள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடைகளில் திருட்டு நடப்பதை தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 மதுக்கடைகளில் எச்சரிக்கை ஒலி சாதனத்தை நிறுவி உள்ளோம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் 1250 கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களும், 7 பீர் தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பீர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டில் 10,08,625 பீர் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.161.69 லட்சம் ஏற்றுமதி கட்டணமாக பெறப்பட்டுள்ளது.

    மது விற்பனை மூலம் அரசுக்கு கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.26,995 கோடியே 25 லட்சம் வருமானம் கிடைத்து இருந்தது. 2017-18ம் ஆண்டில் ரூ.26,794 கோடியே 11 லட்சம் வருமானம் வந்துள்ளது.

    இதில் ஆயத்தீர்வை வருவாய் 2016-17ல் ரூ.6,248 கோடியே 17 லட்சம் வந்தது. 2017-18ல் 6,009 கோடியே 25 லட்சம்தான் கிடைத்துள்ளது. ஆயத்தீர்வை வருவாய் குறைவாகவும், மதிப்பு கூட்டு வரி அதிகமாகவும் இருப்பது, வரி விதிப்பு முறைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களால் ஆகும்.

    இந்த தொகை அரசிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தால் 2012-13ம் ஆண்டில் மிகையாக செலுத்தப்பட்ட சிறப்புரிமை கட்டணம், விற்பனை கட்டணம் ரூ.193 கோடியே 96 லட்சத்தை கழிப்பதற்கு முன்னதாக உள்ள தொகையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பழுதான 1,66,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து 1,000 டிரான்ஸ்பார்மர் கைமாற்றாக வாங்கி இருக்கிறோம். இப்போது டிரான்ஸ்பார்மர் இல்லாத பகுதிகளுக்கு கொடுத்து வருகிறோம்.

    தட்கல் முறையில் வருடத்துக்கு 10,000 மின் இணைப்புகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பதிவு செய்தவர்களுக்கு கொடுத்து விட்டோம். ஆண்டுக்கு 10,000 மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மின் ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் கம்பங்களில் ஏறுவதாக உறுப்பினர் தெரிவித்தார். மின்வாரியம் பாதுகாப்பு கவசங்களை ஊழியர்களுக்கு கொடுத்து உள்ளது. அவர்கள் அதை கொண்டு வராமல் இருந்து இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
    Next Story
    ×