இந்தியா

ஓ.பி.சி. சான்றிதழ் ரத்து: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா

Published On 2024-05-23 08:48 GMT   |   Update On 2024-05-23 08:48 GMT
  • கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை கொல்கத்தா ஐகோர்ட் ரத்துசெய்தது.
  • ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்றார் மம்தா பானர்ஜி.

கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்துசெய்து உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட், 1993-ம் ஆண்டு சட்டத்தின்படி ஓ.பி.சி. புதிய பட்டியலை தயாரிக்குமாறு மேற்குவங்காள மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அம்மாநிலத்தில் 5 லட்சம் ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என கூறிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், நான் நீதித்துறையை மதிக்கிறேன். இந்த உத்தரவை பிறப்பித்தவரின் தீர்ப்பை நான் ஏற்கவில்லை; அதை ஏற்கமாட்டேன். ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன். அவர்களுக்கு என்னை தெரியாது. நான் அவர்களின் விருப்பத்துக்கு தலைவணங்குபவள் அல்ல.

சட்டப்படி ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். நாங்கள் ஆய்வுகளை நடத்தினோம். பல அறிக்கைகளை சமர்ப்பித்த குழுவின் தலைவராக உபென் பிஸ்வாஸ் இருந்தார். அப்போதும் கூட இந்த விஷயத்தில் கோர்ட்டில் வழக்குகள் இருந்தன. ஆனால் மேல்முறையீடு செய்தவர்கள் அந்த வழக்குகளில் தோல்வி அடைந்தனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News