என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
    X

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது மு.க.ஸ்டாலின் தான் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #SterlitePlant
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விஜயதாரணி (காங்கிரஸ்), அபுபக்கர் (முஸ்லிம் லீக்) டி.டி.வி.தினகரன் (அம்மா முன்னேற்ற கழகம்) ஆகியோர் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை மீண்டும் சட்டசபைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அப்போது கூறியதாவது:-

    காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தி.மு.க.வை மீண்டும் அழைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அரசுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை வெளியே பேசி வருகிறார்கள்.

    இந்த ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து ஒரு கருத்தை இங்கு தெரிவிக்க நான் விரும்புகிறேன். நான் இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சொல்ல வைத்து விட்டார்கள்.

    நேற்று இந்த ஆலை பிரச்சனை குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான் விளக்கம் அளித்திருக்கிறேன். எந்த தவறான கருத்தையும் நான் சொல்லவில்லை. அது ஒரு தனிப்பட்ட ஆலை.

    எனவே சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி இந்த ஆலை அனுமதியை ரத்து செய்வது பற்றி முடிவு எடுத்து இருக்கிறோம். இந்த முடிவு சட்டப்படி செல்லும் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

    மாவட்ட மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆலைக்கு இதுவரையில் சீல் வைத்தது இல்லை. இப்போது சீல் வைத்து இருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் தவறான கருத்துக்களை கூறி வருகிறார். இந்த ஆலையை மூட அ.தி.மு.க. அரசுதான் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.


    எதிர்க்கட்சித் தலைவர் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது 2010-ம் ஆண்டு இந்த ஆலை ரூ.1,500 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவலை தெரிவித்து இருக்கிறார்.

    2010-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி அதற்காக 230 ஏக்கர் நிலம் வழங்கும் அனுமதியை அளித்திருக்கிறார். தொழில் துறை அமைச்சராக இருந்தபோது அனுமதியை வழங்கி விட்டு இப்போது அ.தி.மு.க. அரசு மீது குறை சொல்கிறார்கள்.

    நீங்கள் என்ன சொன்னாலும், பேசினாலும் அதை அறிவதற்கு தகவல் உரிமை சட்டம் இருக்கிறது. அதன் மூலம் பொதுமக்களும் இந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

    உண்மை இவ்வாறு இருக்க தாங்கள் நிராபராதி என்று வெளியில் போய் பேசுகிறார்கள். இங்கே பேசினால் உண்மை வெளியாகி விடும் என்று அவர்களுக்கு பயம். இப்போதும் சொல்கிறேன். அந்த ஆலையை நிரந்தரமாக மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    2013-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆலையை மூட உத்தரவிட்டார். அப்போதே இந்த ஆலையை மூட நடவடிக்கை தொடங்கி விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #EdappadiPalanisamy #SterlitePlant
    Next Story
    ×