search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க வந்த இளைஞர்களை போலீசார் கடத்தி விட்டதாக வைகோ குற்றச்சாட்டு
    X

    துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க வந்த இளைஞர்களை போலீசார் கடத்தி விட்டதாக வைகோ குற்றச்சாட்டு

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க வந்த 8 இளைஞர்களை போலீசார் கடத்தி விட்டார்கள் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #ThoothukudiFiring #SterliteProtest

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் மே 22-ந் தேதி அன்று காவல்துறையினர் கொலைவெறியுடன் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இதுவரை நடை பெற்ற போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தமிழரசன் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை. புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த இவர் திருமணம் ஆகாத இளைஞர்.

    சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரசனின் உடலைக் காணச் சென்ற அவரது ஒன்றுவிட்ட அண்ணனையும் காவல்துறையினர் கைது செய்து விட்டு, தமிழரசனின் உடலை வாங்காவிட்டால் அவரது அண்ணனையும் சுட்டுக் கொல்வோம் என்று குடும்பத்தாரிடம் மிரட்டினர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரசனின் அண்ணன் ஸ்டெர்லைட் போராட்டங்களிலும் எங்கள் இயக்க நடவடிக்கைகளிலும் ஆதரவாக இருந்தவர். இவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டார்.

    தமிழரசன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற என்னிடம் அக்குடும்பத்தினர் அரசாங்கத்தின் நிதி எங்களுக்கு வேண்டாம், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்தி கோரமாக 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினர்.


    இந்நிலையில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் உண்மை கண்டறியும் குழுவினர் தூத்துக்குடிக்கு சென்று பொதுமக்களிடம் 22-ந்தேதி சம்பவம் குறித்த விவரங்களையும், செய்திகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவில் அந்தக்குழுவில் இருந்த 8 பேரையும் காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து எவரும் அறிய முடியாத இடத்தில் கொண்டு போய் அடைத்து வைத்துள்ளனர்.

    இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்த மதுரை வக்கீல் சரவணக்குமார், கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகன், மணி, சமயன், அருப்புக்கோட்டை கோவேந்தன், தூத்துக்குடி வன்னி பெருமாள் ஆகிய எட்டு பேரும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினர் யாரைக் கைது செய்தாலும் உடனடியாக அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு, வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்க வேண்டியது கடமை ஆகும்.

    நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காவல்துறையின் ஜனநாயக விரோதமான அடக்குமுறைக்கு ம.தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விக்கிரவாண்டியில் சுங்க சாவடி பூட்டை உடைத்தார் என்று பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

    மேலும் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். வேல்முருகன் தொடர்ந்து போராடி வருகிறார் என்பதற்காக அவர் மீது தேச விரோத வழக்கு பதிந்துள்ளனர்.

    ஆட்சி அதிகாரம் இருப்பதால்தான் அ.தி.மு.க.வில் பலர் இருக்கிறார்கள். எதிர்த்து பேசுபவர்கள் மீது இந்த அரசு பொய் வழக்கு போடுகிறது. இது பாசிச போக்காகும். மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×