தமிழ்நாடு

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2024-05-23 05:57 GMT   |   Update On 2024-05-23 05:57 GMT
  • கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
  • கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் கொடிவேரி அணைக்கு வருவார்கள்.

இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

மேலும் கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதேபோல் பவானி ஆற்று பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டுகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் அதிகளவில் தண்ணீர் கொட்டி செல்கிறது. இதனால் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியிலேயே தடுப்புகள் வைக்கப்பட்டு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் தடுப்பணையில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கொடிவேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எழுதப்பட்டு உள்ளது.

இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த வழியாக வருபவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைத்து வருகிறார்கள்.

இதை பற்றி தகவல் அறியாததால் இன்று காலை பொதுமக்கள் பலர் வந்திருந்திருந்தனர். தடை விதிக்கப்பட்டு தடுப்பணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் மற்றும் அணை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News