தமிழ்நாடு

நெல்லையில் குருவாயூர் ரெயிலில் மோதல்: மதுபோதையில் இருந்த கேரள நடன கலைஞர்களிடம் விசாரணை

Published On 2024-05-23 05:59 GMT   |   Update On 2024-05-23 05:59 GMT
  • போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
  • சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

நெல்லை:

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை சென்னையில் இருந்து வழக்கம் போல் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு ரெயில் வந்தபோது அந்த முன்பதிவில்லாத பெட்டியில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சிலர் அதில் ஏறியுள்ளனர். அப்போது அவர்களுக்கும், ரெயிலில் ஏற்கனவே பயணித்த கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து 9 மணி அளவில் மீண்டும் புறப்பட்டது. அப்போது அவர்கள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் நெல்லை மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வந்ததும், ரெயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள்.

அதில் 2 வாலிபர், 2 இளம்பெண்கள் ஆகியோரும் திருச்சூரை சேர்ந்த நடன கலைஞர்கள் என்பதும், அவர்கள் கோவில்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுபோதையில் சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் ரெயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News