தமிழ்நாடு செய்திகள்

விபி-ஜி ராம் ஜி திட்டம் - தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

Published On 2025-12-19 08:27 IST   |   Update On 2025-12-19 08:27:00 IST
  • தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.
  • குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் 100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதோடு, இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் இதர அம்சங்கள், இந்த திட்டத்தையே முடக்கி போட்டு விடும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உதாரணமாக முன்பு இந்த திட்டத்தில் இந்த திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதும் மத்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில் சொத்துகளை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசின் பங்கு 25 சதவீதமூம் இருந்தது.

ஆனால் புதிய திட்டத்தில் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் இருக்கும். இது மாநிலங்களுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மிக அதிக பாதிப்பு ஏற்பட உள்ளது. ஏனென்றால் இந்தியாவிலேயே, இந்த திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.தமிழ்நாட்டில், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய மொத்தம் 88 லட்சத்து 56 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையை விட பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதிகம் நிதி பெறுவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.

தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். ஆனால் அதே மதிப்பில் இந்த திட்டத்தை வரும் ஆண்டிலும் தமிழக அரசு செயல்படுத்தினால், அதாவது குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி தமிழக அரசு ஒதுக்க வேண்டி வரும். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் ஒதுக்க முடியாது. எனவே இந்த திட்டத்தின் செலவை குறைக்க மாநில அரசு முற்படும். அப்படி செய்தால் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். இது தவிர இந்த புதிய திட்டத்தால் தமிழக அரசுக்கு ஏற்படும் மற்ற பாதிப்புகள் விவரம் வருமாறு:-

* பழைய திட்டத்தில் தமிழக அரசு, ஒரு நிதியாண்டிற்கு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்த போகிறோம் என்று கூறி மத்திய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுப்பார்கள். பின்னர் திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தினாலும், அந்த தொகையையும் மத்திய அரசு கொடுத்து விடும். ஆனால் இனி அது போல் நடக்காது. கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவீதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டும்.

* இந்த திட்டத்தின் கீழ் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்தது. ஆனால் இனி மத்திய அரசும் அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.

* முன்பு தமிழக அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால் இனி நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மக்கள்தொகை போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு தான் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.

* கிராமப்புறங்களில் இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை மற்றும் சிமெண்ட் ரோடு ஆகியவற்றுக்கும் 100 நாள் திட்டத்தின் வேலை உழைப்பு நாட்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதற்கான பொருட்கள் செலவில் மத்திய அரசு 75 சதவீதம் வழங்கியது. ஆனால் இனி 60 சதவீதம் தான் வழங்கும். எனவே அதற்கும் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.

Tags:    

Similar News