செய்திகள்
மெஹபூபா, உமர் அப்துல்லா

காஷ்மீர்: மெஹபூபா, உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் கைது

Published On 2019-08-06 02:21 GMT   |   Update On 2019-08-06 02:21 GMT
காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரிகள் மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு :

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முன்பே காஷ்மீரில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை பரூக் அப்துல்லா வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்தனர்.

அன்று இரவே முன்னாள் முதல்-மந்திரிகளான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் நேற்று கூறும்போது, மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

அதேபோல ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சி தலைவர்கள் சஜ்ஜத் லோன், இம்ரான் அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதற்கான காரணம் உள்ளிட்ட பல விவரங்களை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
Tags:    

Similar News