செய்திகள்

காவிரி போராட்டத்தை முடக்க நினைத்தால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Published On 2018-04-13 10:34 GMT   |   Update On 2018-04-13 10:34 GMT
காவிரி போராட்டத்தை முடக்க நினைத்தால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் காவிரிப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்று உள்ளார். பிரதமர் கலந்து கொண்ட விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ காவிரி பிரச்சினை குறித்து எதுவும் பேசாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியை தவிர்ப்பதற்காகவே இருவரும் துரோகம் இழைத்து விட்டனர். விமானம் ஏறும்போது கடிதம் கொடுத்தது கண் துடைப்பு நாடகம்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கொலை முயற்சி வழக்குபதிவு செய்து கைது செய்ய முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக ஆவேசமடைந்த இளைஞர் ஒருவர், போலீசாரை கையால் தாக்கியது வீடியோவில் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சீமான் உள்ளிட்ட பலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளது தவறான முன்னுதாரணமாகும். காவல்துறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

எனவே உடனடியாக முதல்-அமைச்சர், காவல் துறை தலைவர் ஆகியோர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வழக்கை திரும்ப பெறவேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதிரான போராட்டத்தில் களமிறங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News