என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு
    X

    ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

    ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #EdappadiPalanisamy #Sterliteplant #MKStalin
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் விவகாரத்தை மீண்டும் கிளப்பினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

    ‘‘தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை வேண்டாம் என்று ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கோவாவில் இந்த ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மராட்டியத்தில் இந்த ஆலை வெளியேற்றப்பட்டது. எனவே தாமிர உருக்காலை தமிழகத்துக்கு வேண்டாம் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆலைக்கு எதிராக ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அந்த தொகை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது. அந்த நிலையில் இருந்து கூடுதலாக ரூ.80 லட்சம் நிதி வழங்கி உயிர் இழந்தவர்களுக்கு ரூ.1 கோடியாக அறிவிக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விரோதிகள், வி‌ஷ கிருமிகள், பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். இன்னும் போலீசார் வீடு வீடாக சென்று சோதனை நடத்துகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கடந்த 29-ந்தேதி கவன ஈர்ப்பு தீர்மானம் வந்த போது எதிர்க்கட்சி தலைவர் உள்பட உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது நான் 1 மணி நேரத்துக்கும் மேல் விளக்கமாக தெளிவாக எடுத்துச் சொன்னேன். அங்கு என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றன என்பதை விளக்கி புகைப்படங்களையும் இங்கு காண்பித்தேன்.

    இப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சொல்கிறார். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது மட்டுமின்றி அந்த தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை முழுமையாக செல்லும் சட்டவல்லுனர்கள், அரசு வழக்கறிஞர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்து பேசி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த ஆலைக்கு என்னென்ன அனுமதி அரசு சார்பில் கொடுக்கப்பட்டதோ அது ரத்து செய்யப்பட்டு உள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நிலம் கொடுத்தது ரத்து செய்யப்பட்டது.


    இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது.

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பல பேர்களை போலீஸ் தேடுவதாக இங்கு குறிப்பிட்டனர். தூத்துக்குடி சம்பவத்தில் யார்-யார் உருட்டுக்கட்டைகளுடன் தாக்குதல் நடத்தினார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசி பொது சொத்துக்களுக்கு தீ வைத்தார்கள் என்பதெல்லாம் அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ளது.

    பொது மக்கள் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள். வி‌ஷமிகள், சமூக விரோதிகள் தான் இம்மாதிரியான காரியங்களில் ஈடுபடுவார்கள். எனவே மக்கள் போராடுவதற்கு தடை கிடையாது. அம்மா ஆட்சி காலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தியாவில் அதிக அளவில் போராட்டங்கள் நடந்த மாநிலம் தமிழ்நாடு தான். அந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு கட்சியினரும் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது எங்கேயாவது உருட்டு கட்டைகளை எடுத்துச் சென்றோமா? தூத்துக்குடியில் ஒரு காரை உடைத்து பெட்ரோல் குண்டு போடுகிறார்கள். உருட்டு கட்டைகளை எடுத்து அடிக்கிறார்கள். இவர்களைத்தான் சமூக விரோதிகள் என்று சித்தரிக்கிறோமே தவிர பொது மக்களை அல்ல. எனவே சமூக விரோதிகளை ஊக்கப்படுத்தக்கூடாது.

    பொதுச்சொத்துக்கு தீ வைத்தவர்கள், உருட்டு கட்டையால் தாக்கியவர்கள், யார்-யார் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதை கண்டறிந்து தக்க ஆதாரம் இருந்தால்தான் கைது செய்கிறார்கள். பொது மக்கள் யாரையும் கைது செய்யவில்லை. அதற்கு அரசும் அனுமதிக்காது.

    இப்போது விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிபதியிடம் தகுந்த ஆதாரங்களை அளிக்கலாம். நீதி விசாரணை முடிந்த பிறகு நீதிபதி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.


    மு.க.ஸ்டாலின்:- முதல்- அமைச்சரின் விளக்கத்துக்கு நன்றி. உருட்டுக்கட்டை பற்றி முதல்-அமைச்சர் கூறினார். அங்கு போலீசார் மப்டியில் போலீஸ் வேனில் படுத்துக் கொண்டு சுடுவது போன்று புகைப்படம் வந்துள்ளது. அதுவும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஸ்டெர்லைட்டை மூடியதாக அறிவித்தாலும், அவர்கள் நீதிமன்றம் போக வாய்ப்பு உள்ளது. எனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன் வருமா?

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:- ஸ்டெர்லைட் பிரச்சனையில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. எனவே சட்டம் இருக்கும் போது மீண்டும் ஒரு சட்டம் தேவையில்லை. எந்த நீதிமன்றம் என்றாலும் தமிழ்நாட்டின் சட்டத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் சட்டசபையில் தீர்மானம் தேவையில்லை.

    மு.க.ஸ்டாலின்:- தி.மு.க. ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் நீதிமன்றம் சென்று தடை வாங்கி உள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஒரு ஆலை தொடங்கும் போது விதிமுறைகளை வகுத்து கொடுக்கிறோம். விதியை மீறும் போது அதை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை என்னென்ன விதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். பல விதிமீறல் நடந்துள்ளதால் அதை சுட்டிக் காட்டி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம்:- இந்தப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றாலும் நாங்கள் கேவியட் மனு போட்டு இருக்கிறோம்.

    அமைச்சர் சி.வி.சண்முகம்:- ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூட தீர்மானம் போட்டோம். ஆனால் அது ஏற்கப்படாமல் விடுதலை செய்ய மறுக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #EdappadiPalanisamy #Sterliteplant #MKStalin
    Next Story
    ×