'பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்' - சீமான்!
- போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
- திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருக்கும் இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
"திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருகின்றது. திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியதாகும்.
முதலிபாளையம், காளாம்பாளையம், சிறுபூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் ஆகிய பகுதியில் கைவிடப்பட்ட கல் குவாரியில் கொட்டிய குப்பையை அகற்றாமல் தற்போது இடுவாயில் புதிய குப்பைக் கிடங்கு அமைத்து மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிரிக்கப்படாதக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது துளியும் பொறுப்பின்றி செயல்படும் ஆட்சிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குப்பையைத் தொடக்கத்திலேயே பிரிக்காமல், அறிவியல் அடிப்படையில் அகற்றாமல் கிராமங்களைக் குப்பைத் தொட்டியாக மாற்றும் பணியைத் திமுக அரசு செய்து வருகிறது .
அரசின் இந்த செயலால் திருப்பூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகளான அனுப்புர்பாளையம் சாலை, காந்தி நகர், வேலம்பாளையம், அங்கேரிபாளையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு மிகவும் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் திருப்பூர் நகரின் முதன்மைப் பகுதியான நொய்யல் ஆற்றங்கரையோரம் அனைத்துக் குப்பைகளையும் கொட்டி, அதனைத் தீயிட்டுக் கொளுத்திக் காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாட்டினை அரசே ஏற்படுத்தி வருகின்றது.
இடுவாய் கிராமத்தில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் மற்றும் சுற்றியுள்ள 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இடுவாய் சின்ன காளிபாளையத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல் துறை தனது அடக்குமுறையால் பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கைது செய்து அடைத்துவைத்து குப்பையை மக்களுக்கு தெரியாமல் கொட்டும் செயலை செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காலையில் கைது செய்து பின்னர் இரவு நேரங்களில் விடுவித்து, பிறகு மீண்டும் கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் பின்பற்றாமல், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறியாமல் அவர்களின் உடல் நலன் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாகத் தனது தவறுகளை சரி செய்து கழிவு மேலாண்மை விதிகளை முழுவதுமாக செயல்படுத்திட வேண்டும். இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.