தமிழ்நாடு

ரவுடி கொலையில் மேலும் 7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2024-05-23 05:47 GMT   |   Update On 2024-05-23 05:47 GMT
  • ஒருவர் தீபக்ராஜா கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்பதும், மற்ற 4 பேரும் சம்பவத்திற்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
  • பிடிபட்ட 5 பேரையும் தனிப்படையினர் தனித்தனியாக அழைத்து சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இவர் கடந்த 20-ந்தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரது தோழிகளுடன் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தபோது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் நாங்குநேரி மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா இன்று 2-வது நாளாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்.

அதில் ஒருவர் தீபக்ராஜா கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர் என்பதும், மற்ற 4 பேரும் சம்பவத்திற்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டார்களா? இதில் பின்னால் இருந்து இயக்கிய முக்கிய புள்ளிகள் யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரையிலான விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் முருகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாகவே இந்த கொலை சம்பவத்தை கும்பல் நிகழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் பல்வேறு கேள்விகளுக்கு முழுமையாக விடை கிடைக்காத நிலையில், வேறு சில கோணங்களிலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 12 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் மேலும் 7 பேர் கும்பலை தனிப்படையினர் தேடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து இந்த கொலையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட 5 பேரையும் தனிப்படையினர் தனித்தனியாக அழைத்து சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை முழுவதுமாக கைது செய்த பின்னரே தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று 4-வது நாளாக அவர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News