என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்படாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X

    ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்படாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

    ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்படாது என்றும் நிரந்தரமாக மூடப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #TNMinister #KadamburRaju #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான தமிழரசன் மற்றும் காளியப்பன் ஆகியோரது குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியை இன்று வழங்கினார். காளியப்பன் குடும்பத்தினருக்கு தாளமுத்துநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றும், தமிழரசன் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைத்தும் இந்த நிதியை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

    மேலும் அவர், துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். பின்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மோதலில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினேன். தூத்துக்குடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சென்ற பிறகு, இங்குள்ள நிலவரம் குறித்து எடுத்துக்கூறிய பிறகே ஸ்டெர்லைட் ஆலையை மூட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் என்னிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று கூறினர். ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்படாது. நிரந்தரமாக மூடப்படும்.


    மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களில் 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு நபரின் உடல் இன்று மாலை அல்லது நாளைக்குள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பிரேத பரிசோதனை செய்யாமல் உள்ள மற்ற 6 பேரின் உடல்களும் கோர்ட் உத்தரவுப்படி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒப்படைக்கப்படும்.

    பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்ட பின் தூத்துக்குடியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீஸ் எண்ணிக்கை தளர்த்தப்படும்.

    மோதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வாலிபர் பிரின்ஸ்டன் கால் இழந்தது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #TNMinister #KadamburRaju #ThoothukudiFiring
    Next Story
    ×